ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்!

ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்!

இந்திய ஹாக்கியின் முன்னாள் வீரர் பல்பீர் சிங் சீனியரின் மரணத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். தன் அஞ்சலிச் செய்தியில், ‘பல்பீர் சிங் சீனியரின் மறைவைக் கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். ஒலிம்பிக்ஸ் போட்டியில் மூன்று முறை தங்கம் வென்றவர், பத்மஸ்ரீ விருது பெற்றவர், இந்தியாவின் மகத்தான விளையாட்டு வீரர்… என அவருடைய சாதனைகள் வருங்காலத் தலைமுறைக்கு எப்போதும் ஊக்கமாக இருக்கும். அவருடைய குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இது போல் பிரதமர் மோடி, ‘பத்மஸ்ரீ பல்பீர் சிங் சீனியர், தன்னுடைய சாதனைகளுக்காக நினைவுகூரப்படுவார். இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளையும் பெருமைகளையும் அளித்தவர். அற்புதமான ஹாக்கி வீரராக மட்டுமல்லாமல் நல்ல ஆலோசகராகவும் இருந்துள்ளார். அவருடைய மரணம் எனக்கு வேதனையைத் தருகிறது. அவருடைய குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

திடீரென வந்த மூச்சுத்திணறல், அதிக காய்ச்சல் என கடந்த 8-ம் தேதி மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருந்த பல்பீர் சிங் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 6.30 மணிக்கு காலமானார். 95 வயதான பல்பீர் சிங் இந்தியாவிற்காக ஹாக்கி விளையாட்டில் பல்வேறு சாதனை நிகழ்த்தியுள்ளார். 1948, 52, 56 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றதற்கு பல்பீர் சிங் முக்கிய காரணமாவார்.

1952 ல் உதவி கேப்டனாகவும், 1956 ல் கேப்டனாகவும் செயல்பட்டு தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றவர். 1956 ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்திற்கு எதிராக இந்திய அணி 6-1 என அபார வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றியது. இதில் ஐந்து கோல்களை பல்பீர் சிங் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தார். இதனாலேயே பல்பீர் சிங் சீனியர் என சக வீரர்களால் அழைக்கப்பட்டார். இறுதி ஆட்டத்தில் இவர் அடித்த ஐந்து கோலை இன்று வரை எவராலும் முந்த முடியவில்லை. அவர் மறையும் வரை அந்த சாதனையை எவராலும் முறியடிக்கப்படவில்லை.

1975 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றபோது பல்பீர் தலைமைப் பயிற்சியாளராகவும் மேலாளராகவும் இருந்தார். 1957-ல் பத்மஸ்ரீ விருது பல்பீர் சிங்குக்கு அளிக்கப்பட்டது. பல்பீர் சிங் சீனியரின் மறைவுக்கு சச்சின் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

error: Content is protected !!