March 25, 2023

ஹிட்லர் வரைஞ்ச ஓவியம் விலை போகலை! – ஏன் தெரியுமா?

ஜெர்மனியின் சர்வாதிகாரி , சர்வதேச கொடுங்கோலன் என்றெல்லாம் பெயரெடுத்த ஹிட்லர் காதல் மன்னன் என்று பலருக்கு தெரிந்திருக்கக் கூடும்.அப்பேர்பட்ட ஹிட்லர் வரைந்த ஓவியம் ஒன்று தற்போது ஏலத்தில் விலை போகாத சம்பவம் நடந்து விட்டது.

ஜெர்மனியின் சர்வாதிகாரியும் , யூத மக்களைக் கூட்டமாக அழித்து இனப்படுகொலை நிகழ்த்தி யவருமான அடால்ஃப் ஹிட்லர் ஓவியம் வரைவதிலும் வல்லவராக இருந்தவர்.

முதல் உலகப் போருக்கு முன்னர் வரை வறுமைப் பிடியில் இருந்த ஹிட்லர் 2,000 ஓவியங்கள் வரை வரைந்தார். இந்நிலையில் அவ்வப்போது ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் பிரபல ஏல நிறுவனங்களால் உலகின் பல்வேறு இடங்களில் ஏலத்துக்கு விடப்படும்.

அந்த வகையில் ஜெர்மனியின் நுரம்பெர்க் நகரில் நடத்தப்பட்ட ஏலத்தில் வாடிக்கையாளர்களால் ஹிட்லரின் படம் ஏலத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இதுகுறித்து ஜெர்மனி பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில், ”ஹிட்லர் வரைந்த அந்த ஓவியம் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அந்த ஓவியத்தின் ஆரம்ப விலை 21,500 டாலராக இருந்தது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது ஹிட்லரின் ஓவியங்கள் என்ற பெயரில் போலிகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன என்ற செய்தி பரவியதன் காரணமாக இந்த ஓவியம் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதத்தில் நம்பகத்தன்மை அடிப்படையில் ஹிட்லரின் மூன்று ஓவியங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.