நம்ம நாட்டு விமானி அபி நாளை நாடு திரும்புகிறார்: பாக். பிரதமர் அறிவிப்பு!-வீடியோ!

நம்ம நாட்டு விமானி அபி நாளை நாடு திரும்புகிறார்: பாக். பிரதமர் அறிவிப்பு!-வீடியோ!

நம் நாட்டு வீரர் அபிநந்தனை விடுவிக்குமாறு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அழுத்தம் கொடுத்து வரும் சூழலில் இந்திய விமானி அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்றைக்கு முந்தைய நாள் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானப்படை நேற்று இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.

இதற்கிடையில் பாகிஸ்தான் விமானத்துக்கு மிக் ரக விமானம் மூலம் பதிலடி கொடுத்த இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். அவரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவத்தினர், அவரை விசாரணை செய்வதுபோன்ற வீடியோவை வெளியிட்டனர். இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தனை உடனே இந்தியாவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதை வலியுறுத்தி நெட்டிசன்கள் #BringBackAbhinandan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்தனர்.

பாகிஸ்தானியர்களும், அபிநந்தன் பாதுகாப்பாக இருப்பார் என்று இணையத்தில் அபிநந்தனுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர். இதற்கிடையில், அபிநந்தனை உடனே இந்தியாவிடம் திரும்ப அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியது. இதற்கிடையில், இம்ரான்கானும் இந்தியாவை பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்து வந்தார். இந்தநிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய இம்ரான்கான், ’அமைதிக்கான நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படுகிறார்’ என்று தெரிவித்தார்.

https://twitter.com/aanthaireporter/status/1101093338873192448

 

இந்நிலையில் அபிநந்தன் பாராசூட் மூலம் குதித்த வினாடியிலிருந்து அவர் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்படும் வரை அருகில் இருந்து பார்த்த முஹம்மத் ரசாக் என்பவர் தகவல்களை டான் பத்திரிகைக்கு பேட்டியாக வழங்கியுள்ளார்.

டான் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி இதோ:

ஹொரான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முஹம்மத் ரசாக். ஹொரான் கிராமம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பீம்பர் என்ற மாவட்டத்தை சேர்ந்தது. கடந்த புதன்கிழமை அன்று காலை சுமார் ஒன்பது மணி இருக்கலாம். அப்போது வானத்தில் பலத்த சப்தம் கேட்டது, அதனால் வீட்டுக்கு உள்ளே இருந்து வெளியே வந்து, வானத்தை அண்ணாந்து பார்த்தேன் என்று பேட்டியை ஆரம்பிக்கிறார் முஹம்மத் ரசாக்.

2 விமானங்கள் ஒன்றை ஒன்று சுட்டுக்கொண்டு பறப்பதை காணமுடிந்தது. அப்பொழுது 2 விமானங்களிலும் ஒன்றில் தீப்பற்றிக்கொண்டது. 1 விமானம் எல்லைக்கோட்டைத் தாண்டி பறந்து விட்டது. தீப்பற்றிய விமானம் அப்படியே ஆகாயத்தில் இருந்து மெதுவாக தரை நோக்கி விழுந்து கொண்டிருந்தது. அவ்வாறு பூமியை நோக்கி வந்து கொண்டு இருந்த விமானத்தில் இருந்து பாராசூட் வெளியே வந்து வானில் மிதக்கத் தொடங்கியது. அந்த பாராசூட்டில் மிதந்த படி வந்த விமானி தரையில் குதித்தார். தன்னை மூடிய பாராசூட் துணியை தூக்கி எறிந்துவிட்டு அவர் வெளியே வந்ததை நான் பார்த்தேன். பாகிஸ்தான் மண்ணில் தரை இறங்கும் பொழுது அந்த விமானி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். அவருக்கு எந்த காயமும் இல்லை.

விமானங்கள் சண்டையிடும் பொழுது நான் அதே கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கு போன் செய்து விமானம் ஒன்று விழுந்து விட்டது. அதன் அருகில் போக வேண்டாம். விமானி பாராசூட்டில் இருந்து குதித்து இருப்பதால் அவரை கைது செய்வதற்கு முயற்சி செய்யுங்கள் என்று தகவல் தெரிவித்தேன்.

அதனால் பாராசூட்டில் இருந்து இந்திய விமானி தரை இறங்கிய சில நிமிடங்களில் பாகிஸ்தான் இளைஞர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.தரை இறங்கிய விமானி என்ன சொன்னார்? அவர் நடந்து கொண்டது எப்படி? என்று அந்த இளைஞர்கள் பின்னால் எனக்கு தகவல் தந்தார்கள். அவர்கள் கூறியபடி விமானி தரை இறங்கியதும் இது இந்தியாவா? பாகிஸ்தானா? என்று கேட்டார்.

