February 7, 2023

காந்தி ”மகாத்மா” ஆனது இப்படித்தான்!

மனித நிலையிலிருந்த காந்தி மகாத்மா என ஆனது அவருக்குக் கிடைத்த பட்டமல்ல. அவரது செயல்களுக்காக மக்கள் சூட்டிய மகுடம். அவரது குறிக்கோள் அந்நியர் ஆட்சியை அகற்றுவது மட்டுமல்ல. ஆங்கிலேயர் ஆட்சி வெளியேறியபின் அமையும் நம்மவர்களின் ஆட்சியில் நம்மைப் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் மதப்பீடைகள் நம்மை விட்டு விலகாதே. அடிமைத்தளையை அறுத்து விடலாம். ஆனால் நம் காலைச் சுற்றிய பாம்பாக நமது பல்வேறு மூடநம்பிக்கைகள் நம்மோடு இருந்து விடுமே என்ற கவலை அவரை ஆட்டுவித்தது. அடுத்த இலக்கு அறியாமை. மூடநம்பிக்கை சனாதனக் கட்டுமானங்களில் சிக்கி தவித்த தமிழ்நாட்டில் தனது அறிவின் கதிர்வீச்சால் தாழ்த்தப்பட்டோர் உரிமையை மீட்டெடுக்க வியூகங்களை மேற்கொண்டார்.

ghandhi jan 31

தீட்டுக்கள் பலவிதங்களில் விசுவரூபமெடுத்து சாதியவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்தது. தீட்டுக்களால் தீண்டாமை நிலைபெற்றது. தாழ்த்தப்பட்ட அரிஜன மக்களைத் தொட்டால் தீட்டு. இந்தத் தீட்டுக்கு ஸ்பரிசத் தீட்டு என்று பெயர். இதுவே அண்டாமை என கேரளத்தில் விளிக்கப்பட்டது. இதை விடக் கொடுமை தமிழ்நாட்டின் தென்கோடிவரை பரவியுள்ள பெரும்பான்மை சமூகம். நாடார்கள் என அழைக்கப்படும் முன்பாக சாணார்கள் என இழிவுபடுத்தும் சொல்லால் அவர்கள் மீது சமூக அநீதி அடக்குமுறை ஏவப்பட்டது. இந்த அவலத்தின் உச்சகட்டம் நேத்திரத்தீட்டாக இவர்கள் மீது சுமத்தப்பட்டது. இது பாராமை எனவும் விளிக்கப்பட்டது.ஹரிஜனங்களை தொட்டால் தீட்டு சாணார்களைப் பார்த்தால் தீட்டு. நேத்திரத்தீட்டு. இதையும் தாண்டி இன்னொரு கொடுமையும் இருந்தது. அதுதான் மானஸத்தீட்டு குறிப்பிட்ட சமூகத்து மக்களை மனதால் நினைத்தாலே தீட்டுப்பட்டு விடுவோம். இப்படி சமூக அவலங்கள் ஊறி நொதித்து உளுத்துப் போன தமிழ்நாட்டில் காந்தியடிகள் தனது சமூகநீதித் தடங்களைப் பதிய வைப்பதைப் பற்றி சிந்தித்தார்.

இதற்காகவே காந்தியடிகள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது பயணத்திட்டத்தில் மதுரை வந்தபோது மீனாட்சியம்மன் கோயில் வழிபாடு உள்ளூர் தலைவர்கள் விருப்பப்படி சேர்க்கப்பட்டிருந்தது. வைக்கத்தில் தெருநுழைவு போராட்டம் கொழுந்து விட்டு எரிந்து உடன்பாடு கண்டுமுடித்தபின் 26.09.1927-இல் காந்தியடிகள் மதுரை வந்திருந்தார். நான்கு நாட்கள் மதுரை சுற்றுப்புறங்களில் பயணம். அப்போதுதான் மீனாட்சி ஆலய வழிபாடு பற்றிய நிகழ்வு காந்தியடிகளிடம் பயணக் குறிப்பு நிகழ்ச்சி நிரலில் இருப்பதை அவரது உதவியாளர் கூறினார்.

