November 28, 2021

மாணவர்களின் புத்தகப் பை எடை : மத்திய அரசு புது உத்தரவு!

பெரும்பாலானோர் வீட்டில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது அவர்களது முதுகில் கணக்கும் புத்தகப் பையை மீறி கழுத்தைத் திருப்பி டாடா சொல்லும் போது மனசு வலிக்காத பெற்றோரே இல்லை. இதற்கு ஒரு வழிபிறக்காதா என்று ஏங்கிய அப்பா, அம்மாக்களை ஆறுதல் படுத்தும் வகையில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளது. அதன்படி ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை எடை ஒன்றரை கிலோவும், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 2 முதல் 3 கிலோ எடையும், ஆறாம், ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு 4 கிலோ எடையும், எட்டாம், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நான்கரை கிலோ எடையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 5 கிலோ எடையும்தான் இருக்க வேண்டும்.

பள்ளி குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் எழுதுவதை என்றைக்கு கண்டு பிடிச்சாங்களோ அன்றில் இருந்து துவங்கினதுதான் இந்த அதிக எடை புத்தகப் பை பயணம், மரம், தோல், அலுமினியப் பெட்டி என பல கண்டங்கள் தாண்டி இப்போ நம் செல்லங்களின் முதுகில் அமர்ந்திருப்பது ‘எர்கோனோமிக் ஸ்கூல் பேக்’. ஸ்டைல் மாறினால் என்ன வெயிட் மாறவில்லை. இதனிடையே இந்த பள்ளி புத்தகப் பையின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. பழைமையானதும்கூட. மிலிட்டரியில் வீரர்கள் தங்கள் பொருள்களைச் சுமந்துச்செல்ல பயன்படுத்தப்பட்ட பையை மாதிரியாகக் கொண்டு தயாரிக்கப் பட்டதே உலகின் முதல் புத்தகப் பை. 17ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை பிள்ளைகள் பாடசாலையில் ஃபிர் (Fir) மரத்தினாலான பெட்டியைப் புத்தகம் வைக்கப் பயன் படுத்தினார்கள். சதுர வடிவிலான இந்தப் பெட்டி எழுதும்போது டெஸ்க்காகவும் பயன்பட்டது.
அதே சமயம் பள்ளியிலேயே புத்தகங்களை விட்டுச்செல்லும் பழக்கம் அக்காலத்தில் இருந்ததால் இப்பெட்டியின் கனம் பெரியதாகத் தெரியவில்லை. 1900-களில் வீட்டுப்பாடம் எழுதப் புத்தகங்களை சுமந்துச்செல்ல தொடங்கும்போது மரப் பெட்டியின் கனம் கருதி மிருகத் தோள்களினால் ஆன பை உபயோகத்துக்கு வந்தது. இதன் கனமும் எடையும் முரட்டுத்தனமாகவும் அசௌகரியமாகவும் இருந்த காரணத்தினாலும் அதிக புத்தகங்களை வைக்கமுடியாத காரணத்தினாலும் 1900இன் தொடக்கத்தில் கான்வாஸ், நைலான் போன்ற பொருள்களிலான பைகள் உபயோகத்துக்கு வந்தன. 1945ஆம் ஆண்டில்தான் முதன்முதலாகப் பெண்கள் எடுத்துச் செல்ல என நீண்ட கைப்பிடியால் ஆன பைகள் தயாரிக்கப்பட்டன. 1960 முதல் 1970 வரை புத்தகப் பையின் பொற்காலம் எனலாம். புத்தகப் பை பளிச் வண்ணம், மனதைக் கவரும் டிசைன், சிந்தனையைத் தூண்டும் வாசகம் என அனைவரையும் குதூகலப்படுத்தின.

அப்படி கண்ணைப்பறிக்கும் வண்ணங்களுக்கான காரணம் ஒரு பாதுகாப்பு அம்சமே. குறைவான வெளிச்சத்திலும், மிகவும் கீழான தரைமட்டத்திலும்கூட ப்ளோரஸண்ட் வண்ணங்கள் நம்ம கவனத்தை ஈர்க்கும். இப்படிப் பாதுகாப்புக்காகவும் ப்ஷேனுக்காகவும் பல வண்ணங்களில் பள்ளி பைகள் வரத் தொடங்கின. நெதர்லாண்டிலுள்ள ஆம்ஸ்டெர்டேம் என்னும் ஊரில் பை மற்றும் பர்ஸுகளுக்கான மியூசியம் உள்ளது. இதில் 4000-க்கும் மேற்பட்ட பைகள் பல்வேறு மாடல்களில் உள்ளன. இந்த மாறுதல்கள் பெற்றோர்களிடம் ஒருவித எதிர்பார்ப்பை உண்டாக்கியது. புத்தகம் எடுத்துச்செல்லும் வசதிக்காக என்பதுபோய் தங்களின் குழந்தைகளுக்கு வசதியாக உள்ளதா என்ற தேடலின் புதிய கண்டுபிடிப்பே ‘எர்கோனாமிக் ஸ்கூல் பேக்’ எனப்படும் சமீபத்திய பைகள். அதனால் அதிக புத்தகங்களை கொஞ்சம் வலி குரைவாக கொண்டு செல்ல முடியும். அவ்வளவுதான்

இந்த புத்தகச் சுமையைக் குறைக்க நமது முப்பருவக் கல்வி முறையில் மூன்று பருவங்களுக்கான புத்தகங்களை தனித்தனியாக பிரித்து கொடுத்துள்ளனர். ஆனாலும் அந்தந்த பருவத்துக்கு என்று புத்தகங்களும் நோட்டுகளுமாக புத்தகப் பை மூச்சுத் திணறும் அளவுக்கே உள்ளது. நம் இந்திய மாணவர்கள் 15 கிலோ எடை வரை புத்தகப் பையாக சுமக்கின்றனர். தனது உடல் எடையில் 30 முதல் 35 சதவிகிதத்தை புத்தக மூட்டையாக சுமக்கின்றனர். 68 சதவீத குழந்தைகள் தங்களது எடையில் இருந்து 10 சதவீதத்துக்கும் அதிகமான எடையை சுமப்பதால் உடல் ரீதியான தொல்லைகளுக்கு ஆளாகின்றனர் என்றெல்லாம் புகார் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில்தான் , கூடுதல் பாடப்பிரிவு மற்றும் புத்தகப் பை எடை தொடர்பான அறிவுறுத்தலை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது. மாணவர் களின் புத்தகப்பை எடை, பாடங்கள் பயிற்றுவித்தலை ஒழுங்குப்படுத்துவது ஆகியவை தொடர் பான வழிமுறைகளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பி உள்ளது.

“ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது. ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம், கணிதம் தவிர வேறு எதையும் எழுதச் சொல்லக் கூடாது. மூன்றாவது முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம், சுற்றுச் சூழல், கணிதம் தவிர வேறு எதையும் எழுதச் சொல்லக் கூடாது. மாணவர்களைக் கூடுதல் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை எடுத்து வரச் சொல்லக் கூடாது.

ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை எடை ஒன்றரை கிலோவும், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 2 முதல் 3 கிலோ எடையும், ஆறாம், ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு 4 கிலோ எடையும், எட்டாம், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நான்கரை கிலோ எடையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 5 கிலோ எடையும் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருக்கக் கூடாது” என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.