October 18, 2021

எய்ட்ஸ் நோய்-யிலிருந்து இனி குணமடைய வாய்ப்பு அதிகம்!

சர்வதேச அளவில் குணப்படுத்த முடியாத வியாதி எனப்படும்  எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச் ஐ வி கிருமிகளின் தாக்குதலில் இருந்து லண்டன் நகர எய்ட்ஸ் நோயாளி ஒருவர் பூரண குணம் அடைந்துள்ளார். 1980 களில் தொடங்கியதில் இருந்து எய்ட்ஸ் தொற்று நோய்  35 மில்லியன் மக்களைக் கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது .

தற்போது ஹெச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்ட நபருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதன் மூலம் எய்ட்ஸ் வைரஸ் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பின் ஹெச்.ஐ.வி நோய்த்தாக்கத்தை எதிர்க்கும் அரிய மரபணு மாற்றத்தைக் கொண்டிருக்கும் எலும்பு மஜ்ஜை தண்டு செல்களை பெற்று பாதிக்கப்பட்டவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் ஹெச்.ஐ.வி நோய்க்கான எந்த தடயமும் தற்போது இல்லை.

பேராசிரியர் மற்றும் ஹெச்.ஐ.வி உயிரியலாளர் ரவீந்திர குப்தா, “ மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் ஹெச்.ஐ.வி இருந்தத்தற்கான சுவடே இல்லையென்று என்று தெரிவித்தார். “ஆராய்ச்சியாளர்கள் இனி தன்னுடைய ஆய்வின் மூல எய்ட்ஸ்க்கு முடிவு கட்ட முடியும் என்பதுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக அவரது உடலில் எய்ட்ஸ் நோய் கிருமிகள் இல்லை என்று மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அவரது உடலில் இருந்து பெறப்பட்ட ரத்தம் பலமுறை சோதிக்கப்பட்டு எச் ஐ வி கிருமி அவர் உடலில் இல்லை என மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும் ஒரே மாதிரியான சிகிச்சை முறையின் மூலம் எய்ட்ஸ் நோயிலிருந்து விடுதலை பெற்ற இரண்டாவது நோயாளி அவர். ஆனால் நோயாளியைப் பற்றிய தகவல்களை வெளியிடக் கூடாது என்ற மருத்துவ மரபுப்படி லண்டன் வாசியான அந்த நோயாளிக்கு லண்டன் நோயாளி என்றே மருத்துவர்கள் பெயர் வைத்தனர்.

இவர் பெற்ற சிகிச்சை முன்னர் பெர்லின் நகரில் உள்ள ஒரு எய்ட்ஸ் நோயாளிக்கு தரப்பட்டது. அவர் பூரண குணம் அடைந்து விட்டார் அதனால் எய்ட்ஸ் நோயிலிருந்து முதலில் விடுதலை பெற்றவர் பெர்லின் நோயாளி என்றும் லண்டனில் வசித்த நோயாளி லண்டன் நோயாளி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

அது சரி.. பெர்லின் நோயாளியும் லண்டன் நோயாளியும் எத்தகைய சிகிச்சை பெற்றார்கள்?

மனித உடலில் உள்ள மரபணுக்கள் மாற்றம் பெற்று வருகின்றன என்பதை மருத்துவர்களும் அறிவியல் உலகமும் உறுதி செய்துள்ளன. இப்படி மரபணு மாற்றம் பெற்ற சில மனிதர்கள் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப் படாமல் உள்ளனர். இவர்களின் மரபணு மாற்றங்களை மருத்துவர்கள் துருவித் துருவி ஆய்வு செய்து அவர்கள் எதிர்ப்புத்திறன் பெறுவதற்கான காரணத்தை கண்டு பிடித்துள்ளனர்.

உடலில் சி சி ஆர் 5 டெல்டா 32 என்ற மரபணு மாற்றம் பெற்றவர்கள் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப் படுவதில்லை. இந்த மரபணு மாற்றம் காரணமாக எய்ட்ஸ் கிருமிகள் நோயாளியின் உடலில் உள்ள செல்களில் நுழையமுடியாமல் தடுக்கப்படுகின்றன.