காந்தியடிகள் உள்ளூர் தலைவர்களிடம் கேட்டார். “உங்கள் ஊர் மீனாட்சிஅம்மன் கோவிலில் அனைவரும் வழிபட உரிமை உண்டா’ எனக் கேட்டறிந்தார். “அனைவரும் வழிபாடு செய்யமுடியாது. தாழ்த்தப்பட்ட மக்களும், நாடார் இன மக்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தீண்டத்தகாதவர்கள் என்ற வரிசையில் இவர்களுக்கு கோயிலில் அனுமதி கிடையாது’ என்றனர். காந்தியடிகள் மிக அமைதியாகக் கூறினார். “உங்கள் ஊர்க்கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்து மக்களும் என்றைக்கு வழிபடுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்களோ அன்றுவரை நானும் கோயிலுக்குள் வரமாட்டேன்’ என உறுதிபடக் கூறினார். சமூக நீதிப் போராட்டத்திற்கான விதையை தூவிவிட்டுப் புறப்பட்டுவிட்டார். “இது எனக்கு நானே விதித்துக் கொண்ட தடை’ என்றவரின் குரல் தமிழகத் தலைவர்களை உலுக்கிப் போட்டது.

ராஜாஜி கேரள மாநில உரிமைப் போராட்டத்தில் காந்தியடிகளின் மூளையாக இருந்து செயல்பட்டவர். மதுரையில் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களும், நாடார் இன மக்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற காந்திய நிர்மாணத் திட்டம் விவாதப் பொருளானது. தீண்டாமை ஒழிப்பு போராட்டம் தீவிரமடைந்தது. இறுதியில் காந்தியடிகள் முன் போராட்டத்திற்கான வியூகம் அமைக்கப்பட்டது.தமிழகத்தில் இப்போராட்டம் அறிவிக்கப்பட்டால் எதிர்ப்புகள் எங்கெங்கிருந்து கிளம்பும் என மிக நுட்பமாகக் கண்டறிந்தார் காந்தியடிகள. இந்தக் கணக்கின் வெளிப்பாடாக சனாதனிகள் இதை எதிர்ப்பார்கள். பிற்படுத்தப்பட்டவர்களில் சில பிரிவினர்களே இந்த சமூக நீதிப்போராட்டத்தை எதிர்ப்பார்கள் என கண்டறிந்தனர். எனவே மதுரையின் பிரபல வழக்கறிஞரும், விடுதலைப் போராட்டத்தில் குடும்பத்துடன் பங்கேற்று, சிறைசென்றவருமான தியாகி அ.வைத்தியநாதஅய்யர் ஆலயப் பிரவேசக்குழுவுக்கு தலைமை ஏற்பது என முடிவு செய்யப்பட்டது.

அ. வைத்தியநாதய்யர் மிகப்பெரிய அறிவாளி, சட்டமேதை. இவருக்கு வழிகாட்டும் மூதறிஞர் இராஜாஜி மதியூகி, தமிழக முதலமைச்சர். வைத்தியநாத அய்யரும் மற்றும் முன்னணித் தலைவர்களும், வேன்களிலும் கார்களிலும் தாழ்த்தப்பட்ட இனத்தின் பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு கேரள கோயில்களில் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுவதை நேரில் சென்று கண்டு கொண்டனர்.மதுரையில் ஆலயப்பிரவேச மாநாடு கூடியது. த.நா.அரிசன சேவாலய செயலாளர் என். கோபாலசாமி, நாவலர் சோமசுந்தரபாரதி, கோயில் அறங்காவலர் நாயுடு, கிருஷ்ணசாமி பாரதி, தியாகி தாயம்மாள், தியாகி சீதாலெட்சுமி பாரதி, திருச்சி ஹாலாஸ்யம் அய்யர், டாக்டர் பு.ராமச்சந்திரன், முனகால பட்டாபிராமையா, லெட்சுமி அம்மாள், சங்கர அய்யர், அகில இந்திய அரிசன சேவாலய துணைத்தலைவர் திருமதி இராமேஸ்வரி நேரு, உட்பட பல்வேறு முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் மாநாட்டில் எழுச்சியுரை ஆற்றினார்கள். இறுதியில் மாநாட்டில் முதலமைச்சர் மூதறிஞர் ராஜாஜி மிக உருக்கமாக வேண்டினார்.

