October 18, 2021

மினி வேர்ல்ட் கப் போட்டி: பாகிஸ்தானை தோற்கடித்தது இந்தியா!

ஐ.சி.சியின் 8 வது சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த மெகா தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட டாப்&8 அணிகள் பங்கேற்கின்றன. பர்மிங்காமில் நேற்று நடந்த நான்காவது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தார். இந்திய அணியில் அஷ்வின், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக், முகமது ஷமி, ரககானே ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் கேப்டன் கோஹ்லி களமிறங்கினார்.

ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்த நிலையில், இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் இருவரும் துவக்கம் தந்தனர். முகமது ஆமிர் முதல் ஓவரை மெய்டினாக வீசி அசத்தினர். இந்திய ஜோடி தொடக்கத்தில் சற்று நிதானமாக விளையாடி வந்தது. பின்னர் ரோகித் சற்று அதிரடியில் இறங்கினார். இவருக்கு தவான் கம்பெனி கொடுத்தார். இந்தியா 9.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 46 ரன் எடுத்த நிலையில், மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. அரைமணி நேரத்திற்குப் பின் மீண்டும் ஆட்டம் துவங்கியது. பொறுப்புடன் விளையாடிய ரோகித் சர்மா 71 பந்தில் அரைசதம் அடித்தார். 19.3 ஓவரில் இந்தியா 100 ரன் கடந்தது. வகாப் ரியாஸ் ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாசிய தவான், 48 பந்தில் அரைசதத்தை பதிவு செய்ய அரங்கமே அதிர்ந்தது. இந்த ஜோடியை பிரிக்க பாக்., பவுலர்கள் திணறினர்.

ஆனாலும் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன் (24.3 ஓவர்) சேர்த்த நிலையில், ஷதாப் கான் அணிக்கு திருப்புமுனை தந்தார். இவரது பந்தில் தவான் 68 ரன் (65 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து பலத்த கரகோஷத்திற்கு இடையே கேப்டன் விராத் கோஹ்லி களம் வந்தார். இந்தியா 33.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்த நிலையில், இரண்டாவது முறையாக மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் ஆட்டம் துவங்கிய போது ஆட்டம் 48 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், ரோகித் சர்மா அதிரடியில் இறங்கினார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ரோகித் 91 ரன் (119 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து பரிதாபமாக ரன் அவுட் ஆனார்.

முக்கிய கட்டத்தில் கோஹ்லியுடன் யுவராஜ் இணைந்தார். தனது வழக்கமான ஆட்டத்தை யுவராஜ் வெளிப்படுத்த ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்து. குறிப்பாக வகாப் ரியாஸ் பந்து வீச்சை யுவராஜ் சிதற அடித்தார். வழக்கம் போல் இந்த முறையும் பாகிஸ்தான் பீல்டிங் சொதப்பலாக இருந்தது. கோஹ்லி, யுவராஜ் இருவர் கொடுத்த கேட்சை கோட்டை விட்டனர். இதைப் பயன்படுத்தி கோஹ்லி 58 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளாசிய யுவராஜ் சிங் 29 பந்தில் அரைசதம் அடிக்க ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். யுவராஜ் 53 ரன் (32 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த நிலையில், ஹசன் அலி வேகத்தில் சரிந்தார். ரசிகர்கள் அ¬னைவரும் தோனி வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அதிரடி நாயகன் ஹர்திக் பாண்ட்யா களமிறக்கப்பட்டார். ஆட்டத்தின் கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் வீசினார். ஆடுகளம் முற்றிலும் பேட்மேன்களுக்கு சாதகமாக இருந்த நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதின் இந்த முடிவு அதிர்ச்சி அளித்தது.

இமாத் வாசிம் வீசிய முதல் பந்தில் பாண்ட்யா சிக்சர் அடிக்க இந்தியா 47.1 ஓவரில் 300 ரன் கடந்தது. தொடர்ந்து அடுத்த இரண்டு பந்தையும் சிக்சர் அடிக்க ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் 6 சிக்சர் அடித்தது போல் பாண்ட்யாவும் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், 4வது பந்தை வீண் செய்த பாண்ட்யா, 5வது பந்தில் ஓரு ரன் எடுத்தார். கடைசி பந்தை சந்தித்த விராத் கோஹ்லி பவுண்டரி விளாச இந்தியா 48 ஓவர் முடிவில் 319 ரன்கள் குவித்தது. விராத் கோஹ்லி 81 (68 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 20 (8 பந்து, 3 சிக்சர்) ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ஷதாப் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முன்னதாக தொடக்கத்தில் இருந்ததே சிறப்பாக பந்து வீசி வந்த ஆமிர் தனது 9வது ஓவரின் போது காலில் காயம் ஏற்பட மைதானம் திரும்பினார். இதே போல் வகாப் ரியாசும் தனது 9வது ஓவரில் காயத்தால் பெவிலயன் திரும்பினர். இதில், ஆமிர் வெளியேறியது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.

கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு அசார் அலி, அகமது ஷேசாத் இருவரும் துவக்கம் தந்தனர். 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 24 ரன் எடுத்த நிலையில், மழைவர ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின் ஆட்டம் துவங்கிய போது பாகிஸ்தான் 41 ஓவரில் 289 ரன் எடுக்க வேண்டும் என இருந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்த நிலையில், புவனேஷ்வர் குமார் பந்தில் அகமது ஷெசாத் (12) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இளம் வீரர் பாபர் ஆசம் (8) உமேஷ் யாதவ் வேகத்தில் சரிந்தார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் சரிந்த போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அசார் அலி 64 பந்தில் அரை சதம் விளாசி அணிக்கு கைகொடுத்தார். இவருக்கு முகமது ஹபீஸ் கம்பெனி கொடுத்தார். இருந்தும் அசார் அலி 50 ரன் (65 பந்து, 6 பவுண்டரி) எடுத்த நிலையில், ஜடேஜா ‘சுழலில்’ சிக்கினார். பின் ஹபீசுடன் அனுபவ வீரர் சோயப் மாலிக் இணைந்தார்.

தொடர்ந்து அசத்திய ஜடேஜா, முகமது ஹபீஸ் (33) விக்கெட்டை வீழ்த்த ஆட்டம் இந்தியா வசம் திரும்பியது. பாண்ட்யா பந்தில் இமாத் வாசிம் (0), கேப்டன் சர்பராஸ் அகமது (15) நடையை கட்ட இந்தியாவின் வெற்றி உறுதியானது. 10 ஓவரில் 135 ரன் தேவை என்ற நிலையில், கைவசம் 3 விக்கெட்டுகளே இருந்தன. உமேஷ் யாதவ் ஒரே ஓவரில் முகமது ஆமிர் (9), ஹசன் அலி (0) விக்கெட்டை வீழ்த்தினார். காயம் காரணமாக வகாப் ரியாஸ் பேட் செய்ய வராததால் பாகிஸ்தான் 33.4 ஓவரில் 164 ரன்னுக்கு ஆட்டமிழந்து பரிதாபமாக தோற்றது. இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3, பாண்ட்யா, ஜடேஜா தலா 2, புவனேஷ்வர் குமார் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார். அடுத்து இந்தியா தனது 2வது லீக் ஆட்டத்தில் இலங்கையுடன் வரும் 8ம் தேதி லண்டனில் மோதுகிறது!