March 26, 2023

பழி வாங்கும் நடவடிக்கையாக இதை கருதவில்லை! -ஜெயா டிவி சிஇஒ விவேக் பேட்டி!

கடந்த வாரம் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ததற்கு இணையாக மன்னார்குடி வகை யறாவாவான சசிகலா உறவினர்கள், உதவியாளர்களை குறி வைத்து தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்ற வருமான வரித்துறையின் சோதனை என்னவோ நிறைவடைந்தது. அதே சமயம் விசாரணைக்காக ஜெயா டிவி சிஇஒ விவேக் வருமான வரித் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் நடந்த குறுக்கு விசாரணைக்கு பின்னர் சென்னையில் செய்தியா ளர்களை சந்தித்த ஜெயா டி.வி-யின் சி.இ.ஓ -வான விவேக் ஜெயராமன் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், தவறாக பணம் சேர்க்கும் யாரும் வருமானவரித் துறைக்கு வரி செலுத்தியே ஆகவேண்டும் என்றும் தெரிவித்தார்..

முன்னதாக சசிகலாவுக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான 190 இடங்களில் கடந்த 9ஆம் தேதி அதிகாலை 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் 1800 வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையை ஆரம்பித்தனர். சென்னை, தஞ்சை, நீலகிரி, நாமக்கல், புதுச்சேரி, கடலூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின் முதல் நாளில் ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், போயஸ் கார்டனிலுள்ள பழைய ஜெயா டிவி அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், பீனிக்ஸ் மால், படப்பையிலுள்ள மிடாஸ் மதுபான ஆலை, தினகரனின் பண்ணை வீடு, மன்னார்குடியிலுள்ள திவாகரன் இல்லம், அவரது செங்கமலத்தாயார் கல்லூரி, விவேக், கிருஷ்ணப் பிரியா ஆகியோரின் இல்லங்கள், சசிகலா வழக்கறிஞர் செந்தில்நாதன் இல்லம், கடலூர் ஜோதிடர் சந்திரசேகர் இல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல் நாள் ஆரம்பிக்கப்பட்ட சோதனை இரண்டாவது நாளில் 147 இடங்களாக குறைந்தது.

இதில் வருமான வரித் துறையினரால் அதிகமாகக் குறிவைக்கப்பட்டது, விவேக் சம்பந்தப்பட்ட இடங்கள்தான். ஜெயா டிவி, மகாலிங்கபுரத்திலுள்ள அவரது இல்லம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம் தி.நகரிலுள்ள கிருஷ்ணப் பிரியா இல்லம் என சென்னையில் மட்டும் 12 இடங்களில் இன்றும் சோதனை தொடர்ந்தது. நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இன்று காலை மகாலிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டின் வாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்த விவேக் ஜெயராமன், யாருடைய கேள்விக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார். தான் சொல்வதை மட்டும் சொல்லிவிட்டு திரும்பி சென்றார்.

இதுதான் விவேக் ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியது:

“முதலில் ஐந்து நாள் வருமானவரித் துறை சோதனையின் போது மழையில் காத்திருந்த என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், ஊழியர்கள், ஊடக நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 5 நாட்களாக வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினார்கள். அவர்கள் கேட்ட ஆவணங்களை அளித்தேன். நான் கடந்த இரண்டு வருடமாக ஜாஸ் சினிமாவை கவனித்து வருகிறேன். ஜெயா டிவி நிர்வாகத்தை மார்ச்சிலிருந்து பார்த்து வருகிறேன்.

கடந்த ஐந்து நாட்களாக இது சம்பந்தமான டாக்குமெண்ட்ஸ் குறித்து விபரமாக கேட்டார்கள், அனைத்துக்கும் விபரமாக பதிலளித்துள்ளேன். இதை தவிர்த்து என் மனைவிக்கு கல்யாண நேரத்தில் போட்ட நகைகள் பற்றி கேட்டார்கள். அனைத்துக்கும் அக்கவுண்ட்ஸ் வைத்துள்ளேன், விரைவில் அவர்களுக்கு பதில் சொல்வேன்.

வருமானவரித் துறையினர் அவர்கள் கடமையை செய்தார்கள். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். என்ன செய்தார்கள் என்பதை சொல்கிறேன், நான் இங்கு பேட்டி அளிக்க வரவில்லை அதனால் கேள்வி பதிலாக சொல்ல விரும்பவில்லை. இதை தவிர்த்து சில வாரங்களில் அவர்கள் என்ன கேட்பார்களோ அதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன்”. என்றார்

அப்போது, ’ஐந்து நாளாக என்னதான் சோதனை செய்தார்கள்?’ என்று கேட்டபோது, நான் பேட்டி அளிக்க வரவில்லை என்று தெரிவித்த அவர், அவர்கள் கடமையை அவர்கள் செய்தார்கள் என்று தெரிவித்தார். “அவர்கள் கடமையை அவர்கள் செய்தனர், குடிமகன் என்ற முறையில் என் ஒத்துழைப்பை அளித்தேன், பழி வாங்கும் நடவடிக்கையாக இதை கருதவில்லை. யார் தப்பா பணம் சம்பாதித்தாலும் அவர்கள் வருமான வரித்துறைக்கு வரி செலுத்தியே ஆக வேண்டும். ஆகவே யார் தவறு செய்தாலும் அது நானாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், நீங்களாக இருந்தாலும் அவர்கள் கடமையை ஆற்றியே ஆகவேண்டும். கட்டுப்பட்டே ஆக வேண்டும். கேள்விகளுக்கு பதிலளிப்பது நமது கடமை” என்று கூறிவிட்டு விருட்டென்று வீட்டுக்குள் போய் விட்டார்