தமிழகத்தில் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி?
சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நம் தமிழகத்தில் நாளை முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதால் அதற்கான முன்பதிவு செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோமா?.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவியது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதன்படி தமிழகத்தில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து மார்ச் 1 ஆம் தேதி முதல் முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதிலும் அதற்கான கட்டமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். முதலில் பெயர், வயது, முகவரி உள்ளிட்ட சுய விவரங்களை COWIN செயலியில் பதிவிட்ட பிறகு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதன்பிறகு தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்கான விவரங்கள் அனைத்தும் காண்பிக்கும். அதில் அனைத்து விவரங்களையும் உள்ளிட வேண்டும். அதற்கு கோவின் 2.0 செயலி அல்லது ஆரோக்கிய சேது செயலி மூலமாக தடுப்பூசி முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு மொபைல் எண்ணில் இருந்து அதிகபட்சமாக 4 பேருக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். தமிழகம் முழுவதிலும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். அதே சமயத்தில் தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி செலுத்துவதற்கு 250 ரூபாய் வரை வசூலிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.