December 2, 2021

தமிழக கர்ப்பிணிக்களுக்கு கெட்டுப் போன ரத்தம்! மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் கெட்டுப் போன ரத்தம் செலுத்தி 15 கர்ப்பிணிகள் இறந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகை செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது மாநில மனித உரிமை ஆணையம். இதுதொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர், மருத்துவ கல்வியக இயக்குநரும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குநரும் 2 வாரங்களில் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நம் நாட்டில் உள்ள ரத்த வங்கியை முறையாக பராமரிப்பதில்லை, உரிய முறையில் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதில்லை, நோயாளிகளுக்கு ரத்தம் ஏற்றும் போது ரத்தத்தை ஆய்வு செய்வ தில்லை என்று பல்வேறு புகார்கள் எழுந்தன. மேலும், ரத்த வங்கியின் அலட்சியத்தால் ரத்தம் செலுத்தியபின் ஏற்பட்ட பக்க விளைவுகளால் கர்ப்பிணி பெண்களும் உயிரிழந்ததாக கூறப் படுகிறது. இதையடுத்து தருமபுரி அரசு மருத்துவமனையில் இயங்கும் ரத்த வங்கியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 22 ஆம் தேதி சிறப்பு நிபுணர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின் படி ரத்த வங்கியின் அதிகாரியான மருத்துவர் சந்திரசேகர், செவிலியர் 9 பேர், 3 ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள் என 12 பேர் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதனிடையே கெட்ட ரத்தம் செலுத்தியதால் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்தது.

மருத்துவமனை தரப்பில் தவறு செய்திருந்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ இயக்குனர் தெரிவித்துள்ளார். இதனிடையே தானமாக பெறப்படும் ரத்தங்களை முறையாக பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகம் முழுவதும் உள்ள ரத்தவங்கிகளுக்கு சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்ப உள்ளது. 89 அரசு ரத்தவங்கிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பிட்டு சுற்றறிக்கை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ரத்ததானம் பெறுவதிலும், நோயாளிகளுக்கு ரத்தம் செலுத்துவதிலும் இருக்கும் பிரச்னைகளை களையவே, அரசு தேசிய ரத்தக் கொள்கையை கடந்த 2002-ம் ஆண்டு உருவாக்கியது. அதன்படி ரத்த வங்கிகள் அமைப்பதற்கான சட்டம் முறைப்படுத்தப்பட்டது. ஒரு ரத்த வங்கி தொடங்க வேண்டு மானால் குறைந்தது 1,100 சதுர அடி இடம் தேவை. ரத்த வங்கியில் பயிற்சி பெற்ற ஒரு மருத்துவர் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். பணியாற்றும் நுட்புணர் ஓராண்டு அனுபவம் பெற்றவராக இருக்கவேண்டும். ஒரு செவிலியரும் பணியில் வேண்டும். ஆனால் தற்போது செயல்படும் பல ரத்த வங்கிகளில் முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்பதே உண்மை.

இந்நிலையில்தான், அரசு மருத்துவமனைகளில் கெட்டு போன ரத்தம் செலுத்தி 15 கர்ப்பிணிகள் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகை செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது, மாநில மனித உரிமை ஆணையம். இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர், மருத்துவ கல்வியக இயக்குனர் 2 வாரங்களில் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனரும் அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனிடையே தருமபுரி அரசு மருத்துவமனையில் கெட்ட ரத்தம் ஏற்றப்பட்டதால் கர்ப்பிணிகள் 15 பேர் உயிரிழந்தது தொடர்பாக குழு ஆய்வு செய்யும் என்றும் ஊரக நலப்பணி இயக்ககம், மருத்துவக்கல்வி இயக்ககம் சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.