November 28, 2022

“ஹவுடி மோடி” அதாவது “மோடி நலமா” என்றா என்னிடம் கேட்கிறீர்கள்! – ஹூஸ்டன் முழு விபரம்!

உலகின் பெரியண்ணா என்று தன்னை வர்ணித்துக் கொள்ளும் அமெரிக்காவுக்கு 7 நாட்கள் சுற்றுப் பயணமாக நம் நாட்டின் பிரதமர் மோடி சென்றுள்ளார். அதில் முதல்கட்டமாக, டெக்சாஸ் மா காணம், ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தும் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் அதிபர் ட்ரம்ப்புடன் இணைந்து பங்கேற்றார். சுமார் 50,000க்கும் அதிகமான இந்திய அமெரிக்க வாழ் மக்கள் இந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மோடி – ட்ரம்ப் இருவரும் இணைந்து பயங்கரவாதம் உட்பட பல் வேறு விவகாரங்களில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்துப் பேசினர். குறிப்பாக இந்நிகழ்ச்சி யில் காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மோடி கடுமையாக விமர்சித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி பேசிய விபரம் இதோ:

ஆரம்பத்தில், அமெரிக்க அதிபர் டிரம்பை அறிமுகம் செய்து வைத்தபோது,“ நான் 2017 – ஆண்டு இங்கு வந்த போது, எனக்கு டிரம்ப் அவரின் குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார். நான் இப்போது அவருக்கு எனது குடும்பத்தை அறிமுகம் செய்து வைக்கிறேன்” என்று கூறி அங்கு கூடியிருந்த 50000 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்களை சுட்டிக்காட்டினார். உடனே கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று விண்ணதிர கரவொலி எழுப்பியது அடங்க சில நிமிடங்கள் பிடித்தது.

“ஹவுடி மோடி” அதாவது “மோடி நலமா” என்று என்னிடம் கேட்கிறீர்கள். இந்தியாவில் “எல்லோரும் சௌக்கியம்”. ( எல்லோரும் சௌக்கியம் என்று தமிழில் சொன்னார். மேலும் 8 மொழிகளில் “எல்லோரும் சௌக்கியம்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அப்போது கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது.)

இந்த நிகழ்ச்சியில் 130 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாகவே நான் இங்கு வந்துள்ளேன். பல்வேறு கலாச்சாரங்கள் பின்னி பிணைந்திருப்பது இந்தியாவை உன்னதமாக்கி உள்ளது. நாம் இங்கு புதிய சரித்திரம் படைத்துள்ளோம். இது நமது இந்திய மக்களுக்கு வழங்கப்பட்ட கௌரவம். அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, அறிமுகம் தேவையில்லை. நமது உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றவர் அவர். எல்லோருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதே எங்களது இலக்கு. “புதிய இந்தியா” என்பதே எனது லட்சியம். அதை உருவாக்க இரவு பகலாக உழைத்து வருகிறோம்.

இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகளவில் உள்ளனர். இதுவரை இல்லாத வளர்ச்சிகளை கடந்த 5 ஆண்டுகளில் அடைந்துள்ளோம். இந்திய கிராம சுகாதாரம், 99 சதவீதம் மேம்பட்டுள்ளது. கிராமப்புற சாலை வசதிகள் 97 சதவீதம் மேம்பட்டுள்ளன. 95 சதவீத வீடுகளுக்கு காஸ் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை கட்டி உள்ளோம்.

100 சதவீத குடும்பங்களுக்கும் வங்கி கணக்கு உள்ளது. இந்தியாவில் மத்திய – மாநில அரசுகள் இணைந்து இணைய சேவையை விரிவுபடுத்தியுள்ளன. குறைந்த விலையில் இணைய சேவை கிடைக்கிறது. ஒரே வாரத்தில் வீடு தேடி பாஸ்போர்ட் வருகிறது. இந்தியாவில் ஒருவர், 24 மணி நேரத்தில் தொழில் தொடங்கலாம்.

வரி செலுத்துவதை எளிமைப்படுத்தி உள்ளோம். ஒரே நாளில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் வரி செலுத்தி சாதனை படைத்து உள்ளனர். “ஒரே நாடு, ஒரே வரி” என்பதன் மூலம் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மூன்றரை லட்சம் போலி நிறுவனங்கள் களை எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.1.5 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.

1500-க்கும் அதிகமான பழைய தேவையில்லாத சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஒரே சட்டம் என்பது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 370 சட்டப்பிரிவை பயன்படுத்தி காஷ்மீரில், பிரிவினைவாதிகளும், பயங்கரவாதிகளும் ஆட்டம் போட்டனர். 370 நீக்கப்பட்டதால், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரே நாடு ஒரே சட்டம் என்று உருவாக்கி உள்ளோம்.

பயங்கரவாதிகளுக்கு ஒரு நாடு (பாகிஸ்தான்) அடைக்கலம் கொடுத்து வருகிறது. அது உலக நாடுகள் அனைத்திற்கும் தெரியும். பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டிய நேரம் இது.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 ஆக உள்ளது. குறைந்த பணவீக்கம், நிறைந்த வளர்ச்சியை நோக்கி இந்தியா செல்கிறது. அந்திய நேரடி முதலீடு இருமடங்காக அதிகரித்து உள்ளது. கார்ப்பரேட் வரிகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

அதிபர் டிரம்ப் பயங்கரவாதத்தை எதிர்த்து வருபவர். அவரது திடமான முடிவை நாம் பாராட்டுவோம். அவரிடம் நான் பலவற்றை கற்றுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எங்களுக்கு உந்து சக்தியாக இருக்கிறீர்கள். அமெரிக்கா வெகுதூரத்தில் இருந்தாலும், இந்தியா உங்களை விட்டு தூரம் இல்லை. அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சின் போது பல் முறை மக்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். அப்போது அந்த மைதானமே கரவொலியால் அதிர்ந்தது.