“காந்தியடிகளின் நிர்மாணத் திட்டங்களில் ஒன்றான தீண்டாமை ஒழிப்பிற்காக மதுரையில் ஆலயப் பிரவேசத்தை நடத்திக் கொடுக்குமாறு மதுரை மக்களிடம் நான் பிச்சை கேட்கிறேன். எனது வேண்டுகோளை காந்தியடிகளின் விருப்பப்படி நிறைவேற்றித் தருவீர்கள் என நம்புகிறேன்’ என்று வேண்டுகோள் விடுத்தார். இதையொட்டி மதுரை வீதிகளில் ஆலயப்பிரவேச ஆதரவு பொதுக்கூட்டங்கள் நடந்தன. அனைத்து நிகழ்ச்சிகளிலும் மேற்கண்ட தலைவர்கள் பங்கேற்று எழுச்சிமிக்க உரையாற்றினார்கள். ஆலயப்பிரவேச எதிர்ப்பாளர்கள் ஆலயப்பிரவேசத்திற்கு எதிர்ப்புக் கூட்டங்கள் நடத்தினார்கள். மதுரையில் ஆதரவு எதிர்ப்புக் கூட்டங்கள் முச்சந்திக்கு, முச்சந்தி நடந்தது. கலவரச் சூழல் எழுந்து விடுமோ என மக்கள் அச்சப்பட்டனர்.ஆலயப்பிரவேச எதிர்ப்பாளர்களுக்கு பிரபல வழக்கறிஞரும், ஆலயப்பிரவேச கமிட்டி தலைவர் வைத்தியநாத அய்யரின் தொழில் குருவுமான நடேச ஐயர் தலைமை தாங்கினார். கோயிலில், மீனாட்சியும், தீட்டுப்பட்டுவிடுவாள் என்பவர்களும், மீனாட்சி எப்போதும் தீட்டுப்படமாட்டாள் என்பவர்களும் வீதிகளில் கூடி நின்று விவாதித்தனர்.

இறுதியில் 1939-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 8-ஆம் நாளன்று தாழ்த்தப்பட்ட அரிசன மக்களையும் – நாடார் இனமக்களையும் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் ஆலயப்பிரவேசம் செய்து வைப்பது என முடிவானது.இதற்கான வேலைத் திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டன. கோயில் குருக்கள் அனைவரும் ஆலயப்பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களில் சாமிநாத பட்டர் என்ற ஒரே ஒரு அர்ச்சகர் தனது ஸ்தானிகர் பணி முறை அன்று தீண்டத்தகாதவர்களுக்கு அர்ச்சனை வழிபாடுகள் செய்வதற்கு முழுமனதுடன் ஒப்புதல் கொடுத்தார்.ஆலயப்பிரவேசம் நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பாக தனது பணி நாளில் சாமிநாத பட்டர் வடக்கு ஆவணி மூலவீதி வீதியிலிருந்த தனது வீட்டிலிருந்து பட்டமார் தெரு வழியாக கோயிலுக்கு புறப்பட்டார். ஆலயபிரவேச எதிர்பார்ப்பாளர்களும், அவர்களின் ஆதாரவாளர்களில் சிலரும் சாமிநாத பட்டர் ஆலயப் பிரவேசத்தை ஆதரித்ததால் அவர் மீது ஆத்திரமுற்று இருந்தனர். அவர்களில் சில விஷமிகள் சாமிநாதபட்டர் பட்டமார் தெருவை கடக்கும் போது அதிகாலை வேளையில் மாடியிலிருந்து அவர் தலையில் மலச்சட்டியைப் போட்டு உடைத்தனர்.இதனால் அதிர்ச்சியுற்ற சாமிநாத பட்டர் தனது தலையிலும், சட்டையணியாத தன் உடலிலும் மலம் வழிய நிலை குலைந்து போனார். அவமான கோலத்துடன் வீடு நோக்கி நடந்தார். தெருவே பதறியது. வீட்டில் இருந்த அவர் மனைவி பதட்டத்தில் உறைந்து போனார். பட்டரின் வீட்டின் பின்புறத்தில் பொன்னுச்சாமி பிள்ளை தெருவில் தியாகி தாயம்மாளின் வீடு. அவர் சாமிநாத பட்டரை தன் வீட்டிற்கு கூட்டிப்போய் குளிக்க வைத்தார். பட்டர் மீண்டும் கோயிலுக்கு பணியாற்றச் சென்றார்.

நிலைமையின் விபரீதம் வைத்தியநாத அய்யர் மூலம் முதலமைச்சர் ராஜாஜிக்குச் சென்றது. அவர் தனது தீவிர ஆதரவாளரும், ஆன்மிகத்தில் ஊறித்திளைத்தவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரிடம் ஆலயப்பிரவேசத்தை ஆதரிக்குமாறு கோரினார். ஆலயப் பிரவேச எதிர்பாளர்களும் பசும்பொன் தேவரை நாடினார்கள்.காந்தியடிகளின் கொள்கை வெற்றிபெற மக்கள் பேதமின்றி வாழ தீண்டாமைக் கொள்கை ஒழிய வேண்டுமென தேவர் முடிவெடுத்தார். “முக்குலம் மட்டுமல்ல எக்குலம் எதிர்த்தாலும் ஆலயப் பிரவேசத்தை ஆதரிப்பேன்’ என ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். எதிர்ப்பாளர்கள் அதிர்ந்து போனார்கள்.
ஆலயப்பிரவேச நாளுக்கு முதல்நாள் தியாகி தாயம்மாள் வீட்டில் சிந்துபட்டி உசிலம்பட்டி பகுதிகளில் இருந்து வந்த தாழ்த்தப்பட்ட மக்களும் நாடார் இன மக்களும் தங்க வைக்கப்பட்டனர். சிலர் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள காளி சடையன் கோவில் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் தாயம்மாளை அவரது உறவினர்கள் சாதியிலிருந்து ஒதுக்கி வைத்தனர். அதுபோல வைத்தியநாத அய்யரும் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டார்.

