ஃபேர் அண்ட் லவ்லி க்ரீமில் இனி ஃபேர் என்ற வார்த்தை இடம் பெறாதுங்கோ!
கருப்பா இருக்கறவங்க சிகப்பா ஆக வேண்டுமென்றும், சிகப்பாக இருப்போர் அழகு இன்னும் சிகப்பாக ஆக வேண்டும் என்று ஆசை படுவது நம்மில் அநேகருக்குண்டு. அப்படியான ஆசையை மூலதனமாக வைத்து சந்தையில் உள்ள அழகு சாதன பொருட்களில் பல வருடங்கள் பிரபலமாக இருந்து வரும் நிறுவனங்களில் ஒன்று ஃபேர் அண்ட் லவ்லி.
சுமார் 40 ஆண்டுகளாக டிவி விளம்பரம் மூலம் கவர்ந்து ஆண்கள் முதல் பெண்கள் வரை தங்கள் அழகிற்காக பயன்படுத்தும் பிரபலமான அழகு சாதன கிரீம்களில் ஒன்றுதான் இந்த ஃபேர் அண்ட் லவ்லி.ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான இந்த ஃபேர் அண்ட் லவ்லி பலர் தங்களின் சிவப்பழகை கூட்டுவதற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதன் பெயரில் இருக்கும் ஃபேர் என்ற வார்த்தை போன்றே இதனை பயன்படுத்தினால் அனைவரும் சிவப்பாக மாறிவிடலாம் என இந்நிறுவனம் பலவருடங்களாக விளம்பரம் செய்துவருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கறுப்பின மக்களின் மீது நடத்தப்படும் வன்முறைக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துவரும் நிலையில் ஃபேர் அண்ட் லவ்லி என்ற பெயரில் இருந்து ஃபேர் என்ற வார்த்தையை நீக்க உள்ளது ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம்.
ஃபேர், வொய்ட், லைட் போன்ற வார்த்தைகளே அழகு என்று அடையாளப்படுத்தப்பட்டது தவறு என்று தாங்கள் கருதுவதாகவும் கறுப்பு என்பது அழகு குறைவானது. சிவப்பாக மாறுவதே அழகு எனப் பொருள் தரும்படி உள்ளதால், இந்த ஃபேர் என்ற வார்த்தையை நீக்க இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. பெயர் மாற்றத்திற்கான ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பெயர் மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.