பினாமி சொத்து பற்றி தகவல் தந்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு!

பினாமி சொத்து பற்றி தகவல் தந்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு!

கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி பினாமி பரிமாற்ற தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு நாடு முழுவதும் இந்த சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில், வேறொருவர் பெயரில் இருந்த அல்லது வேறொருவருக்கு உரிமை அளித்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், பினாமி சொத்துக்கள் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மத்திய நேரடி வரிகள் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பினாமி சொத்துகளை கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு உதவும் வகையில் தகவல்கள் தேவைப்படுகின்றன.  எனவே, பினாமி சொத்துகள் பற்றி தகவல் தருவோருக்கு குறைந்தப்பட்சம் ரூ.15 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பரிசு வழங்க திட்டமிட்டுள்ளோம். தகவல்கள் மிக சரியானதாக இருக்க வேண்டும். தகவல் தருபவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். எந்த ஒரு  சூழ்நிலையிலும் வெளியிடப்பட மாட்டாது. தகவல் தருவோருக்கு பரிசு தரும் நடைமுறை வருமான வரித்துறை மற்றும் புலனாய்வு இயக்குநரகங்களில் உள்ளது. தற்போது, பினாமி சொத்து விஷயத்திலும் இதை கடைப்பிடிக்க உள்ளோம். பினாமி சொத்துகளை கண்டறிவது அவ்வளவு எளிதானதல்ல. யாரேனும் தகவல் அளித்தால் மட்டுமே இதன் நோக்கம் நிறைவேறும். பரிசு திட்டம் நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்த பிறகு இறுதி ஒப்புதலுக்காக நிதியமைச்சருக்கு அனுப்பப்படும். அதன்பிறகு மத்திய நேரடி வரி வாரியம் பரிசு திட்டத்தை அறிவிக்கும். அக்டோபர் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். பினாமி சட்டம் அமல்படுத்திய பிறகு கடந்த 9 மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 381 சொத்துகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1,353.38 கோடி.

தமிழகம் முதலிடம்

பினாமி சட்டத்தின் கீழ் கடந்த 9 மாதங்களில் அதிக சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும், குஜராத்தும் முதலிடத்தில் உள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட 381 சொத்துகளில் 66 சொத்துகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இதன் மொத்த மதிப்பு வெளியிடப்படவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் 62 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் ரூ.478 கோடி மதிப்பிலான 28 சொத்துகளும், மும்பையில் 58 சொத்துகளும் (ரூ.336.87 கோடி) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தம்  ரூ.1,353.38 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க்து.

Related Posts

error: Content is protected !!