ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு : இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
கண்ணுக்குத் தெரியாத கொடூர வைரஸான இந்த கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மலேரியாவுக்கு பயன்படுத்தும் ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்துகளை உட் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் லட்சக்கணக்கில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை வாங்கி உள்ளன. மேலும் இந்தியாவில் கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களுக்கு இந்த மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை ராஜஸ்தான் போலீசாருக்கு வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதுபோல் கொரோனா அதிகம் பாதித்த ஹாட்ஸ்பாட் பகுதிகளில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பு நடவடிக்கையாக தர மும்பை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
எனினும் 15 வயதுக்குட்பட்டோர் இதய நோயாளிகள் மற்றும் 55 வயதுக்கும் மேற்பட்டோருக்கு தரப்படாது என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. எதற்காக ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள் தரப்படவுள்ளன என்பதற்கு மும்பை மாநகராட்சி காரணம் கூறுகிறது.
தாராவி போன்ற இடங்களில் தனி மனித விலகலுக்கு சாத்தியமற்ற அறைகளில் நெருக்கமாக மக்கள் வசிப்பதால் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்கப்போவதாக மராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. எனினும் பரீட்சார்த்த முறையில் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரப்வோதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் மத்திய அரசு நிறுவனமான ஐசிஎம்ஆர் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை தடுப்பு மருந்தாகவோ, தீர்வாகவோ இதுவரை அங்கீகரிக்கவில்லை. அதை தீவிர பாதிப்புக்கு உட்பட்டவர்களுக்கும். கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தாருக்கும் மட்டுமே தருவதற்கு பரிந்துரைத்துள்ளது. ஆனால் இவற்றை சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி, குமட்டல், ரத்தத்தில் சர்க்கரை குறைவு போன்ற பிரச்சினைகள் இருப்பதாக கூறினார்கள்.
அது சம்பந்தமாக இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. 35 வயது சராசரி கணக்கில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 10 சதவீதம் பேருக்கு வயிற்று வலி இருப்பதும், 6 சதவீதம் பேருக்கு குமட்டல் இருப்பதும், 1.3 சதவீதம் பேருக்கு ரத்த சர்க்கரை குறைவு இருப்பதும் தெரிய வந்தது.
எனவே இதனால் ஏற்படும் பக்க விளைவு குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் தேவையில்லாமல் இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.