ஹிஜாப் & காவி விவகாரத்தை தேசிய அளவில் கொண்டு வர வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் கவலை!

ஹிஜாப் & காவி வழக்கில் கர்நாடக ஐகோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மாணவிகள் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் ஹிஜாப்-காவி சால்வை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரித்த கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு,” பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கிறோம். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், தீர்ப்பு வரும்வரை மாணவர்கள் எந்தவிதமான மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளையும் அணிந்து செல்ல அனுமதியில்லை” என்று வாய்மொழியாக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தது. இதையடுத்து கர்நாடகாவில் திங்கள்கிழமை முதல் 9,10 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி மாணவர்கள் யாரும் மதம் சார்ந்த ஆடைகளை அணிந்துவரக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஐகோர்ட் விதித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டைஅணுகியுள்ளனர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு மாணவிகளின் மேல்முறையீட்டு மனு இன்று பட்டியலிடப்பட்டது. அப்போது மாணவிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவதத் காமத், “மாணவர்கள் எந்தவொரு மத அடையாளத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஆடை அணிந்து செல்ல ஐகோர்ட் விதித்த தடை உத்தரவுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இது முஸ்லிம்களுக்கு மட்டுமில்லாமல், மற்ற மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். இந்த தடை உத்தரவு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25கீழ் சொல்லப்பட்டுள்ள உரிமைகள் முழுமையாக பறிக்கப்படுவதைக் குறிக்கிறது” என்று வாதாடினார்.

இதை கேட்டு விட்டு “கர்நாடக மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம். இந்த விவகாரத்தை தேசிய அளவில் கொண்டு வர வேண்டுமா என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். இதனால் சில தேர்வுகள் தடைப்பட்டால், உரிய நேரத்தில் நாங்கள் தலையிடுவோம்” என்று கூறிய தலைமை நீதிபதி அமர்வு, ஹிஜாக் வழக்கை விசாரிக்க மீண்டும் மறுப்பு தெரிவித்தது.

முன்னதாக, ஹிஜாப் தொடர்பான வழக்குகளை அவசர வழக்ககாக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் கபில் சிபில் வைத்த கோரிக்கையையும் நேற்று உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.