August 12, 2022

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து பெட்ரோல், டீசல் சப்ளை!

நம் நாட்டில் உடனடியாக நடைமுறைக்கு வராத திட்டங்கள் அவ்வப்போது தீட்டி அதை செய்தியாக வெளியிடுவது வாடிக்கைதான், அந்த வகையில்  சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் போல பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளையும் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் திட்டம் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
petrol apr 23
இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் அவர்கள் வீட்டிலேயே சென்று விநியோகம் செய்யப்படும். இதனால், வாடிக்கையாளர்கள் பெட்ரோல் நிலையங்களில் அதிக நேரம் காத்திருந்து நேர விரயம் செய்வதை தவிர்க்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததாக அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, “ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களை மூடுவதாக ஒருசில பெட்ரோல் விற்பனையக உரிமையாளர்கள் எடுத்துள்ள முடிவில் அரசுக்கு எவ்வித உடன்பாடுமில்லை” என அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஸ்ரீநகரில் தெரிவித்தார்.
முன்னதாக மே மாதம் 14-ம் தேதி முதல் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறையாக இருக்கும் என தமிழ்நாடு, புதுச்சேரி பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உரிமையாளர்கள் சங்கம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.
பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் எரிபொருள் சேமிப்பு குறித்து பேசியதை அடுத்து இந்த முடிவை எடுத்ததாக அந்த அமைப்புகள் அறிவித்திருந்தன.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் அவதிப்படுவதாக புகார்கள் எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்ததால் அந்த அறிவிப்பு கைவிடப்பட்டதாக தெரிகிறது.