January 28, 2023

தமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ!

த்திய அரசு மனது வைத்தால் தான் மாநில அரசுக்கு உரிய நிதிப் பங்கை வழங்க முடியும். தற்போது மத்திய அரசும் மாநில அரசும் எதிரெதிர் அரசியல் நிலைகளை வகுத்து, வழிநடப்பதால் அரசுப் பணிகளில் அரசியல் தலையீட்டின் தாண்டவம் தவிர்க்க முடியாது என்றாகிவிட்டது. இந்த சூழலில் மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்குரிய பணப் பங்கைப் பெறுவது எப்படி? கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. “ஆடுற மாட்ட ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டப் பாடிக் கறக்கணும்” எனும் இப்பழமொழியைத் தான் நாம் புது வழியாய்ப் பார்க்க வேண்டும். இதற்கு ஒரு முன்னுதாரணத்தைக் கூறுவது பொருத்தமாகும்.

டெல்லியில் இந்திரா காந்தி கோலோச்சி வந்த காலமது. தமிழகத்தில் எம்ஜிஆரின் அரசாட்சி நிகழ்ந்து கொண்டு இருந்தது. தமிழகத்துக்கு டில்லி அணுசரணையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி எம்ஜிஆரின் மீது தனிப்பட்ட முறையில் அபிமானம் கொண்ட அதிகாரிகள் பலர் டெல்லியில் உயர்மட்டத் தகுதியில் இருந்தனர். அவர் களுடன் எம்ஜிஆர் அவ்வப்போது பேசிவந்ததுண்டு. இத்தகு தருணங்களில் கிடைக்கும் தகவல்களை வைத்து எம்ஜிஆர் சில திட்டங்களைக் கொண்டு வந்தார். அவை புதிராகத் தான் இருந்தன. எனினும் அவை எதிராக இருந்ததில்லை. அதனைப் போகப் போகத் தான் புரிந்துகொள்ள முடிந்தது. அவற்றில் ஒன்றை மட்டும் இங்கு மேற்கோளாய் வைத்து, நிகழ்யுக நிதித் தேடலை நிர்ணயித்துக் கொள்ளலாம்.

திடீர் என்று ஒருநாள் எம்ஜிஆர் புது அறிவிப்புச் செய்தார். “நிர்வாக வசதி கருதி, பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்படும்., புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்” என்பதே அந்த அறிவிப்பு. இதனை பெரும்பாலோர் அரசியல் ரீதியாகக் கிடைக்கும் ஆதாயங்களை வைத்து அரசியல் தாயம் ஆட ஆரம்பித்தனர். எம்ஜிஆரோ தன் குறிக்கோளை அடைந்திட இந்த மாவட்டப் பிரிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டார். இதில் என்ன நிதி நன்மை?

மத்திய அரசு அக்காலத்தில் ஒரு புதிய நிதித் திட்டத்தைக் கொண்டு வந்தது. நாடெங்கும் உள்ள மாவட்டங்கள் அலசி ஆராயப்பட்டன. ஒரே ஒரு தொழிற்சாலை கூட இல்லாத மாவட்டங்களைக் கணக்கெடுத்தனர். அந்த மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்காக “சிறப்புத் திட்டங்கள் நிரம்பிய நிதியளிப்பு” என மத்திய அரசு, கறவை மாடு போல நிதிப்பால் நீட்டியது.

ஆனால் அந்தோ…! தமிழ் நாட்டில் ஒரு மாவட்டமும் இந்த நிதி பெறும் பட்டியலில் இடம்பெறவே இல்லை. இந்த தகவல்தான் எம்ஜிஆரின் செவிகளுக்குச் சென்று சேர்ந்தது. உடனே எம்ஜிஆர் அவசரம் அவசரமாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். மூத்த அமைச்சர்களிடம் விவாதித்தார். பின்னர் மாவட்டப் பிரிவினைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த பிரிப்புப் பணியின்போது புதிய மாவட்டங்களோ, பிரிக்கப்பட்டுச் சுருங்கிச் சுணங்கிய மாவட்டங்களோ ஒரு தொழிற்சாலையும் இல்லாத மாவட்டம் எனும் தகுதி பெறும் வகையில் வார்த்தெடுக்கப்பட்டன.