குறிப்பிட்ட நாள் வந்தது. எதுபற்றியும் கவலைப்படாத காந்திய நிர்மானப்பணியில் நாட்டம் கொண்ட தொண்டர்கள் ஆறு பேர் வைத்தியநாதய்யர் வீட்டில் குழுமினர். 1939 ஜூலை மாதம் 8-ஆம் நாள் அதிகாலை வைத்தியநாதய்யரின் டாட்ஜ் கார் புறப்பட்டது. காருக்குள் தமிழ்நாடு ஹரிஜன சேவாசங்க செயலாளர் எல்.என்.கோபாலசாமி, பி.கக்கன் கா.முத்து கருப்பையா, தியாகி.வி.முத்து உட்பட ஐந்து ஹரிஜனங்கள் நாடார் ஒருவர் ஆகிய ஆறுபேருடன் சென்று மீனாட்சி அம்மன் கோயில் தெற்கு கோபுர வாசல்முன் நின்றது.முதலில் கோபுர தரிசனம். கோயில் அறங்காவலர் நிர்வாகத் தலைவர் ஆர்.எஸ். நாயுடு வரவேற்று அழைத்துச் சென்றார். பின்னர் பொற்றாமரைக் குளத்தில் புனித நீரில் தூய்மைப்படுத்திக் கொள்ளுதல், விநாயகர் வழிபாட்டுடன் அனுமதிபெற்றனர். நேராக மீனாட்சி அம்மன் சந்நிதி சென்றடைந்தனர். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் காணமுடியாத அன்னை அங்கையற்கண்ணியை வழிப்பட்டனர். அர்ச்சகர் சாமிநாதபட்டர் தீபம், கற்பூரம், தூபம் என வழிபாடுகளை நியமமாக செய்து தீப ஒளியில் மீனாட்சியை காண்பித்தார். கண்ணீர் மல்க வழிபட்டனர். இது ஒரு உணர்வு பூர்வமான நிகழ்வு. இதன்பின்னர் சுந்தரேசுவரர் சந்நிதியிலும் வழிபாடு நடத்தி வைத்தார். காந்தியக் கொள்கையால் ஒரு அடிமைத்தனம் அறுத்தெறியப்பட்டது. கருவறையிலிருந்து வெளியேறிய குழுவினர் கீழச்சித்திரைவீதி, அம்மன் சந்நிதி வாயிலை நோக்கி விரைந்து நடந்தனர். நகரா மண்டபம், அம்மன் சந்நதி தெரு, கீழசித்திரைவீதியென அனைத்து தெருக்களிலும் மக்கள் வெள்ளம் அலைமோதியது.அனைவர் முன்னிலையிலும் ஆலயப்பிரவேசக்குழு தலைவர் வைத்தியநாத அய்யர் உயரத்தில் ஏறி நின்று ஆலயப்பிரவேசம் நிகழ்ந்ததை அறிவித்தார். தந்தி மூலம் முதல்வர் ராஜாஜிக்கும, மகாத்மா காந்தியடிகளுக்கும் தெரிவித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஒமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கும் தெரிவிக்கப்பட்டது. காந்தியடிகள் இதைக் கேட்டவுடன் “மதுரை மிராக்கல்’ என வியந்து வர்ணித்தார். அன்று பகல் முழுவதும் எவ்விதமான கலவரமும் இல்லை.ஆனால் அன்று இரவு நடக்க வேண்டிய அர்த்த சாம பூசை, பள்ளியறை பூசை எதுவும் நடைபெறவில்லை. மறுநாள் கோயில் பூட்டப்பட்டது. சாவிகள் ஒளித்து வைக்கப்பட்டன. மீனாட்சி தீட்டுப்பட்டுவிட்டாள் . பால மீனாட்சியாக வக்கீல் நடேச அய்யர் வீட்டில் பிறந்துவிட்டார் என மதுரை நகர் முழுவதும் செய்தி பரப்பட்டது. அர்ச்சகர்கள் மூன்று தினங்களாக கோயிலைத் திறக்க மறுத்தனர்.வைத்தியநாத அய்யர் மீதும் அரிசன சேவாலய செயலாளர் கோபாலசாமி மீதும் கிரிமினல், சிவில் வழக்குகள் தொடுக்கப்பட்டு சம்மன் கொடுக்கப்பட்டது. அய்யர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் சூழல் உருவானது.முதல்வர் ராஜாஜி உடனடியாக விரைந்து முடிவெடுத்தார். சட்டவல்லுனர்களுடன் விவாதித்து “மெட்ராஸ் டெம்பிள் எண்ட்ரி ஆத்தரைசேசன் ஆக்ட்’ என்ற அவசரச் சட்டம் அறிவிப்பு கவர்னர் மூலம் வெளியானது.

