ஜெ. -வின் வேதா இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட தடை!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவிடமாகத் திறக்கத் தடைவிதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை என்று உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தைக் கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து ஜெ.தீபக்கும், இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து ஜெ.தீபாவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதி சேஷசாயி முன் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, தீபக் தரப்பு வழக்கறிஞர், தங்களை வாரிசாக அறிவித்த உத்தரவில், நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்த யோசனையைத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அரசு தெரிவித்த நிலையில், அவசர அவசரமாகக் கையகப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதாவின் உடமைகள் மட்டுமல்லாமல், தங்கள் பாட்டியின் உடமைகளும் இருப்பதாகவும், ஜெயலலிதா பயன்படுத்திய கார்களின் நிலை பற்றி அரசு அறிவிக்கவில்லை என்றும் கூறினார்.
90 நாட்களில் உள்ளிருக்கும் பொருட்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார். கார்கள், பொருட்கள் பற்றி சட்டத்தில் எதுவும் குறிப்பிடவில்லை எனவும், தங்களிடம் எந்தக் கருத்தும் கேட்கவில்லை எனவும் தீபக் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.
2017-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டும், தங்களை வாரிசாக அறிவித்த பின்னர்தான் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டதாகவும், வழக்கு பிப்ரவரி 4-க்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு ஏன் பொறுத்திருக்கக் கூடாது என தீபக், தீபா தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கார்கள் ஜெயலலிதாவின் பெயரில் இருந்தால் அதற்கான பதிவு எண்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும், சமூகத்துக்குக் குறிப்பிட்ட பங்களிப்பை வழங்கிய ராஜாஜி, காமராஜ், அண்ணா, எம்ஜிஆர் வீடுகள் நினைவில்லமாக மாற்றியதைப் போல ஜெயலலிதாவின் வீட்டையும் மாற்ற முடிவு செய்ததாகவும், வீட்டில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், எந்த வகையிலும் மனுதாரர் பாதிக்கப்படவில்லை என்றும், வீட்டிலேயே இதுவரை மனுதாரர்கள் நுழையவில்லை என்ற செய்திகளும் உள்ளதாகவும், இருவரின் கருத்துகளும் கேட்கப்பட்டதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தில் இதுவரை யாரும் வசிக்கவில்லை எனும்போது ஏன் பொறுத்திருக்கக் கூடாது எனவும், ஒரு வேளை கையகப்படுத்திய உத்தரவு ரத்து செய்யப்பட்டால் என்ன செய்வீர்கள் என்றும் அரசுத் தரப்பிடம் நீதிபதி சேஷசாயி கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசுத் தரப்பில், மூன்று ஆண்டுகளாகக் கையகப்படுத்த நடவடிக்கையில் அனைத்துச் சட்டவிதிகளும் பின்பற்றப்பட்டதாகவும், வீடு மனுதாரர்களின் வசம் தற்போது இல்லை என்றும், அரசின் வசம் உள்ளதாகவும், நாளை திறந்து நினைவு இல்லமாக அறிவிக்கப் போவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
விசாரணையில் இருவரும் பங்கேற்றதாகவும், ஜெயலலிதா எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்குக் காட்டவும், அவரது நினைவைப் பாதுகாக்கவும் தான் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படுகிறதே தவிர, வணிகப் பயன்பாட்டுக்காகக் கையகப்படுத்தப்படவில்லை என்றும் அரசுத் தரப்பு விளக்கம் அளித்தது.
இதையடுத்து இன்று மாலை இந்த வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதி தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
மாலையில் நீதிபதி சேஷசாயி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாகத் திறந்து வைப்பதற்குத் தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அதேசமயம் பொதுமக்களை நினைவு இல்லத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், ஜெயலலிதாவின் வாரிசுகளான் தீபா, தீபக் முன்னிலையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கணக்கெடுக்க வேண்டியுள்ளதால், நினைவு இல்லத்துக்குள் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது என்றும். அப்பகுதியில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்த பேனர்களும் வைக்கக் கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.