அய்யே.. வேணாம்ப்பா! – ஐ.நா. அமெரிக்க தூதராக பரிந்துரைக்கப்பட்ட ஹெதர் நாவர்ட்!
சர்வதேச அளவில் தனி கவுரம் தரும் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதருக்கு தான் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அந்த பரிந்துரையில் இருந்து விலகுவதாக ஹெதர் நாவர்ட் அறிவித்துள்ளார்.
ஐநாவின் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தன் பதவியை கடந்த டிசம்பர் மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக ஐநாவின் அமெரிக்க தூதராக ஜொனாதன் கோஹன் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், அடுத்த ஐநா தூதராக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹெதர் நாவர்ட் பரிந்துரைப்பதாக கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
முன்னாள் பாக்ஸ் நியூஸ் செய்தி சானல் தொகுப்பாளரான ஹெதர் நாவர்ட் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். ஐநா தூதராக ஹெதர் நவ்ரெட் பரிந்துரைக்கப்பட்டதற்கு சில மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜனநாயக கட்சியினர் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், ஐநா தூதர் பதவி பரிந்துரையை ஹெதர் நாவர்ட் இன்று நிராகரித்துள்ளார். ஹெதர் நாவர்ட் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். இதில் பேசிய அவர், ”அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோவுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஐநாவிற்கான அமெரிக்க தூதர் பதவிக்கு தகுதியானவர் என்று எண்ணி என்மீது நம்பிக்கை வைத்து என்னை பரிந்துரைத்ததற்கு என் நன்றிகள்” என்று கூறினார்.
”கடந்த 2 மாதத்திற்கும் மேலாக என் குடும்பத்துடன் நான் இது குறித்து கலந்துரையாடினேன். தற்போது நன்கு ஆலோசித்து ஒரு முடிவை நான் எடுத்துள்ளேன். ஐநா தூதருக்கு என் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து விலகுகிறேன்” என்று தெரிவித்தார்.
”கடந்த 2 வருடங்களாக அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்ததை நான் மிக கவுரவமாக கருதுகிறேன். அதிபர், செயலாளர், வெளியுறவுத்துறை அமைச்சக சக ஊழியர்கள் ஆகியோர் எனக்கு அளித்த ஆதரவுக்கு நான் என்றும் கடன்பட்டுள்ளேன்” என்று ஹெதர் நாவர்ட் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பின்னர் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர்,”ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதர் பதவிக்கான புதிய பரிந்துரையை அதிபர் டிரம்ப் விரைவில் அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.