ரிசர்வ் பேங்க் அனுமதி வாங்காத கூகுள் பே சர்வீஸ்- ஐகோர்ட் ஷாக்!

கூகுள் நிறுவனம் கூகுள் மேப், நியூஸ் டிரண்ட், டிரைவ் என பல சேவைகளை, பயனாளர்களின் தேவையை அறிந்து கொடுத்துவருகிறது. இந்நிலையில் பணப் பரிவர்த்தனைக்கும் வங்கிகளுடன் இணைந்து கடன் வழங்கும் சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இணைய உதவியுடன் பணப் பரிவர்த்தனை செய்யும் முறை பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் கூகுள் கால் பதித்து பிரபலமாகி உள்ள நிலையில் இந்த கூகுள் பே நிறுவனம் ரிசர்வ் வங்கியின் உரிய அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதை அடுத்து கூகுள் பே நிறுவனத்தின் செயல்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த அபிஹிஜித் மிஸ்ரா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், “பேமென்ட் மற்றும் செட்டில்மென்ட் ஆக்ட் 2007, பிரிவு 4-ன் கீழ் கூகுள் இந்தியா டிஜிட்டல் நிறுவனத்தின் சார்பில் செயல்படும் கூகுள் பே(GooglePay) செயலி அங்கீகாரம் இன்றி இயங்குகிறது என்று கடந்த மார்ச் 20-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த , பேமென்ட் மற்றும் செட்டில்மென்ட் ஆக்ட் 2007-ன் படி, ரிசர்வ் வங்கியின் உரிய அங்கீகாரம் பெறாமல், விதிகளுக்குக் கட்டுப்படாமல், எந்த தனி மனிதரும், நிறுவனமும் பணம் பரிமாற்றம் இயக்கத்தை (பேமென்ட் சிஸ்டம்) செயல்படுத்த முடியாது.

ஆனால், கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே நிறுவனம் ரிசர்வ் வங்கியின் எந்தவிதமான அங்கீகாரம் இல்லாமல், கண்காணிப்பு இல்லாமல் தனி மனிதர்களின் பான் எண், ஆதார் எண், பரிமாற்ற விவரங்கள், வங்கிக்கணக்கு ஆகியவற்றைப் பெற்று செயல்பட்டு வருகிறது. ஆதலால், அங்கீகாரமின்றி செயல்படும் கூகுள் பே நிறுவனத்தின் செயல்பாட்டை உடனடியாக நிறுத்த ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட வேண்டும்.

இந்தியாவில் உரிய அங்கீகாரம் இன்றி பணப்பரிமாற்ற சேவை நடத்திய கூகுள் இந்தியா நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க வேண்டும். இந்த மனு நாட்டின் பொருளாதார நலனுக்காகவும், தனிமனிதர்களின் நலனுக்காகவும் மட்டுமே தாக்கல் செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் இன்றி எந்த ஒரு பேமென்ட் சிஸ்டமும் இயங்ககூடாது. ஆனால், கூகுள் பே செயலி எவ்வாறு இயங்கு கிறது, யார் அனுமதித்தது? என ரிசர்வ் வங்கிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி மற்றும் கூகுள் இந்தியா நிறுவனம் இதற்கு பதில் அளித்து நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.