October 4, 2022

யூகலிப்டஸ், சில்வர் ஓக் உள்ளிட்ட வெளிநாட்டு மரங்களை அகற்ற ஆய்வுக் குழு!

தமிழக வனங்களில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் யூகலிப்டஸ், சில்வர்ஓக் உள்ளிட்ட வெளிநாட்டு மரங்களை அகற்ற ஆய்வுக் குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இன்று நாம் காணும் நகரங்கள் தோன்றுவதற்க்கு முன்பாக பெரும்பாலான நிலப்பரப்புகள் இயற்கை எழிலுடனே காணப்பட்டன. நாளடைவில் மனிதனின் பேராசைகளும், இயற்கைக்கு முரண்பட்ட எண்ணிலடங்கா செயல்களும் இணைந்து அந்நகரங்களை முற்றிலும் ஓர் செயற்கை அமைப்பாக மாற்றிவிட்டன. இந்நாளில் எவ்வாறு அந்நிய பொருட்கள் நம் உள்ளூர் சந்தையில் நீங்கா இடம் பிடித்துள்ளனவோ அவ்வாறே நம் மண்ணிற்கும், இயற்கை சூழலுக்கும் பொருந்தாத பல மரங்கள் நம்முடைய மண்ணை ஆக்கிரமித்துள்ளன. எப்படி மேலைநாட்டு பழக்க வழக்கங்களும், உணவுப் பொருட்களும், உடைப்பழக்கங்களும் நம்முடைய உடலை சீரழிக்கின்றனவோ அதைப்போலவே மண்ணிற்கு ஒவ்வாத அந்நிய நட்டு மரங்களும், செடிகளும், கொடிகளும் நம் மண்ணில் வளத்தை சீரழிப்பதோடு மட்டுமல்லாமல், உள்நாட்டு தாவரங்களின் வாழ்க்கையையும் கெடுக்கின்றன.

அதாவது மரங்களுக்கும், மக்களுக்கும் ஒரு இணக்கமான பாசப்பிணைப்பு எப்போதுமே இருந்து உள்ளது. ஆனால் இன்றைக்கு அப்படி ஒரு மரம் இருந்ததா என்று கேட்பது மாதிரி ஆகிலிட்டது. மரங்களை இழந்து நாம மழையையும் இழந்து விட்டோம். நம் தமிழகத்தில்‘உசில்‘ மரங்கள் நிறைஞ்சு இருந்த இடம்தான் உசிலம்பட்டி. ‘இலுப்பை‘ மரங்கள் நிறைஞ்ச பகுதி இலுப்பையூர், ‘விளாமரம்‘ இருந்த இடம் விளாத்திகுளம், ‘வாகை‘ மரங்கள் செழித்த பகுதி வாகைகுளம். இன்னும் ஆலங்குளம், அத்தியூர், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம், தாழையூத்து இப்படி பல ஊர்ப் பெயர்களில் மரங்கள் இருக்கின்றன. ஆனால், இன்றைக்கு அந்தந்த ஊர்களிலேயே அந்த மரங்களை காணோம்.

அதற்கு பதிலாக ‘தைல‘ மரம், ‘சீமைக் கருவேலம்‘, ‘தூங்கு மூஞ்சி‘ ன்னு விதவிதமா வெளிநாட்டு மரங்கள் ஆக்கிரமிப்பு. இந்த மரங்கள் சீக்கிரமே வளர்ந்து விடும். அதிக அளவு நீரையும் உறிஞ்சும். இதனால புல்வெளிகளுக்கு நீர் கிடைக்காமல் அழிய, அதை நம்பி வாழும் கால்நடைகளும் குறைந்து, உயிர் சுழற்சியே மொத்தமாக மாறிவிட்டது. பார்த்தீனியம் செடிகள் நீர்நிலைகளை அழித்து விட்டன. இப்படி வளரும் மரங்களில் காய்கள், பழங்கள் எதுவுமே வராது. அதனால் பறவைகளும் இல்லாமல் போய் விட்டன.

அதே சமயம் நீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் யூகலிப்டஸ், சில்வர்ஓக், வாட்டில் போன்ற வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்கள் அதிகம் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் இந்த ஊசியிலை மரங்களின் வளர்ச்சி வெகுவாக அதிகரித்துள்ளதால், அங்குள்ள நிலத்தடி நீர்  மட்டம் குறைந்துள்ளது. இந்த மரங்கள் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் தன்மை கொண்டவை. இதனால் இந்த மலைப்பகுதிகளில் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான தாவரங்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

நீலகிரி மலைப்பகுதியில் சுமார் 12,000 ஹெக்டேர் நிலத்தை இந்த ஊசியிலைக் காடுகள் ஆக்கிரமித்துள்ளன. கொடைக்கானலிலும் இது போன்ற நிலைமையே உள்ளது. இதனால், வன விலங்குகளுக்கு உணவு தரும் தாவரங்கள் அழிந்து வருகின்றன. வெளிநாட்டினரால் நடப்பட்ட வாட்டில், பல்ப்வுட் உள்ளிட்ட மரங்கள் காகித ஆலை தயாரிப்பு, தீப்பெட்டித் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன. யூகலிப்டஸ், சில்வர்ஓக் மரங்களும் வெவ்வேறு பயன்பாடுகளுக்காக இங்கு நடப்பட்டன.

இதைக் கவனத்தில் கொண்டு தமிழக வனப்பகுதியில் வணிக நோக்கத்தில் வளர்க்கப்படும் சீகை, யூகாலிப்டஸ் உள்ளிட்ட வெளிநாட்டு மரங்களை அகற்றவும், சோலை மரக்காடுகள் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் உத்தரவிடக்கோரி சோலைமலை, யோகநாதன், சரவணன் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இது தொடர்பான வழக்கு களை விசாரித்த நீதிபதிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட இந்த வகை மரங்கள் நிலத்தடி நீரை முழுமையாக உறிஞ்சுவதால் மலைப்பகுதியில் 60 முதல் 70 சதவீத மரங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் செருகுரி ராகவேந்திர பாபு தலைமையிலான நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், குழு 2 மாதங்களுக்குள் பரிந்துரை அளிக்கவும், அதன் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.