March 22, 2023

இளையராஜா தனக்கு இசை மட்டுமே தெரியும் என்று பலமுறை ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவராக்கும்!

புளு கிராஃப் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள “மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும், செயல்வீரரின் நடவடிக்கையும்” என்ற புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.

அதில் அவர் ‘நதிநீர் மற்றும் பாசனம் தொடர்பான கொள்கை முடிவுகளை வகுத்தளித்தவர் டாக்டர் அம்பேத்கர் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 2016ல் முதலீட்டாளர் மாநாட்டிலும் மோடி இதனை குறிப்பிட்டுள்ளார். பாபாசாகேப் அம்பேத்கரை தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. அவருடைய மதிப்பை அறிந்து, அவருடைய கருத்தை நடைமுறைப்படுத்துபவர்களை ஊக்குவிக்க வேண்டும். இந்த புத்தகம், பிரதமர் மோடி தலைமையில் பாரதத்தின் வளர்ச்சி பாதையில் தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் என அம்பேத்கரின் கருத்தும் சிந்தையும் சந்திக்கும் இடத்தை ஆய்வு செய்கிறது. பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பல சாதனைகளை படைத்துள்ளது. சாலைகள், மெட்ரோ ரயில் போன்ற உலகத் தரமான உட்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.

முத்தலாக் தடை சட்டத்தால் முஸ்லிம் பெண்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை மோடி ஏற்படுத்தியுள்ளார். சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு சட்டப் பாதுகாப்பு, ஏழைகளுக்கு வீடு, கழிப்பிடங்கள் கட்டிக்கொடுப்பது என மக்களின் வாழ்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். பெண்களின் திருமண வயதை உயர்த்துவதால் பெண்கள் படிக்க முடியும். இலவச எரிவாயு திட்டம், குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை பாகாப்பு, குழந்தைகளுக்கு கற்பிப்போம், தற்சார்பு இந்தியா என அம்பேத்கரும் நரேந்திர மோடியும் ஒன்றுபடும் இடங்களை இந்த புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

இருவருமே ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள். அதை ஒழிக்க பாடுபட்டவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். விடுதலைப் போராட்ட வீரர்கள் கனவு கண்டபடி புதிய இந்தியா எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதை தெரிவிக்கும் இப்புத்தகத்தை இளம் தலைமுறையினருக்கு நான் பரிந்துரைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். – இது பலத் தரப்பிலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சோசியல் மீடியாகளில் இளையராஜாவை மகா மட்டமாகத் திட்டி ட்ரெண்டிங் எல்லாம் ஆனது.. இச்சூழலில் ராஜா குறித்து ஒரு பகிர்வு இதோ:

ளையராஜாவின் வாழ்க்கை என்பது எந்த ஒரு துறையிலும் கனவுகளோடு சாதனைகள் செய்யக் காத்திருக்கும். இளைஞர் களுக்கான மிகப்பெரிய பாடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால், அவருடைய வாழ்க்கையைப் பற்றிய புரிதல், நுட்பமான அரசியல் அறிவு என்பது சமூக அரசியல் தளத்தில் இயங்கும் எந்த மனிதருக்கும் ஏற்புடையதல்ல, மேடைகளில் அவருடைய உரையாடல் வரலாறே கூட சொன்னதையே திரும்பச் சொல்லும் பண்புடையது, பல மேடைகளில் திரும்பத் திரும்ப ஒரே நிகழ்வை அவர் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம், அதே முகபாவனையோடும், நாடகத்தன்மையோடும் அவர் அப்படிப் பேசுவது சலிப்பாகக் கூட இருக்கும். ஆனால், அதுதான் அவருடைய இயல்பு, அவருக்கு இருக்கும் அனுபவத்தில் அன்றாடம் பல்வேறு நிகழ்வுகளை சுவாரசியமாக விளக்க முடியும், ஆனால், அவருக்கு அப்படி செய்ய வராது.

