October 27, 2021

எனக்கு ஒண்ணுமே தெரியாது – திரைப்பட தணிக்கைத் துறைப் புது தலைவர்

திரைப்பட தணிக்கையில் கோரப்படும் வெட்டுகள் மற்றும் ஆட்சேபணைகள் பற்றி இயக்குநர்களிட மிருந்து தொடர்ந்து பல புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. எந்தெந்த வார்த்தைகளெல்லாம் தடை செய்யப்படும் என்று வந்த சுற்றறிக்கையும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஜனவரி 2016ல், தணிக்கைத் துறையின் செயல்பாடுகளை மறுசீரமைக்க ஷ்யாம் பெனகல் தலைமையி லான குழு ஒன்று மத்திய அரசால் நியமிக்கப்பட்டது. இதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, விளம்பரப் பட இயக்குநர் பியூஷ் பாண்டே, விமர்சகர் பாவன சோமையா உள்ளிட்டோரும் இருந்தனர். ஏப்ரம் 2016ல் சில இந்தக் குழு தணிக்கையில் வேண்டிய மாற்றங்கள் குறித்து சிலப் பரிந்துரைகளை அளித்தன.

மேலும், முன்னாள் தணிக்கைத் துறை தலைவராக செயல்பட்ட பஹ்லஜ் நிஹலானி சர்ச்சைக்குரிய சில கருத்துகளாலும், செயல்பாடுகளாலும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தார். இதையடுத்து தற்போது மத்திய திரைப்பட தணிக்கைத் துறையின் புதிய தலைவராக, பாடலாசிரியரும், விளம்பரப்பட இயக்குநருமான ப்ரஸூன் ஜோஷி பொறுப்பேற்றுள்ளார். இவர்
ப்ரஸூன் ஜோஷி பாக் மில்கா பாக் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியவர். தாரே ஸமீன் பர், சிட்டகாங்க் ஆகிய படங்களில் பாடல் எழுதியதற்காக தேசிய விருதினைப் பெற்றவர். பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். மேலும் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கான பாடலையும் எழுதியுள்ளார்.

புதிதாக அளிக்கப்பட்டுள்ள பொறுப்பைப் பற்றி ஜோஷி பேசுகையில், “திரைத் துறையில் என்மீது எதிர்பார்ப்புகள் இருப்பதில் எனக்கு சந்தோஷமே. எனக்கு துறை மீதி மதிப்புள்ளது. தணிக்கை செய்கையில், சரியான, நேர்மறையான மக்களின் எண்ணைங்களை கண்டிப்பா எடுத்துக்கொள்ள எப்போதும் முயற்சிப்பேன். எனக்கு தணிக்கை துறை பற்றியோ, அதன் தலைவரான எனது செயல்பாடு பற்றியோ இப்போது எதுவும் தெரியாது. ஆனால் எனக்கு விவேகமுள்ளது. பொறுப்புகள் ஏற்பதில் நம்பிக்கை உள்ளது. நான் எப்போது தன்னம்பிக்கை உடையவனாக இருந்திருக்கிறேன். நமது வேலையை பொறுப்பாக செய்ய வேண்டும். யாரையும் விமர்சிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

எனது அனுபவம் மற்றும் வழிகாட்டுதலைக் கொண்டு, என்னால் முடிந்தவரை சிறப்பாக நான் என் பொறுப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பேன். என்னுடன் இணையும் அனைத்து நல்ல நபர்களும் மாற்றத்தைத் தருவார்கள். எல்லோரும் சேர்ந்துதான் அதை செய்ய வேண்டும். முதலில் அனைவருக்குள்ளும் ஒரு புரிதல் முதலில் வர வேண்டும். அதை ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நடிகைகள் வித்யா பாலன், கவுதமி, ஜீவிதா ராஜசேகர், கதாசிரியர் மிஹிர் புதா, எழுத்தாளர்கள் நரேந்திர கோலி, ரமேஷ் படாங்கே, இயக்குநர்கள் நரேஷ் சந்த்ர லால், விவேக் அக்னிஹோத்ரி, நாகபரணா, இசைக்கலைஞர் நீல் ஹெர்பர்ட், நாடகக் கலைஞர் வாமன் கெண்ட்ரே, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் வாணி த்ரிபாதி உள்ளிட்டோரும் மாற்றியமைக்கபட்ட தணிக்கைத் துறையின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனம் குறித்து பேசிய ஷ்யாம் பெனகல், “ப்ரஸூன் ஜோஷியே ஒரு கலைஞர்தான். உயர் மதிப்புள்ள பாடலாசிரியர். ஊடகங்களையும் அவருக்கு நன்றாகத் தெரியும். இந்தியாவின் சிறந்த விளம்பர நிறுவனத்துக்கு தலைவராக இருந்துள்ளார். ஊடகம், சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகை என அனைத்தையும் புரிந்து வைத்துள்ளார். அவரை விட இந்த பதவிக்கு சிறந்தவர் யார் இருப்பார் என என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.” என்றார்.