தலித் உடலை எரிக்க உயர்ஜாதியினர் தடை : காட்டில் எரித்த அவலம் -ஹிமாச்சல் பிரதேச சோகம்!

நாடு முழுவதும் இந்திய பதிவாளர் ஜெனரல் மூலம் எடுக்கப்பட்ட சமூக பொருளாதார அடிப்படையிலான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில், மொத்தம் 46 லட்சம் ஜாதிகள், உட்பிரிவுகள், வம்சங்கள் உள்ளன என்று முன்னரே அரசு தரப்பில் ஒரு தகவல் வெளியான நிலையில் ஹிமாச்சல பிரதேசம் குல்லு மாவட்டத்தில் தங்கள் உறவினரின் உடலை எரிக்க வந்த தலித் குடும்பத்தினரை சில உயர்ஜாதியினர் சுடுகாட்டில் நுழைய விடாமல் தடுத்ததால் வேறு வழியில்லமல் உறவினரின் உடலை காட்டில் எரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நம் நாட்டிலேயே திறந்தவெளி அசுத்தம் இல்லாத 2-வது மாநிலம் என்ற பெருமை பெற்றது ஹிமாச்சலப் பிரதேசம். அதே ஹிமாச்சல பிரதேசத்தின் ஃபோசல் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள தாரா கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த சுமார் 100 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உடல்நிலை காரணமாக வியாழக்கிழமை (ஏப்ரல் 11ம் தேதி) உயிர் இழந்தார்.அந்த மூதாட்டியின் குடும்பத்தினர் அவரது உடலை எரிக்க கிராமத்தின் சுடுகாட்டிற்கு கொண்டு சென்ற போது உயர்ஜாதி வகுப்பை சேர்ந்த சிலர் அவர்களை சுடுகாட்டில் நுழையவிடாமல் தடுத்ததாக அந்த மூதாட்டியின் பேரன் தாபே ராம் குற்றம்சாட்டினார்.

அப்போதைய தாபே ராமின் வாக்குமூலம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ‘‘தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மூதாட்டியின் உடலை அந்த சுடுகாட்டில் எரித்தால் கடவுள் கோபத்துக்கு ஆளாக நேரும். ஒருவேளை அவ்வாறு நடந்தால் அதற்கு எங்கள் குடும்பம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று மேல்ஜாதிக் காரர்கள் எங்களை மிரட்டினர். எனவே வேறு வழியின்றி எங்கள் பாட்டியின் உடலை அருகில் உள்ள காட்டிற்கு கொண்டு சென்று எரித்தோம்’’ என தாபே ராம் தன் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் கிராமத்தினரிடம் விசாரித்து வருவதாக குல்லு மாவட்ட துணை ஆணையர் யூனுஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதே சமயம் இந்த விவகாரம் குறித்து யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. நாங்கள் உண்மையை கண்டறிய தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இந்த சம்பவம் உண்மை என தெரியவந்தால் சம்பந்தப்பட்ட யாரும் தப்ப முடியாது என்று துணை ஆணையர் யூனூஸ் தெரிவித்தார்.