கம்யூனிச தத்துவத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட, கம்யூனிச மேடைகளில் பாக்களை இயற்றி முழங்கிய பாவலர் வரதராசனின் கீழாகப் பணியாற்றிய வாய்ப்பிருந்தும் கம்யூனிச சித்தாந்தங்கள் மீது எந்தப் பிடிப்பும் இன்றி, இசையமைப்பது, பாடல்கள் இயற்றுவது, இசைக்கருவிகளை மீட்டுவது என்று இளம் பருவத்திலேயே முழுமையாக இசைக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட மனிதராகத்தான் அவரது வாழ்க்கை இருந்திருக்கிறது. சென்னைக்குப் புலம் பெயர்ந்த பிறகு அவர் சந்தித்த வாழ்க்கைப் போராட்டங்கள், இசையுலகில் நிலைகொண்டிருந்த ஆளுமைகள், அவருக்கு வாய்ப்புகளை வழங்கியவர்கள் என்று எல்லாமே வேறொரு தளத்தில் இருந்தது.

வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் குறிப்பிட்ட சமூகத்தின் பிடியில் இருந்த தமிழ் திரையிசையை எளிய மனிதர்களுக்கான நாட்டுப்புற இசையாக மாற்றும் ஒரு மிகப்பெரிய பயணத்தில் அவருடைய உளவியல் அவரைச் சுற்றி இருந்த ஆன்மீகத் தத்துவங்களை உள்வாங்கியபடி உழைப்பு, திறன்கள் மற்றும் பயிற்சி போன்ற மானுடவியல் தத்துவங்களைத் தாண்டி ஊழ்வினை, கடவுளரின் ஆசி, மனித உடலை, மனித மனதை இயக்கும் மாய உலகம் என்று தடம் மாறி நிலை பெற்றது. தன்னைக் குறித்த பெருமைகளை, தனது சாதனைகளை எப்போதும் உளமார விரும்பும் இளையராஜா, தன்னைத்தாண்டி ஏதோ ஒரு மாய ஆற்றல் தன்னை இயக்குவதாகச் சொல்லும் ஒரு தத்துவத்தை தனது அடையாளமாக மாற்ற முயற்சித்தார், அது எளிய ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து புரட்சிகரமான அரசியல் பேசியபடி இசை உலகில் சாதிக்க நினைத்த மனிதர்களை விட மிக எளிதாக அவரது இயக்கத்தை ஆதரித்தது.

ஆன்மீக மடங்கள், ஆன்மீக தத்துவங்களை பேசுகிற எந்தத் துறை சார்ந்த சாதனையாளர்களையும் இந்த ஆன்மீக ஆற்றல்கள் தங்கள் வசப்படுத்துவது இயல்பாகவே நடக்கிறது, ஏனெனில், அதிகாரத்தை நோக்கிய பயணத்தில் அதற்கான தேவை அதிகம், குறிப்பாக இந்துத்துவ அதிகார மையங்கள், தங்கள் ஆட்சி அதிகாரத்துக்கான மிகப்பெரிய கருவியாக ஆன்மீகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது நுட்பமாக பல்வேறு தளங்களில் நிகழ்ந்து வருகிறது, மேலோட்டமாகப் பார்க்கும் போது தனிமனிதர்களின் ஆன்மீக ஈடுபாடு என்று தோற்றம் கொண்டாலும், இதற்குப் பின்னிருக்கும் சமூக இயங்கியல் என்பது வெகு நுட்பமாக இயங்கக் கூடியது.

