இந்தியாவுக்கே வழிகாட்டிய வைக்கம் மண்ணில் நிற்கிறேன் – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

இந்தியாவுக்கே வழிகாட்டிய வைக்கம் மண்ணில் நிற்கிறேன் – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

மார்ச் 30, 1924 அன்று, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற கோயில் நகரத்தில், ஒரு அகிம்சைப் போராட்டம் தொடங்கியது, இந்தப் போராட்டம் நாடு முழுவதும் “கோயில் நுழைவு இயக்கங்களின்” தொடக்கத்தைக் குறிக்கிறது. அந்த நேரத்தில், இந்தியா முழுவதும் சாதிப் பாகுபாடு மற்றும் தீண்டாமை பரவலாக இருந்தது, அதேநேரம் திருவிதாங்கூரில் சில கடுமையான மற்றும் மனிதாபிமானமற்ற விதிமுறைகள் இருந்ததாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஈழவர்கள் மற்றும் புலையர்கள் போன்ற தாழ்த்தப்பட்ட சாதியினர் தீண்டத்தகாதவர்களாகக் (மாசுப்படுத்துபவர்கள்) கருதப்பட்டனர் மற்றும் உயர் சாதியினரிடமிருந்து அவர்களை விலக்கி வைக்க பல்வேறு விதிகள் நடைமுறையில் இருந்தன. கோவில் பிரவேசம் மட்டுமின்றி, கோவில்களைச் சுற்றியுள்ள சாலைகளில் நடக்கவும் தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து வைக்கம் சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் எழும் தேசியவாத உணர்வு மற்றும் கிளர்ச்சிகளுக்கு மத்தியில், இந்தப் போராட்டம் சமூக சீர்திருத்தத்தை முன்னிறுத்தியது. அது மட்டுமின்றி, முதன்முறையாக காந்திய அகிம்சை முறைகளை திருவிதாங்கூருக்கு கொண்டு வந்தது.

அப்படியான வைக்கம் நிகழ்வுகள், அவை நிகழ்ந்த வரலாற்றுச் சூழல் மற்றும் அவற்றின் நீடித்த மரபு ஆகியவற்றைத் திரும்பிப் பார்க்க்கும் வகையில் கேரளா மாநிலம், வைக்கம் கடற்கரை மைதானத்தில் கேரள அரசின் சார்பில் நடைபெற்ற “வைக்கம் நூற்றாண்டு” விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “வைக்கம் போராட்டம் சமூக நீதி போராட்டத்துக்கு முன்னோடி போராட்டம். இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம் இது. பெரியாரின் எழுச்சியால் தமிழகத்தில் இருந்து பல தலைவர்கள் வைக்கம் வந்து போராடினர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் நானும் உடலாலும் வேறுபட்டாலும் கொள்கையால் ஒன்றுபட்டவர்கள்.

வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டமாக திகழ்வதால் வைக்கம் மண்ணில் நிற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். வைக்கம் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட மகாத்மா காந்தி, தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தார். தமிழ்நாட்டில் கோயில் நுழைவு போராட்டங்கள் நடத்த தூண்டுகோலாக இருந்தது வைக்கம் போராட்டம். வைக்கம் போராட்டம், கேரளா, தமிழ்நாடு சமூக நீதி வரலாற்றில் மட்டுமின்றி இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது. அம்பேத்கர் உள்ளிட்ட பல தலைவர்கள் போராட்டங்களை நடத்துவதற்கும் வைக்கம் போராட்டமே தொடக்கமாக இருந்தது.

எத்தகைய சனாதனக் காலத்தை பல்வேறு போராட்டங்களின் மூலமாக நாம் கடந்து வந்துள்ளோம் என்பதை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் பணியை இரு மாநில அரசுகளும் செய்தாக வேண்டும். சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமத்துவம், மானுடப்பற்று, ரத்த பேதமில்லை, பால் பேதமில்லை, சுய முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், சமூக நீதி, மதசார்பற்ற அரசியல், அறிவியல் மனப்பான்மை. இவை தான் பெரியாரியத்தின் அடிப்படை. இவை உலகம் முழுமைக்குமான தத்துவங்கள் தான். இந்த தத்துவங்களை வென்றெடுக்க நாம் அனைவரும் உழைத்தாக வேண்டும். மீண்டும் சனாதன, வர்ணாசிரம, ஜாதியவாத, மதவாத சக்திகள் கோலோச்ச நினைக்கும் காலத்தில் நமக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது. இதற்கு பெரியார் என்ற பெருவிளக்கு நமக்குப் பயன்படும். வைக்கம் போராட்டம் கலங்கரை விளக்காக அமையும். 100 ஆண்டுகளுக்கு முன்னால் எத்தகைய ஒற்றுமையுடன் போராடி வென்றோமோ அதேபோன்ற ஒற்றுமையுடன் செயல்படுவோம்” என்றார்.

Related Posts

error: Content is protected !!