பின்னர் தமிழகத்தில் தொழில் இல்லா மாவட்டங்கள் எனும் பட்டியலின் புள்ளிவிபரத் தொகுப்புகளுடன் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின்னர் முறைப்படியான இடர் நீக்கும் தொடர்ப் பணிகள் காரணமாக தமிழகமும் அந்த நிதியைப் பெற்றுத் தொழில்வளம் கொழிக்கும் மாவட்டங்களைக் கொண்டதாகத் தரமுயர்ந்தது. இதனால் தமிழகத்துக்கு, மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி உதவியைப் பெற்றுச் சாதித்துக் காட்டினார் எம்ஜிஆர்.

இனி தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்? டெல்லியில் இருந்தபடி, தமிழக அரசின் திட்டங்களை டெல்லி அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று, உரிய அனுமதிகளைப் பெற எம்ஜிஆர் ஒரு புதிய ஏற்பாட்டைச் செய்தார். தமிழக அரசின் டெல்லிப் பிரதிநிதி எனும் புதிய பதவியைத் தோற்றுவித்தார். மத்திய ஆட்சியாளர்களுடன் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டக்கூடிய அரசியல் தலைவராகப் பார்த்து நியமனம் செய்தார்.

உதாரணமாக முன்னாள் சபாநாயகர் ராஜாராமைக் கூறலாம். அவர் உதவும் உணர்வாளர். அறிமுகமே இல்லாதார் தேடி வந்தாலும் திருப்தியாக்கி, ஒத்தாசை புரிவது அவரின் பணிப் பாணி. இதற்கு அடியேனும் கண் சாட்சி. எம்.பி.யாக இருந்த காலத்தில் அவர் டெல்லியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் நெருங்கிப் பழகி இருந்தார். அவரின் தனிப்பட்ட நட்பை வைத்துத் தமிழகத்துக்கான திட்டங்களுக்கு அனுமதி பெற்றுக் கொள்ளும் வழியை எம்ஜிஆர் கையாண்டார். அதன் பலன் தமிழகத்துக்குக் கிடைத்து வந்தது.

அவரின் ஆட்சிக் காலத்துக்குப் பின்னர், தமிழக அரசின் டெல்லிப் பிரதிநிதிப் பதவி என்பது, வேண்டப்பட்ட அரசியல் பிரமுகர்களுக்கான அலங்கார அந்தஸ்து அளிப்புப் பதவியாகத் திரிபு அடைந்து விட்டது. அது அமைச்சர் அந்தஸ்தில் இருக்கப் போய்… அதைப் பிடிக்கவும் போட்டா போட்டி.

இனியேனும் மத்திய அரசின் உயர் தகுதியாளர்களுடன் நேரடி நெருக்கம் கொண்டவராகப் பார்த்து டெல்லிப் பிரதிநிதியாக நியமனம் செய்ய வேண்டும். அவருக்கு, உடன் இருந்து ஒத்துழைக்கத்தக்கவராக டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்து ஆணையரை நியமனம் செய்ய வேண்டும். இந்த இரு தரப்பினரும் செல்வாக்கு மிக்கவர்களாகவும், பொதுநலனில் அக்கரை கொண்டவர்களாகவும் இருந்துவிட்டால் போதும். அவர்களின் மூலமாகத் தமிழகத்துக்கு நிறைய திட்டங்கள் நிறைவாகக் கிடைக்கும்.

ரகசியமாக ஒன்றைச் சொல்வதானால் இதுபோன்ற நுட்பமான வழியைக் கேரள அரசு கையாண்டு வென்று வருகிறது. அதற்கு கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், டெல்லி அதிகாரப் பொறுப்புகளில் இருந்தபடி இதற்கு உதவி செய்து வருகின்றனர். இதனைத் தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டால்… மாநிலம்,மாவளம் பெறும்.

நூருல்லா ஆர்.

ஊடகன்
10-06-2021.