வழக்கமாக வைரஸ்கள் நோயாளியின் உடலில் உள்ள செல்களில் சி சி ஆர் ஐந்து என்ற பகுதிகளில் ஒட்டிக் கொள்கின்றன ஒட்டிக்கொள்ளும் இடத்தில் நோயாளியின் உடலில் உள்ள செல்களின் ஜவ்வு அழிந்து விடுகிறது.

அதனால் எச்ஐவி வைரஸ் நோயாளியின் செல்லுக்கு உள்ளே நுழைந்து தன்னுடைய ஒற்றை இழை ஆர் என் ஏ துணுக்குகளை பிரதி எடுத்து புதிய எச்ஐவி வைரஸ் கிருமியை உருவாக்க முடிகிறது. இதனைத் தடுத்து விட்டால்  நோயாளியின் உடலில் உள்ள செல்லுடன் எச்ஐவி வைரஸ் ஒட்டிக் கொள்ள முடியாத நிலையில் எச்ஐவி வைரஸ் தொடர்ந்து உயிர் வாழ முடிவதில்லை.

நோயாளியின் நோய் எதிர்ப்பு திறன் காரணமாக எச்ஐவி வைரஸ் கொல்லப்படுகிறது. இந்த நடைமுறையை உணர்ந்த மருத்துவர்கள் லண்டன் நோயாளிக்கு வழக்கமான எச்ஐவி வைரஸ் தொற்றுக்கு எதிரான மருந்துகளையும் தொடர்ந்து அளித்து வந்தனர். அதேசமயம் மரபணு மாற்றப்பட்ட ஸ்டெம் செல் தொகுப்பை நோயாளியின் எலும்பு மஜ்ஜையில் செலுத்தி மரபணு மாற்றம் பெருக வகை செய்தனர்.

எச்ஐவி வைரஸ் ஒட்டிக்கொள்ள இடம் அளிக்காத மரபணு மாற்றம் பெற்ற சி சி ஆர் 5 டெல்டா 32 உள்ள மரபணுக்கள் பெருகியதும் வைரஸ் கிருமிகள் அதில் ஒட்டிக் கொள்ள முடியாமல் அழியத் தொடங்கின.

இதன் காரணமாக நோயாளியின் உடலில் உள்ள எச் ஐ வி கிருமிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவதால் நோயாளிகள் படிப்படியாக பூரண குணம் அடையும் நிலை ஏற்படுகிறது என மருத்துவர்கள் விளக்கம் தந்தனர்.

இந்த கருத்தை வேறு சில மருத்துவர்கள் முழுக்க ஏற்றுக் கொள்ளவில்லை. சி சி ஆர் 5 டெல்டா 32 மாற்றம் காரணமாக எய்ட்ஸ் கிருமிகள் பெருக விடாமல் தடுக்கப்படுகின்றன என்பது உண்மைதான் ஆனால் மரபணு மாற்றம் அடைந்த பகுதிகள்  ஸ்டெம் செல்கள் மூலம் பெருக்கம் அடையும் பொழுது உடலில் ஏற்கனவே உள்ள நோய் எதிர்ப்பு திறன் காரணமாக ஒவ்வாமை விளைவுகளும் ஏற்படுகின்றன. இந்த ஒவ்வாமை விளைவுகளும் எயிட்ஸ் கிருமிகள் அழிய உதவுகின்றன என்று சில மருத்துவர்கள் கருதுகின்றனர்.

நோயாளியின் உடலில் இருந்த எய்ட்ஸ் கிருமிகள் இப்பொழுது இல்லை என்பதை உறுதியாக கூறும் மருத்துவர்கள் அந்த எய்ட்ஸ் கிருமிகள் எப்படி அழிக்கப்பட்டன என்பதை உறுதியாக விளக்க முடியாமல் உள்ளனர். இதன் தொடர்பாக மேலும் ஆய்வுகள் அவசியம் என்றும் டாக்டர்கள் சொல்வதுதான் கொஞ்சம் பின்னடைவை தருகிறது.