ஹாங்காங் மக்கள் போராட்ட எதிரொலி : சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு தடை!

கொலை செய்வது, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் சந்தேக நபர்களை சீனா, தைவான், மக்காவில் உள்ள அதிகாரிகள் ஒப்படைக்கும்படி கோரிக்கை வைத்தால், ஹாங்காங் அவர்களை ஒப்படைப்பதற்கு வழிவகை செய்யும் விதமாக ஹாங்காங் அரசின் சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து மசோதாவை தற்காலிகமாக கைவிட ஹாங்காங் அரசு முடிவு செய்துள்ளதாக ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் இன்று அறிவித்தார்.

முன்னதாக ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்க வழிவகை செய்யும் மசோதா ஒன்று ஹாங்காங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் சீன அரசுக்கு எதிராக குரல் கொடுப்போர் மீது தேசிய விரோத சட்டத்தின் கீழ் சீனா நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக ஹாங்காங் மக்கள் கருதுகிறார்கள். ஹாங்காங்கில் வளர்ந்து வரும் சீன ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் ஏற்கெனவே குரல் கொடுத்து வரும் நிலையில் இந்த மசோதா மக்களின் அச்சத்தை அதிகரித்துள்ளது.

அதை தொடர்ந்து இந்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ஜூன் 9ம் தேதி அமைதி பேரணி நடத்தினர். கடந்த 30 ஆண்டுகளுக்கு பின் ஹாங்காங்கில் நடைபெற்ற மிகபெரிய போராட்டம் இது.அன்று முதல் மக்களின் போராட்டம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. ஹாங்காங் நாடாளுமன்றம், அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டன. சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டதால் போக்குவரத்து முடங்கியது.

போராட்டக்காரர்கள் மீது ஹாங்காங் போலீசார் தடியடி, கண்ணீர் புகைகுண்டுகள், ரப்பர் குண்டுகள் ஆகியவற்றின் மூலம் தாக்குதல் நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். போலீசார் நடத்திய தாக்குதலில் 79 பேர் காயமடைந்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் தொடர்ந்து ஒன்று திரண்டதால் அவர்களை கட்டுப்படுத்த போலீசாரால் முடியவில்லை. இதற்கிடையில் போராட்டம் காரணமாக மசோதா மீதான நாடாளுமன்ற விவாதம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மசோதாவிற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

தற்போது ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிரான மக்கள் போராட்டம் காரணமாக ஹாங்காங் அரசுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்தது. அதை தொடர்ந்து மசோதாவை தற்காலிகமாக கைவிட ஹாங்காங் அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து இன்று செய்தி யாளர்களிடம் பேசிய ஹாங்காங் அரசின் தலைவர் காரி லாம் ‘‘ அரசு இந்த மசோதாவை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளது. இந்த மசோதா குறித்து சமூகத்தின் அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அவர்களின் கருத்துகள் கேட்டறியப்படும். இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் முன் நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினர்களுடன் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

எங்களது முயற்சியில் ஏற்பட்ட தவறு மற்றும் பிற காரணங்களால் இந்த மசோதா பற்றிய தவறான வதந்திகள் பரவிட்டன. அதற்காக நான் வருத்தப்படுகிறேன். எனவே சிறிது காலத்துக்கு இந்த மசோதாவை ஒத்தி போடுவதில் தவறில்லை என்று கருத்துகிறோம்’’ என்று காரி லாம் தெரிவித்தார். காரி லாமின் இந்த முடிவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆதரித்தாலும் மக்களின் அழுத்தத் திற்கு அடிப்பணிவது சரியல்ல என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மசோதா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படும் என்று ஹாங்காங் அரசு அறிவித்ததை ஏற்காத போராட்டக்காரர்கள் நாளை திட்டமிட்டப்படி அமைதி பேரணி நடக்கும் என்று அறிவித்துள்ளனர். ஹாங்காங் அரசு சர்ச்சைக்குரிய இந்த மசோதாவை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. தற்காலிகமாக கைவிடுவது அல்ல. எனவே நாளை திட்டமிட்டப்படி எங்கள் போராட்டம் தொடரும் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களை ஏமாற்ற ஹாங்காங் அரசு மேற்கொள்ளும் இதுபோன்ற சதி செயல்களை கண்டு நாங்கள் ஏமாற மாட்டோம். நாளை நடக்கும் அமைதி பேரணியை தொடர்ந்து திங்கள்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.