தமிழகம் & புதுச்சேரியில் கனமழைக்கு அதிக வாய்ப்பு! – இந்திய வானிலை ரெட் அலெர்ட்!

இன்னும் ஒரு வாரத்தில் அக்னி நட்சத்திரம் வர இருக்கும் சூழலில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 30, மே 1 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலா்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு தற்பொழுது வலுவான தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. டென்மார்க் ஒட்டியப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் வலுவான தாழ்வுப் பகுதி அடுத்து வரும் 24 மணி நேரத்தில் அதாவது 26ம் தேதி இரவு தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது, 27, 28ம் தேதிகளில் புயலாக வலுப்பெற்று தற்போதைய நிலவரப்படி வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள வலுவான தாழ்வுப் பகுதி வடதமிழகக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்தால் வரும் 30 மற்றும் மே 1ம் தேதி தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்றும், ஒருசில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 30 மற்றும் மே 1ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழையும், ஒரு சில பகுதிகளில் மிக அதிகக் கன மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததுள்ளது. அதே போல, 26ம் தேதி முதல் கடற்பரப்பு சீற்றத்துடன் காணப்படும் என்றும், காற்றின் வேகம் அதிகமாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் , “குறைந்த காற்றழுத்தாழ்வு பகுதி மெல்ல தமிழகத்துக்கு சாதகமாக மாறி வருகிறது. தமிழகத்தின் பாதையில் இருந்து விலகிச் செல்ல இருந்த தாழ்வுப் பகுதியின் பாதையை காற்றின் சுழற்சி மாற்றியுள்ளது. எனவே, அது தமிழகம் அல்லது தெற்கு ஆந்திராவுக்குத்தான். அப்படியும் இல்லை என்றால் கடலிலேயே சுற்றி சுற்றி மழையைப் பெய்ய வேண்டும். இந்த இரண்டு வாய்ப்புகள் உள்ளன.

இந்த தாழ்வு பகுதி புயலாக மாறி எந்த திசையில் பயணித்தாலும் அங்கு அதிக மழை, மிக அதிக மழை, மிக மிக அதிக மழை பெய்துத் தள்ளும். அவ்வளவு ஏன் அது தமிழகத்துக்கு வந்தால், வறட்சியான நிலப்பரப்பு கூட வெள்ளம் பாதித்த பகுதியாக மாறிவிடக் கூடும். இது தமிழகத்துக் குத்தானா என்பதை உறுதி செய்ய மேலும் ஒரு நாள் தேவைப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 60% தமிழகத்துக்கு சாதகமாகவே உள்ளது. ஆனால் இதுபோன்ற இயற்கை சக்திகளை கணிப்பதும், பின் தொடர்வதும் மிகவும் த்ரில்லிங்கான விஷயமாகவே இன்று வரை இருக்கிறது.

ஒவ்வொரு மாதிரிகளையும் பார்க்கும் போது எனது இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. (தமிழகத்துக்கு வந்துடு என்ற பிரார்த்தனையோடு). ஒரு வேளை இந்த புயல் சின்னம் சென்னைக்கு அருகே கரையைக் கடந்தால் சென்னையின் அனைத்து ஏரிகளும் நிரம்பிவிடும். நமது அனைத்துத் தண்ணீர் பிரச்னைகளும் கானல் நீராக மாறிவிடும். ஆனால் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் புயல் சின்னம் சற்று பலமாக இருக்கும் என்பதால் நிச்சயம் சென்னையில் இருக்கும் ஒரு சில மரங்களையும் நாம் தியாகம் செய்யும் நிலை ஏற்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.