ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை போட ஐகோர்ட் மறுப்பு!
மறைந்த ஜெ. மரண மர்மம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரனைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது. அதே சமயம் விசாரணைக்கு தடை கோரிய மனுவிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசு மற்றும் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள சில பல சந்தேகங்களை கண்டறிந்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடை கோரி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, அனைத்துத் தரப்பினருக்கும் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. உரிய முறையில்தான் நாங்கள் விசாரணை நடத்துகிறோம் என்று ஆறுமுகசாமி ஆணையம் வாதத்தை முன் வைத்தது.
ஆறுமுகசாமி உரிய விசாரணை நடத்தவில்லை எனவும், ஆணையம் விசாரணை மட்டுமே நடத்த வேண்டும், குறுக்கு விசாரணை மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தக் கூடாது என்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. மேலும் அப்போலோ மருத்துவ மனை நிர்வாகத்தின் சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார், சென்னை ஐகோர்ட்டில் 2 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். விசாரணை ஆணையம் தேவையில்லாத விவரங்களை எல்லாம் கேட்பதாகவும், எம்.ஜி.ஆர். 1984ஆம் ஆண்டு பெற்ற சிகிச்சை விவரங்கள், அவரை வெளிநாடு அழைத்துச் செல்ல பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய ஆணையிடுவதாகவும் மனுவில் முறையிடப்பட்டுள்ளது. அத்துடன் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக மருத்துவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தில், மருத்துவம் தொடர்பான வார்த்தைகள் மாற்றி பதிவு செய்யப்படுவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. மருத்துவ விவரங்களை ஆணையம் முறையாக புரிந்துகொள்ள, 21 துறைகளை சேர்ந்த டாக்டர்களை கொண்ட குழுவை அமைக்கும்படி கோரிக்கை விடுத்தும், ஆணையம் அதை நிராகரித்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்திருக்கும் மனு மீது தமிழக அரசும், ஆறுமுகசாமி ஆணையமும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.