சட்டத்தின் நகல் போட் மெயில் ரயில் மூலம் அரசுப் பிரதிநிதியால் எடுத்து மதுரை கொண்டு செல்லப்பட்டது. கொடைக்கானலில் முகாமிட்டிருந்த கலெக்டரை மதுரை நீதிமன்றம் சென்று சட்ட நகலை அரசின் சார்பாக சமர்ப்பிக்கும்படி தொலைபேசியில் அறிவுறுத்தப்பட்டது. சட்ட நகல் வரும்வரை நீதிமன்றத்தில் வழக்கு பாஸ்டு ஓவர் செய்ய்பட்டது. சட்டத்தின் பிடியிலிருந்து வைத்தியநாத அய்யர் தப்பினார்.ராஜாஜி அன்றே மதுரைக்கு விரைந்தார். மதுரையின் மூன்று திக்குகளில் முதல்வர் ராஜாஜி மக்களிடத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார். ஆலயப்பிரவேசம் சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டது என்றார். “தீண்டாமை ஒழிப்பின் அங்கமான ஆலயப்பிரவேசத்திற்கு ஆதரவளித்து நின்றதற்கு நன்றி கூறுகிறேன்’ என்றார்.கோயிலைப் பூட்டியவர்கள் சட்டவிரோத செயல்களுக்காக நடவடிக்கைக்கு ஆளானர்கள். வைத்தியநாதய்யர் வெளியூர்களுக்கு சென்று அர்ச்சகர்களைக் கூட்டிவந்து கோயிலில் தினசரி அர்ச்சனை செய்வித்தார். மதுரை அமைதியடைந்தது. கோயிலைப் பூட்டியவர்கள் காவல் துறையினரின் நடவடிக்கைக்குப் பயந்து மன்னிப்புக் கோரினார்.

gandhi-called-mahatma_ed122cd988720068

1946 பிப்ரவரி 2-ஆம் நாள் காந்தியடிகள் மதுரை வந்தார். ஆலயத்திற்குள் தீண்டத்தகாதவர் உட்பட அனைத்து சாதியினரும் அனுமதிக்கப்படும்வரை கோயிலுக்கு வர மறுத்தவர். இப்போது கோயிலுக்கு வந்தார். அன்னை மீனாட்சியைக் கண்டு மெய்சிலிர்த்து நின்று வணங்கினார்.ஜாதிப்பிரதிஷ்டம் செய்யப்பட்ட வைத்தியநாதய்யர் மனைவி அகிலாண்டத்தம்மாள் இறந்த போதும், சாமிநாத பட்டரின் மனைவி மறைந்த போதும், தியாகி தாயம்மாள் வீட்டு குழந்தை இறந்தபோதும் உறவினர்கள் யாரும் அவர்கள் வீடுகளுக்குச் செல்லவில்லை.தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களும், நகர சுத்தி தொழிலாளர்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து பிணங்களை தங்கள் தோளில் போட்டி போட்டு சுமந்து சென்றனர். சாமிநாத பட்டருக்கு நடந்த அவமானம் கல்வெட்டில் பதியப்பட்டு இன்றும் அவரது வீட்டின் முகப்பில் உள்ளது. கேரள வைக்கம் தெருநுழைவும் மதுரை ஆலயப்பிரவேசமும், திருவனந்தபுரம் கோயில் நுழைவும் ஆயிரமாயிர ஆண்டு அவலங்களை நீக்கின. இளைய தலைமுறைக்கு இவை பாடமாக்கப்பட வேண்டும். காந்தி மகானின் சுவடுகளை வணங்கிப் போற்றுவோம்.

மு. சிதம்பரபாரதி