அபிநந்தன் பணியிடமாற்றம்: வீர்சக்ரா விருதுக்கு பரிந்துரை?

பாகிஸ்தான் எல்லையில் விழுந்து நொறுங்கிய இந்திய போர் விமானத்தில் இருந்த விங் கமாண்டர் அபினந்தன் வர்தமான், மீண்டும் போர் விமானத்தை இயக்கும் பணியில் விரைவில் இணைய உள்ளார். மேலும்  பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 27ம் தேதி பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி வரலாற்றில் இடம்பெற்ற அபினந்தன், இந்த தாக்குதலின் போது மிக்-21 விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாரால் பாகிஸ்தான் எல்லையில் குதித்து, அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, பிறகு விடுதலையானார்.

பின்னர், கடந்த மாதம் அவருக்கு 4 வார கால மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், அபிநந்தன் பாதுகாப்பு காரணம் கருதி ஸ்ரீநகர் விமானப்படை பிரிவில் இருந்து மேற்கு பிராந்திய விமானப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் நேற்று வெளியாகின. அதோடு, அபிநந்தனை வீர்சக்ரா விருதுக்கு விமானப்படை பரிந்துரைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. போர் காலத்தில் வீர தீர செயல்புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் வீர் சக்ரா விருது, பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ராவுக்கு பிறகான 3வது உயரிய விருதாகும்.