March 22, 2023

கொள்ளை நோய்களால் மாறி வரும் உலக வரைபடம்!

கொள்ளை நோய்கள், உலக பேரரசுகளை சாய்த்துள்ளன, அதிகாரம் செலுத்திய கட்டமைப்பு களை வீழ்த்தியுள்ளன, போர்களை முடிவிற்கு கொண்டுவந்துள்ளன, சமூக புரட்சிகள் ஏற்படுவதற்கு காரணமாக இருந்துள்ளன. மானுட சமூகங்களை கட்டமைப்பதிலும், உலக அரசியலில் தாக்கத்தையும் கொள்ளை நோய்கள் ஏற்படுத்தின என்பதை வரலாறு நமக்கு உணர்த்திவருகிற்து.

ஜஸ்டினியன் பிளேக்:-

இதுவரை உலகம் சந்தித்தலில் மிக கடுமையான நோய்களில் ஒன்று, ஆறாம் நூற்றாண்டில் பரவிய “ஜஸ்டினியன் பிளேக்” நோயாகும். எகிப்பதில் உருவாகிய இந்த நோய் கான்ஸ்டான்டி னப்போல் நகரம் வரை பரவியது. கான்ஸ்டான்டினப்போல், கிழக்கு ரோமானிய பயசான்டைன் (byzantine) பேரரசின் தலைநகரம். அப்போதைய பேரரசரின் பெயரான ஜஸ்டினியன் பெயரிலேயே இந்நோய் அழைக்கப்பட்டது. கிழக்கிலும் மேற்கிலும் பரவிய அந்த நோய்க்கு சுமார் 2.5 முதல் 10 கோடி மக்கள் உயிரிழந்திருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கொள்ளை நோய் தாக்கிய சமயத்தில், ஜஸ்டினியனின் ஆட்சியின் கீழ் அந்த பேரரசு கொடி கட்டி பறந்துகொண்டிருந்தது.

வரலாற்றில், மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகி இருந்த ரோமானிய பேரரசு நிலப்பரப்பு முழுவதையையும், வடக்கு ஆப்பிரிக்க நிலப்பரப்பு என அனைத்தையும் தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டுவந்திருந்தார் பேரரசர். அலை அலையாக நோய் தாக்கியதால் பொருளாதாரம் வீழ்ந்து பேரரசால் போதிய போர்வீரர்களை தேர்ந்தெடுக்க முடியாததால் எல்லைகளை காப்பாற்ற முடியாமல் திணறியது. ஐரோப்பிய பகுதியில் பேரரசின் ஆளுகையின் கீழ் இருந்த பகுதிகளை, ஜெர்மானி மொழி பேசிய பிராங்குகளும், எகிப்து சிரியா போன்ற பகுதிகளை அரேபியர்களும் கைப்பற்றினர். படிப்படியாக அந்த பேரரசு முடிவிற்கு வந்தது.

Black Death:-

“ப்ளாக் டெத்” (black death) என்று அழைக்கப்பட்ட கொள்ளை நோய் ஐரோப்பிய- ஆசிய கண்டனங்களை 14 ஆம் நூற்றாண்டில் பாடாய் படுத்தியது. சுமார் 7.5 முதல் 20 கோடி வரை மக்கள் இறந்திருப்பார்கள் என்கின்றன தரவுகள். 1340ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கிய தொற்று, இந்தியா, சிரியா என பல்வேறு நாடுகளை கடந்து 1347 ஆம் ஆண்டு ஐரோப்பியாவை வந்தடைந்தது. ஐரோப்பியாவில் வாழ்ந்த 50% மக்கள் இந்த நோய்க்கு பலியானார்கள். ஸ்டாண்டபோர்ட வரலாற்று ஆய்வாளரின் வரிகளில் சொல்வதென்றால், சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை சமன்படுத்தும் நான்கு குதிரைகளில் ஒன்று கொள்ளை நோய்கள், மற்ற மூன்றும் போர்கள், புரட்சி, அரச கட்டமைப்புகள் உடைவது. “ப்ளாக் டெத்” நோய் பரவலுக்கு பிறகான காலகட்டத்தில் ஐரோப்பியாவில் நிலம் அனேக மக்களுக்கு சென்றது, வேலையாட்கள் நிறைய உயிர் இழந்ததால், கூலி அதிகமாக கிடைத்தது போன்ற சமூக மாற்றங்கள் நடைபெற்றன.

எல்லாவற்றையும் விட இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் இந்த கொள்ளை நோயால் நடந்தது. கத்தோலிக்க சர்ச்சுகள் தங்களுடைய ஆதிக்கத்தை இழக்கத் தொடங்கின, நோய் தொற்றின் போது எதையும் செய்யமுடியாமல் போனதால், சர்ச்சும் மற்ற கட்டமைப்பை போல் இன்னொன்று என்கிற உணர்வு மக்களுக்கு வந்தது. “சர்வ ஞான அறிவும்” பெற்ற கடவுள் இருக்கும் போது எப்படி இப்படிப்பட்ட கொள்ளைநோய் மக்களை கொல்ல முடியும் என்கிற கேள்வியே மக்களை திருச் சபையிலிருந்து விலகி நிற்க செய்தது. தொடர்ச்சியாக வலுவிழந்து வந்த கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்தை, 16ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற “ப்ரோட்டஸ்டண்ட் சீர்திருத்தம்” மேலும் குறைத்தது.

ஸ்பானிஷ் ஃப்ளு:-

19ஆம் நூற்றாண்டின் இவ்வுலகத்தை தாக்கிய கொள்ளை நோய் “ஸ்பானிஷ் ஃப்ளு”, சுமார் 5 கோடி மக்களை காவு வாங்கிய இந்நோய் ஐரோப்பியாவில் தோன்றி, அமெரிக்கா, ஆசியா என பரவியது. முதலாம் உலகப்போரின் காரணத்தால் தொற்றிய நோய் ஜெர்மனி தோற்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

கோவிட் 19:-

இப்போது தொற்றியுள்ள கோவிட் 19 நோய், உலக வரைபடங்களை மாற்றி அமைக்குமா என தெரியாது, காலம் தான் பதில் சொல்லும். மேற்குலகம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது, மாற்றங்கள் நடைபெறும் தொடக்ககாலத்தில் இப்போது உள்ளோம், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது, ஆனால் உலக ஒழுங்குகள் மாறும் என்பது நிச்சயம், அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

How pandemics have changed the world என்கிற கட்டுரை ஆங்கில இந்துவில் சில தினங்களுக்கு முன்னர் வெளிவந்துள்ளது. அவசியம் வாசிக்கவேண்டியது.

சுந்தர்ராஜன்