December 8, 2021

இளையராஜாவின் பாடலுக்கான காப்புரிமை – புதிய அறிவிப்பு!

என் பாடல்களை பாட விரும்புகிற இசைக் கலைஞர்கள் முன் அனுமதி பெற்று பாடுவதே முறையாகும். இல்லையென்றால், சட்டப்படி குற்றமாகும். மேலும் இதுவரை என் சார்பாக வசூலித்து கொண்டிருந்த ராயல்டி தொகையை, இனி தென்னிந்திய திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் வசூலிக்கும். இதற்கான உரிமையை அச்சங்கத்துக்கு வழங்கியிருக்கிறேன். என்று
இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “இசைக்கலைஞர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு. என்னுடைய முன் அனுமதி பெறாமல், என் பாடல்களை பாட விரும்புகிற இசைக் கலைஞர்கள் என்னிடம் முன் அனுமதி பெற்று, பாடுவதுதான் முறையானதாகும். இல்லை யென்றால், சட்டப்படி குற்றமாகும். என்னிடம் முன் அனுமதி பெறாமல் பாடுவதும், வாசிப்பதும் தவறு என்பதை இசைக் கலைஞர்கள் உணர வேண்டும். அப்படிச் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை ஐபிஆர்எஸ் அமைப்பில் நான் உறுப்பினராக இருந்தேன். இப்போது உறுப்பினராக இல்லாத காரணத்தால், இதுவரை என் சார்பாக வசூலித்து கொண்டிருந்த ராயல்டி தொகையை, நமது தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்துக்கு அந்த உரிமையை நான் வழங்கியிருக்கிறேன்.

ஐபிஆர்எஸ்க்கு பதிலாக இசைக் கலைஞர்கள் சங்கம், இந்த ராயல்டி தொகையை வசூலித்துக் கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பாடகர்கள், பாடகிகள் உள்ளிட்ட இசைக் கலைஞர் கள் இதில் அடங்குவார்கள். யாரும் பாடுவதற்கு நான் இடைஞ்சல் செய்யவில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். பணம் வாங்கிக் கொண்டுதான் நீங்களும் இசை நிகழ்ச்சி களை நடத்துகிறீர்கள். என் பாடலை பாடுபவர்கள் பணம் வாங்குகிறார்கள். அதில் எனக்குப் பங்கு இல்லையா? பாடலே என்னுடையது என்கிற போது பங்கு எப்படி இல்லாமல் போகும். பங்கு என்பது சிறிய தொகைதான். அதைக் கூட பெயருக்குத்தான் கேட்கிறேன். நாளைய தலைமுறைக்கு இது சரியான நடவடிக்கையாக இருக்கும். முன்னோடி நடவடிக்கையாகவும் இருக்கும். அதில் அடியெடுத்து வைத்தவன் நான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார் இளையராஜா.

இதுயடுத்து இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பிலான ஒரு அறிக்கையில், “பாடல்களின் காப்புரிமையைக் காக்கும் பணியையும், நெறிப்படுத்தும் பணியையும் இசைக் கலைஞர்கள் சங்கத்துக்கு தந்து, அதில் வரும் தொகையை இசைக் கலைஞர்கள் பெறுவதும் இதுவே முதல் முறை. இந்த நிதி உறுப்பினர்களின் சேமநல நிதிக்கும், உறுப்பினர்களின் கருணைத் தொகைக்கும் மட்டுமே சென்றடையும். இளையராஜா இந்தப் பெரிய சேவையை அளித்ததில் இசைக் கலைஞர் கள் சங்கம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது”என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நன்கொடை நிகழ்ச்சி நடத்தி அதன் வருவாயை திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்திற்கு இளையராஜா வழங்க உள்ளதாகவும் சங்கத்தலைவர் தீனா தெரிவித்துள்ளார்.