November 29, 2021

புத்தாண்டின் போது தூய்மையான மெரினாவாக இருக்க வேண்டும்! – ஐகோர்ட் ஆர்டர்!

சென்னையின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்று மெரினா கடற்கரை . 13 கி.மீ.  நீளம் கொண்ட இந்த கடற்கரையே உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையாகும்.மணற்பாங்கான இந்த அழகிய கடற்கரை சென்னை மாவட்டத்தின் கிழக்கு எல்லையாக உள்ளது.  அப்பேர்பட்ட அந்த கடற்கரை தற்போது மிகவும் அசுத்தமாக உள்ளது. மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளாக தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை அதன் பொலிவை இழந்து வருகிறது. இதையொட்டி வரும் புத்தாண்டிற்குள் மெரினா கடற்கரையை தூய்மையாக மாற்ற திட்டம் வகுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

வடபழனியில் கடந்த ஆண்டு மே மாதம் தனியார் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 4 பேர் பலியாயினர். முறையான அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டடம் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது விசாரணை நடத்த கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகி இருந்தனர்.

மாநகராட்சி சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், விபத்தில் பலியான 4 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்த 6 பேருக்கு தலா 50,000 ரூபாயும்,
லேசான காயம் அடைந்த 2 பேருக்கு தலா 25,000 ரூபாய் வீதம் 9 லட்ச ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கட்டட உரிமையாளருக்கு எதிரான குற்ற வழக்கும், மாநகராட்சி அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையும் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடு போதுமானது அல்ல என குறிப்பிட்ட நீதிபதிகள், கூடுதல் இழப்பீடு வழங்குவது பற்றி பதில் அளிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை 3 வாரத்தில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், கட்டட உரிமையாளர் விஜயகுமார் மீதான குற்ற வழக்கில் குற்றப்பத்திரிக்கையை 1 வாரத்தில் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், மெரினா கடற்கரை குப்பையாக காட்சி அளிப்பதாக வேதனை தெரிவித்தனர் நீதிபதிகள்.  அதாவது  முன்பெல்லாம் இக்கடற்கரையில் காற்று வாங்க வரும் மக்களைத் தவிர, வேறு எவ்வித ஆக்கிரமிப்புகளும் இருக்காது. இதனால் கடற்கரை பகுதியே மிக தூய்மையாக காணப்பட்டது. அனைத்து வெளிநாட்டினரும் பாராட்டும் வகையில் சிறப்பு பெற்றிருந்தது.ஆனால், இப்போது மெரினா கடற்கரையின் அழகு மெல்ல மெல்ல உருக்குலைந்து வருகிறது. இதனால் அண்ணா சதுக்கம் மற்றும் பட்டினப்பாக்கத்தில் உள்ள அடையாறு முகத்துவாரத்தில் அகற்றப்படும் மணலும் அங்கேயே மேடாக குவித்து வைக்கப்படுகிறது. சிறு மழை பெய்தால்கூட இந்த மணல்மேடுகள் கரைந்து, அடையாறு ஆற்றில் மணல் கலந்து, மீண்டும் அடையாறு முகத்துவாரத்தை அடைத்துவிடுகிறது. இதுதவிர, அண்ணாசதுக்கத்தில் இருந்து கலங்கரை விளக்கம் மற்றும் பெசன்ட்நகர், திருவான்மியூர் பகுதி கடற்கரைகளில் மாலை நேரங்களில் நடமாடும் கடைகள் போடப்படுகின்றன. இங்கு போண்டா, பஜ்ஜி, ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள், ஆங்காங்கே குப்பைகளை போட்டுவிடுகின்றனர்.

இந்த நடமாடும் கடைகள் அனைத்தும் காலை நேரங்களில் அப்பகுதி கடற்கரையை ஆக்கிரமித்து குப்பைகளோடு நிறுத்தப்படுகின்றன. இங்குள்ள குப்பைகளை அகற்றுவதற்குக்கூட சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு நேரமில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதேபோல, அந்தந்த பகுதி கடற்கரை குப்பங்களை சேர்ந்தவர்கள் கடற்கரை பகுதியிலேயே மீன்களை காயவைத்தும், அதன் கழிவுகளை அங்கேயே கொட்டி வருகின்றனர். பட்டினப்பாக்கத்தில் கட்டப்பட்ட மீன் அங்காடி மையம் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியே மீன் கழிவுகளால் கடும் துர்நாற்றம் அடித்து வருகிறது. இதேபோல் பெசன்ட்நகர் ஓடைமாகுப்பம் அருகே கடற்கரை பகுதியில் பள்ளம் தோண்டி குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகளை அகற்ற சென்னை மாநகராட்சி ஊழியர்கள் முன்வராததால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியில் பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி, பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவான்மியூர் உள்ளிட்ட பகுதியில் புறக்காவல் நிலையம் இருந்தும் செயல்படவில்லை.

ஆக ‘உலகமே போற்றும் சென்னை மெரினா கடற்கரைக்கு ஏன் இந்த அவலநிலை?’  என்ற தொனி யில் கவலைப்பட்ட ஐகோர்ட்   புத்தாண்டுக்கு முன்னதாக மெரினா முழுமையாக சுத்தப்படுத்திட திட்டம் வகுத்து செயல் படுத்தவும், புத்தாண்டின் போது தூய்மையான மெரினாவாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.