April 2, 2023

ஹவ்டி மோடி’னாமிக்ஸ்?

“நோய் நாடி, நோய் முதல் நாடி” அதற்கேற்ற மருந்து கொடுப்பதாக இருந்தால், எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை, கீழ்க்காணும் நடவடிக்கைகள் ஒரு நல்ல துவக்கமாக இருக்கலாம்:

[1] அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், உலக வங்கி, சர்வதேச நிதி மையம், உலக வர்த்தக நிறுவனம் போன்றவர்களின் தாளத்துக்கு ஆடுவதை நமது ஆட்சியாளர்கள் முதலில் நிறுத்த வேண்டும். காலனியாதிக்க மனநிலையை, அடிமை மனோபாவத்தை, மேற்கத்திய வளர்ச்சி சித்தாந்தத்தை உதறித்தள்ளிவிட்டு மனச்சிறையிலிருந்து அவர்கள் வெளியே வரவேண்டும்.

[2] கார்ப்பரேட்டுகளுக்குக் கைக்கூலிகளாக இராமல், நமது ஆட்சியாளர்கள் நம் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். நம் மக்களின் நலன்களை முன்னிறுத்தி சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும்.

[3] தொழில்துறை உற்பத்தி மட்டுமே வேலைவாய்ப்புக்களை உருவாக்கும், வருமானத்தைப் பெருக்கும், மக்களுக்கு வளம் தரும், நலம் பயக்கும் எனும் மூடத்தனமான நம்பிக்கையைக் கைவிட்டு, வேளாண் உற்பத்தியைப் பெருக்குவோம். மீன்பிடித் தொழில், சில்லரை வணிகம், நெசவுத் தொழில் போன்ற கிராமப்புறப் பாமர மக்களின் வேலைகளை, உற்பத்திகளைப் பாது காப்போம், வளர்த்தெடுப்போம். இம்மாதிரியான வேலைகளுக்கு லாபமும், கண்ணியமும், பாதுகாப்பும் கிடைக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவருவோம்.

[4] “சந்தையேக் கடவுள், வியாபாரமே வேதம், வெள்ளைக்காரனே தேவதூதர்” என்கிற காலனிய மனநிலையைக் கைவிட்டு, நமது நலன்களைப் பேணிக்கொள்ளும்பொருட்டு கொஞ்சம் பாதுகாப்பு வாதிகளாக (protectionists) சிந்திப்போம், செயல்படுவோம். நம்நாட்டு விவசாயிகளுக்கு மானியங்கள் கொடுக்காதீர்கள், உதவிகள் செய்யாதீர்கள் என்று நிர்ப்பந்திக்கும் அமெரிக்கா தன் நாட்டு விவசாயி களுக்கு வகைதொகை இல்லாமல் வாரி வழங்குவதை அறிவோம் (மூன்றாம் உலக அடிமை நாடுகளின் தலைவர்கள் இதைக் கேள்வி கேட்க முன்வருவதில்லை.)

[5] பொருளாதாரத்தைச் சீரமைத்து வெற்றிகாணும் வரை, புதிய அணுமின் நிலையங்கள், புல்லட் ரயில்கள், பெரும் இராணுவக் கொள்முதல்கள், மற்றும் ஊதாரித்தனமான வீண் செலவுகளைக் கைவிடுவோம்.

[6] உணவுத் தன்னிறைவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு, சுகாதாரம், உடல்நலம், தரமான கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

[7] “டாலர், தங்கம், பங்கு வர்த்தகம்” எனும் வெள்ளைக்காரனின் முதலாளித்துவ மும்மையிட மிருந்து நம் நாட்டை, உலகை மீட்டெடுப்போம்.

[8] அனைத்திற்கும் மேலாக, சமூக ஒற்றுமை, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பாசிசக் கொள்கைகளை, அணுகுமுறைகளைக் கைவிட்டு, நாட்டையும், நலிவடைந்த மக்களையும் சனநாயக வழிகளில் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவோம்.

அதானி, அம்பானி, அனில் அகர்வால், டிரம்ப், புடின் போன்றவர்களின் எடுபிடிகளான மோடி, நிம்மி, மம்மி மகன்கள் தாமாகவே இவற்றைச் செய்யமாட்டார்கள். இவர்கள் அனைவரும் நமது எஜமானர்கள் அல்ல, வெறும் ஐந்து வருட ஒப்பந்த வேலைக்காரர்கள் என்பதை நினைவிற் கொண்டு, நம் விருப்பப்படி வேலைசெய்யச் சொல்வோம், இல்லையேல் விரட்டியடிப்போம்! இதைச் செய்ய முடியுமா நம்மால்?

சுப. உதயகுமாரன்
நாகர்கோவில்,
அக். 4, 2019.