July 28, 2021

மருத்துவமனை என்ற பேரில் ரியல் எஸ்டேட் ; சுப்ரீம் கோர்ட் காட்டம்!

ம் நாட்டின் நான்காம் தூண் என்றழைக்கப்படும் சுப்ரீம் கோர்ட்டில் அவ்வப்போது அதிரடி வழக்குகள் விசாரணையும் அது குறித்த விவாதங்களும் அரங்கேறுவது வாடிக்கை. அப்படித்தான் நாடெங்கும் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து 6 உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்ததால் நிகழ்ந்த நன்மைகள் ஏராளம். அது போல் கடந்த வருடம் குஜராத் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா நோயாளிகள் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. அனைத்து மாநிலங்களும் மாவட்டம் தோறும் குழு அமைத்து மருத்துவமனைகளின் தீ தடுப்பு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தி மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது. நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ள மருத்துவமனைகளை மூடலாம் என்றும் பரிந்துரைத்தது எல்லாம் நினைவிருக்கும்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட் ஏ.ஓய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நாட்டில் உள்ள மருத்துவமனைகளை ரியல் எஸ்டேட் நிறுவனங்களாக நாங்கள் பார்ப்பதா அல்லது மனிதர்களுக்குச் சேவை செய்யும் நிறுவனங்களாகப் பார்ப்பதா?” எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில், “மனிதர்களின் துயரத்தில் செழித்து வளர்ந்து, மருத்துவமனைகள் பெரிய தொழிற்சாலைகளாக மாறியிருக்கின்றன. மனிதர்களின் உயிரை விலையாகக் கொடுத்து மருத்துவமனைகள் வளர்வதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது. இப்படி வளரத் துடிக்கும் மருத்துவமனைகளை மூடிவிடலாம். அதற்கு பதிலாக மாநில அரசு தேவையான மருத்துவக் கட்டமைப்பை மக்களுக்கு உருவாக்கலாம்.

நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளில் தீ தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. சமீபத்தில் கூட மருத்துவமனை ஒன்றில் கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒருவர், மறுநாள் மருத்துவமனையில் இருந்து செல்லவேண்டிய நிலையில், அங்கு ஏற்பட்ட தீ விபத்தால் அவர் உயிரிழந்தார். மேலும் செவிலியர்களும் தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த துயரங்கள் நம் கண்ணுக்கு முன் நடந்துள்ளன. இதுபோன்ற மருத்துவமனைகள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களா அல்லது மனிதர்களுக்குச் சேவை செய்யும் மருத்துவமனைகளா? மருத்துவமனைகள் தீ தடுப்பு விதிகளைப் பின்பற்ற 2022-ம் ஆண்டு வரை குஜராத் அரசு அவகாசம் கொடுத்துள்ளது என்றால், தொடர்ந்து மக்கள் தீ விபத்துகளால் பலியாகிக் கொண்டுதான் இருப்பார்கள் என்றுதானே அர்த்தம்.

தீ விபத்து நடந்த மருத்துவமனைகள் குறித்த விசாரணை அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த விசாரணை அறிக்கையில் அப்படி என்ன அணு ஆயுத ரகசியம் இருக்கிறது? குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்துகளில் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்தனர்.

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தீ தடுப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தணிக்கை செய்யவேண்டும்”. இவ்வாறு நீதிபதிகள் அமர்வு தெரிவித்து இந்த வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.