October 2, 2022

சென்னை ஐஐடியில் – பி.டெக். படித்தால் ஒரே நேரத்தில் இரட்டைப் பட்டம்!

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (ஐ.ஐ.டி- சென்னை, Indian Institute of Technology Madras) ) தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். இந்திய அரசினால் தேசிய இன்றியமையாக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும். 1959ஆம் ஆண்டு அப்போதைய மேற்கு செருமனி அரசின் பணஉதவி மற்றும் நுட்ப உதவியுடன் இது நிறுவப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் ஆணையால் நிறுவப்பட்ட மற்றும் நாட்டின் இன்றியமையாத கல்விக்க ழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல் மற்றும் நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட பதினைந்து தன்னாட்சி வழங்கப்பட்ட தொழில்நுட்ப கழகங்களில் மூன்றாவதாக நிறுவப்பட்டது. அப்பேர்பட்ட இக்கல்லூரியில் பி.டெக். இளநிலை பட்ட மாணவர்களும் இரண்டு பட்டங்களை ஒரே நேரத்தில் பெறும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

சென்னை ஐஐடியில் 5 ஆண்டுகள் கொண்ட பி.டெக். மற்றும் எம்.டெக். இரட்டைப் பட்டம் ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த இரட்டைப் பட்டப்படிப்பு இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் இரண்டிலும் ஒரே துறை சார்ந்த படிப்பாகவே இருக்கிறது. இந்நிலையில் பி.டெக். இளநிலை படிப்புடன் தொடர்புடைய வேறு துறை சார்ந்த எம்.டெக். படிப்பை தேர்வுசெய்து படிக்கும் வசதியுடன் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.டெக். மற்றும் எம்.டெக். இரட்டைப் பட்டப்படிப்பு திட்டத்தை சென்னை ஐஐடி நடப்பு ஆண்டு முதல் அறிமுகம் செய்கிறது.

ஏற்கெனவே இரட்டைப் பட்டப்படிப்பில் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாமல், 4 ஆண்டுகள் பி.டெக். படிப்புகளில் சேர்ந்த மாணவர்களும் இதில் இணைய முடியும். ஆனால், அவர்கள் ஐந்தாவது பருவத்தின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த மதிப்பெண் சராசரி (சி.ஜி.பி.ஏ.) 8 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.