September 27, 2021

குடியிருக்கும் வீடுகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்துவதற்கு முன் அனுமதி பெற தேவையில்லை!.

நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன்,  மதுரை  ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் “பாளையங்கோட்டை அகஸ்தியபுரத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் போதகராக உள்ளேன். நான் வி.கே.புரம் தாலுகா ராஜகோபாலபேரி கிராமத்தில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டினேன். அந்த வீட்டில் வாரந்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்துவது வழக்கம். இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அனுமதி பெறாமல் பிரார்த்தனை கூட்டம் நடத்துவதாக ஒரு சிலர் வேண்டுமென்றே கொடுத்த புகாரின் அடிப்படையில் வி.கே.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

பின்னர் அந்த வழக்கு தொடர்பாக விசாரணை என்ற பேரில் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து, கலெக்டரிடம் அனுமதி பெறாமல் வீட்டில் பிரார்த்தனை கூட்டம் நடத்தக்கூடாது என்று கூறி போலீசார் தொந்தரவு செய்கின்றனர். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. குடியிருக்கும் வீட்டில் பிரார்த்தனை கூட்டம் நடத்த அனுமதி பெற தேவையில்லை என்று ஏற்கனவே ஒரு வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே என் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.  விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “குடியிருக்கும் வீடுகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்துவதற்கு முன் அனுமதி பெற தேவையில்லை. எனவே பிரார்த்தனை நடைபெறும் வீட்டில் விசாரணை என்கிற பெயரில் நுழைந்து மனுதாரரை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது“ இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.