அந்த இளைஞர்கள் அவரை ஏமாற்றுவதற்காக இந்தப் பகுதி இந்தியா என்று பதில் கூறினார்கள். இந்த கிராமத்தின் பெயர் என்ன என்று அடுத்த கேள்வியை விமானி கேட்டார். இந்த கிராமத்தின் பெயர் குய்லான் என்று அந்த இளைஞர்கள் பதில் கூறினார்கள். அதைத் தொடர்ந்து அந்த விமானி இந்தியாவை வாழ்த்தி சில கோஷங்களை எழுப்பினார்.

அவர் கோஷமிட்டதும் அதைப் பார்த்த பாகிஸ்தான் இளைஞர்களுக்கு ஆத்திரமும் கோபமும் வந்தது. அவர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று எதிர் கோஷம் எழுப்பினார்கள். அதைக் கண்டதும் இந்திய விமானி தன் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த இளைஞர்களை மிரட்டத் தொடங்கினார்.

கிட்டே வராதே, வந்தால் சுட்டு விடுவேன் என்று மிரட்டினார்.

இதனால் கோபம் கொண்ட இளைஞர்கள் கீழே கிடந்த கற்களை எடுத்து அந்த விமானி மீது எறியத் தொடங்கினார்கள். கற்கள் தன்மீது விழத் தொடங்கியதும் அந்த விமானி ஓடத்தொடங்கினார். இளைஞர்கள் தன்னை நெருங்கும் போது, ஆகாயத்தில் 5 அல்லது 6 முறை சுட்டு அவர்களை எச்சரித்தார். அரை கிலோ மீட்டர் தூரம் இந்தியப் பக்கம் ஓடிய அவர் இனிமேல் ஓட முடியாது என்ற நிலையில் அருகில் இருந்த சிறிய பள்ளம் ஒன்றில் குதித்தார் அந்த பள்ளத்தில் தண்ணீர் நிறைய இருந்தது.

தான் வைத்திருந்த சில ஆவணங்களையும் பேப்பர்களையும் எடுத்து தண்ணீரில் அழுத்தினார். சில பேப்பர்களை வாயில் போட்டு நனைத்து விழுங்கி விட்டார் என்று அந்த இளைஞர்கள் கூறினார்கள். அந்த கிராமத்து இளைஞர்கள் தொடர்ந்து அவர் மீது தொடர்ந்து கற்களை வீசினார்கள். பாகிஸ்தான் இளைஞன் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் இந்திய விமானியை காலில் சுட்டான். அதனால் அவருக்கு தப்பி ஓட எந்த வாய்ப்பும் இல்லாமல் போனது. மேலும் கல்வீச்சில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, சரண் அடைவதாக கூறி கொண்டே அந்த பள்ளத்தில் இருந்து இந்திய விமானி எழுந்து நின்றார். இளைஞர்கள் அவரை பிடித்து மேலே இழுத்தனர். கோபம் கொண்ட சில இளைஞர்கள் அவரை கடுமையாக அடித்து விட்டார்கள். ஆனால் அதே நேரத்தில் சில இளைஞர்கள் இந்திய விமானி மீது அடி விழாமல் தடுத்தார்கள். இதற்குள் இந்திய விமானியின் இரு கைகளையும் கயிறால் கட்டி விட்டார்கள்.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் பொழுது பாகிஸ்தான் ராணுவ ஜீப்புகள் அங்கே வந்து சேர்ந்தன. இந்திய விமானியை இறுகக் கட்டி வைத்திருந்த இளைஞர்கள், அவரை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார்கள். நல்லவேளை கோபம் கொண்ட பாகிஸ்தான் இளைஞர் யாராவது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அந்த விமானியை சுட்டுக் கொல்லாமல் விட்டுவிட்டார்கள் என்று என் மனது சொன்னது என்றார் முஹம்மத் ரசாக்.

இந்திய விமானியை ஏற்றிக்கொண்டு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பீம்பர் நகரத்தில் உள்ள ராணுவ மையத்துக்கு கொண்டு சென்றார்கள். வழியில் இருபுறமும் பாகிஸ்தான் மக்கள் கூடிநின்று பாகிஸ்தான் ராணுவத்தை பாராட்டும் கோஷங்களை எழுப்பினார்கள்.

சிலர் ரோஜாப் பூ இதழ்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது வீசினார்கள்.

இவ்வாறு, டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!