December 7, 2022

ஏ.ஆர். ரஹ்மான் கதை & தயாரிப்பில் உருவாகியுள்ள ‘99 சாங்ஸ்’ -விழா ஹைலைட்ஸ்!

சைப்புயல் என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரரான ஏ.ஆர். ரஹ்மான் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘99 சாங்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் முன்னணி இசையமைப்பாளர்கள் யுவன், அனிருத், ஜி.வி.பிரகாஷ், முன்னணி நடிகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, முன்னணி இயக்குநர்கள் ஷங்கர், கவுதம் மேனன், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.இந்தப் படத்தை விஷ்வ கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருக்கிறார். அஹன் பட், ஏடிசி வர்கீஸ், டென்சின் தல்ஹா உள்ளிட்ட புதியவர்கள் நடித்துள்ளனர். இசை துறையில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் ஒரு இசை கலைஞரின் வாழ்க்கைப் பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இதில் புதுமுக நடிகராக இஹான் என்பவர் அறிமுகமாகிறார். தமிழ் , தெலுங்கு , இந்தியில் தயாராகியுள்ள இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 16 ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளது

இந்நிலையில் நேற்றைய விழாவில் இசையமைப்பாளர் அனிருத் பேசியது:

“நான் சிறுவயதில் முதன்முதலாகக் கேட்க ஆரம்பித்தது ‘காதலன்’ பட பாடல்கள். அது தான் எனக்கு முதல் ஊக்கமாக அமைந்தது. பள்ளிக்காலங்களில் நானும் எனது நண்பர்கள் அனைவரும் ரஹ்மான் வெறியர்களாக இருந்தோம். அவரது பாடல் கேசட் வெளியானதும் முதல் நாளே எப்படியாவது போய் வாங்கி விடுவோம். அவரது பாடல் கேசட்களைத்தான் பலமுறை கேட்டுத் தேய்ந்து மீண்டும் போய் வாங்குவோம். இதே அனுபவம் அனைவருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனக்கும் எனது நண்பன் லியோனுக்கும் ரஹ்மான் சார் ஒரு கீ போர்ட் பரிசளித்தார். இசையைத் தேர்ந்தெடுக்க அதுதான் முக்கிய காரணமாக அமைந்தது. இப்போதும் அவர் புதிய விஷயங்களை முயற்சி செய்வது எங்களைப் போன்ற இளம் தலைமுறையினருக்கு ஊக்கமாக இருக்கிறது”

இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது:

நேத்திக்கு திடீர்னு சாரே போன் பண்ணி வரச் சொன்னார்.. ரஹ்மான் சாரின் பாடல் மற்றும் இசையுடன் தான் நான் வளர்ந்தேன். இப்போது அவருடைய ‘அயலான்’ பட பாடல்களால் வளரப் போகிறேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறு வயதில் இருந்தே ரஹ்மான் சாரை பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. விஜய் டிவியில் ஒரு இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆங்கரான என்னிடன் அப்போது நிறைய பேசக் கூடாது, குறைவா பேச வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் தொகுப்பாளர் என்பதால் புத்திசாலித்தனமாக எதையாவது கேட்க வேண்டும் என்று கேள்விகளை ஒரு மணி நேரத்துக்கு தயார் செய்து வைத்திருந்தேன். அந்த வகையில் அவரிடம் “ஆஸ்கர் வாங்குவதற்கு முன்பு இருந்த ரஹ்மானுக்கும் இப்போது இருக்கும் ரஹ்மானுக்கும் என்ன வித்தியாசம்?” என்று ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு அவர் “வயசுதான்” என்று சொல்லி சிரித்து விட்டு போய் விட்டார். பிரமிச்சு போயிட்டேன்.. இவ்வளவு சுருக்கமான பதிலை நான் எதிர்பார்க்க வில்லை.

என் அப்பா ரஹ்மான் சாரின் மிகப்பெரிய ரசிகர். நான் அவருடன் இணைந்து பணிபுரிகிறேன் என்று நினைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. எத்தனை வருடம் ஆனாலும் எத்தனை சாதனைகள் புரிந்தாலும் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு ரஹ்மான் சார் ஒரு உதாரணம். அவர் எது செய்தாலும் அதில் ஒரு சர்வதேச தரம் இருக்கும். இந்த மேடையில் ரஹ்மான் சாரிடம் ஒரு வேண்டுகோள்- எனக்கும் உங்க தயாரிப்பில் நடிக்க ஒரு சான்ஸ் கொடுங்க

ஏ. ஆர். ரஹ்மான் பேசியது:

நான் நம்ம தமிழ் சினிமாவில் இசை இயக்குநராக என் வாழ்க்கையைத் தொடங்கினேன். அதன் பிறகு நான் மும்பை சென்றேன். அங்கேயும் வென்றேன். அதன் பிறகு நான் அமெரிக்கா சென்றேன். அவர் என்னிடம் கேட்டார், உங்களிடம் கதை இருக்கிறதா? அவர்கள் கேட்கும்போது என் கையில் கதை இல்லை. அப்போதுதான்நாம் ஏன் கதையை எழுதக் கூடாது என்று நினைக்கும் போது தான். 99 பாடல்கள் மற்றவர்கள் எப்படி கதையை எழுதுகிறார்கள் என்பது பற்றி நான் எழுதிய கதை.

ஆனால் சிலர் இதை என் கதை என்று அழைக்கிறார்கள். நிச்சயமாக இல்லை, நான் எழுதிய கதை. எனது கதை எல்லோருடைய வீட்டிலும் நடக்கும் கதை. ஒரு தாய் தன் குழந்தையை அதிக உயரத்திற்கு அழைத்துச் செல்வது பற்றியே எனது கதை. மூன்று நான்கு வருடங்களாக 99 பாடல்களின் கதை எழுதினேன். நான் அதில் ஆடிஷன் செய்ய 750 பேரை தேர்வு செய்தேன். இசையைக் கற்றுக்கொள்வதற்கும் பின்னர் நடிப்பதற்கும் ஒரு வருடம் எடுத்துக் கொண்டோம்