அநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்!

அநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்!

ஒவ்வொரு நாட்டின் பெருமை அதன் அடையாளம், தனித்தன்மை, மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக சுற்றுலாத்துறை அமைந்துள்ளது. இதில், உலகிலேயே அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகைத் தரும் இடங்களில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அப்பேர்பட்ட லண்டனில் உள்ள ஹைடு பார்க்கில் ( Hyde Park ) ஜீனா மார்ட்டின் என்ற அழகான உயரமான 24 வயது பெண் சுற்றிக் கொண்டிருந்தார். 2 வாலிபர்கள் பின்னால் தொடர்ந்தனர். பேச்சு கொடுத்து பிரண்டாக்க முயன்றனர். ஜீனா பிடி கொடுக்கவில்லை.

பிறகும் அவர்கள் பின் தொடர்ந்து வம்புக்கு இழுத்தனர். சடாரென்று திரும்பிய ஜீனா எச்சரித்தார். ஒருத்தன் அவருக்கு பதில் சொல்லும்போதே இன்னொருவன் செல்போனை ஜீனாவின் ஸ்கர்ட் டுக்கு கீழே நீட்டி போட்டோ எடுத்தான். ஷாக் ஆனாலும் துரிதமாக செயல்பட்டு அவனது செல் போனை பறித்தார் ஜீனா. ரோந்து போலீசை அழைத்து செல்போனை கொடுத்து, வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொன்னார். அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது அவருக்கு. ஸ்கர்ட்டுக்கு கீழே செல்போனை நீட்டி அந்தரங்கத்தை போட்டோ எடுப்பது இங்கிலாந்தில் சட்டப்படி குற்றம் இல்லையாம்.

அதெப்படி என்று ஜீனாவுக்கு ஆச்சரியம், அதிர்ச்சி. பெண் குளிப்பதை எட்டி பார்ப்பது, உடை மாற்று வதை ரகசியமாக படம் பிடிப்பது மாதிரியான வக்கிரங்கள் உலகம் முழுக்க நடக்கிறது. பல நாடு களில் இவை கிரிமினல் குற்றம். சில நாடுகளில் அப்படி இல்லை. இங்கிலாந்தும் அதில் ஒன்று. ஜீனா விடுவதாக இல்லை. தன் அனுபவத்தை பிபிசி வெப்சைட்டில் எழுதினார். பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். “என் கால்களுக்கு இடையில் செல் போனை நீட்டி போட்டோ எடுத்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து ரசிக்கிறார்கள். இதென்ன வக்கிரம்? இதென்ன மிருகத்தனம்? பெண்ணுக்கு அவள் உடல் மீது உரிமை இல்லையா? மானத்தை காப்பாற்ற பொறுப்பு இல்லையா?” என்ற ஜீனாவின் கேள்விகள் மெல்ல மெல்ல நாடு முழுவதும் பரவி ஆதரவை சேகரித்தது. ரயான் என்ற வக்கீல் நண்பரும் உதவி செய்தார்.

தனிநபர் மசோதாவாக தாக்கல் செய்து சட்டமாக்க பெண் எம்.பி.க்கள் முன்வந்தனர். ஒரு வெள்ளிக் கிழமை மதியம் 3 மணிக்கு மக்கள் சபையில் மசோதா தாக்கல் ஆனது. ஒரு 75 வயது எம்.பி எழுந்து “ஆட்சேபம்” என்றார். அவ்வளவுதான். மசோதா நிராகரிக்கப்பட்டது. பிரிட்டிஷ் பார்லிமென்டில் சில விசித்திர விதிகள் உண்டு. சனி, ஞாயிறு லீவு என்பதால் வெள்ளிக்கிழமையில் மசோதா வந்தால் விவாதிக்க நேரம் இருக்காது என்பதால் அன்று மதியம் தாண்டி ஏதேனும் மசோதா வந்தால் ஒரே ஒரு எம்.பி ஆட்சேபம் சொன்னாலும் உடனே பணால் என்பது அந்த விதிகளில் ஒன்று.

ஆனால் வெளியே இது வேறு மாதிரி பரவியது. பிரதமராக ஒரு பெண் இருந்தும் இப்படியா? என்று பேச்சு வலுத்ததால் பிரதமர் மே தலையிட்டு அரசாங்க மசோதாவாக தாக்கல் செய்ய முன்வந்தார். மக்கள் சபையில் நிறைவேறி, மேல்சபையான பிரபுக்கள் சபையிலும் புதனன்று நிறைவேறியது மசோதா. அப்ஸ்கர்ட்டிங் Upskirting என்று சொல்லப்படுகிற ஸ்கர்ட்டுக்கு கீழே கேமராவை நீட்டி படம் எடுப்பவர்களுக்கு 2 வருடம் ஜெயில் என்கிறது மசோதா. ராணி கையெழுத்து போட்டதும் சட்டம் அமலுக்கு வரும்.

“சட்டம், அரசியல் இதெல்லாம் பார்த்து யாரும் பயப்பட தேவை இல்லை. அநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்; மக்கள் ஆதரவு கிடைக்கும்; அதன் பிறகு அரசும் இறங்கி வரும்” என்று சொல்லி சிரிக்கிறார் ஜீனா.

அகஸ்தீஸ்வரன்

error: Content is protected !!