பல்வேறு நிகழ்த்துக் கலைகள், இலக்கியம், சினிமா, ஓவியம் என்று எல்லாத் தளங்களிலும் ஆன்மீகத் தொடர்பு என்பதை ஒரு செயல்திட்டமாகவே வைத்திருக்கிறார்கள். அதுசார்ந்த பல்வேறு துறைகளில் எங்காவது ஒரு இடத்தில் மட்டுறுத்தும் அதிகாரத்தை தொடர்ந்து குறிப்பிட்ட சமூகத்தின் உறுப்பினர்கள் ஒரு மறை நிழல் போலத் தங்கள் இயக்கத்தை நிகழ்த்திக் காட்டுகிறார்கள், இது ஒரு மிகப்பெரிய சங்கிலியாகவே செயல்படுகிறது. இந்த செயல்திட்டங்களின் பிடியில் பல்வேறு துறைசார்ந்த ஆளுமைகள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள், தமிழகத்தைப் பொறுத்தவரை இதற்கான சரியான உதாரணம் ரஜினிகாந்த், ஆன்மிகம், மடங்கள், நம்மை மீறிய மாய உலகம் என்று அவர் பேசும் நிரலுக்கும், இளையாராஜா பேசும் நிரலுக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதை நம்மால் கவனிக்க முடியும். இவர்களால் இதைத்தாண்டி யோசிக்க இயலாதபடி ஒரு நெருக்கமான வலை பின்னப்பட்டிருக்கிறது, அந்த வலை வெறும் சமூக வலை மட்டுமல்ல.

பொருளாதாரம், அரசியல் மற்றும் உளவியல் அழுத்தங்களைத் தரக்கூடிய வலை அது. இளையராஜாவுக்கும், ரஜினிகாந்துக்கும் கிடைத்திருக்கிற பல்வேறு பத்ம விருதுகளுக்குப் பின்னால் அந்த வலையின் நீட்சி இருக்கிறது. “பாரத ரத்னா” போன்ற விருதுகளை மையமாக வைத்து, இன்றைய இந்துத்துவ அரசியலின் போக்கை வலிமையாக்கும் முயற்சியின் ஒரு சிறு பகுதியாகவே இளையராஜா மோடியையும், காந்தியையும் ஒப்பிட்டுப் பேசுவது போன்ற நகைமுரண்கள் நிகழ்கிறது.

அப்படியானால், இளையராஜா இதற்கு காரணம் இல்லையா என்றொரு கேள்வியை நீங்கள் முன்வைத்தால், என்னுடைய பதில், இளையராஜாவுக்கு இசையைத் தவிர வேறெந்த உலகமும் தெரியாது, இளையராஜாவுக்கு மனிதர்களோடு இயல்பாக உரையாடும் ஆற்றல் கூட இல்லை, அவரது அரசியல் புரிதல்கள், சமூகப் புரிதல்கள் அவர் நம்புகிற மாயத்தோற்றத்தோடு நேரடித் தொடர்பு கொண்டவை, ஆனால், அதற்கான உரிமை அவருக்கு உண்டு, அவரது இசையைத் தவிர வேறெதையும் நாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடு.

இளையராஜாவின் உளவியலில் இருக்கும் ஆன்மீக அரசியலை நம்மால் விமர்சனங்களால், சுட்டுதல்களால் நீக்க முடியும் என்று உறுதியாகத் தோன்றவில்லை, அவர் வயதிலும், அனுபவத்திலும், அங்கீகாரத்திலும், பொருளாதாரத்திலும் அந்த நிலைகளைக் கடந்து விட்டார், இனி எப்போதாவது தான் கிளம்பிய எளிய உழைக்கும் ஒடுக்கப்பட்ட மண்ணின், மக்களின் மீதான கரிசனத்தை தாய் மூகாம்பிகையும், ரமண மகரிஷியும் அவருக்குக் காட்டினால் மட்டுமே உண்டு. அதுவரைக்கும், அவருடைய இந்துத்துவப் புகழ்பாடும், மோடி புகழ் பாடும் முன்னுரைகளைப் புறக்கணித்துவிட்டு அவருடைய வயலினில் இருந்தோ, புல்லாங்குழலில் இருந்தோ புறப்படும் மெல்லிய மனதை வருடும் இசையை ரசிப்பது மட்டுமே நம்முடைய உளவியலுக்கு உகந்தது.

“இசையைத் தவிர எனக்கு வேறொன்றும் தெரியாது” என்று பலமுறை அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

கை.அறிவழகன்