மனித உரிமைகள் செயல்பாட்டாளரான ஸ்டேன் சுவாமி காலமானார்!

மனித உரிமைகள் செயல்பாட்டாளரான ஸ்டேன் சுவாமி காலமானார்!

யங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மனித உரிமைகள் சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி இறந்துவிட்டதாக அவரது வழக்கறிஞர் மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். நேற்று அவர் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவருக்கு ஜாமீன் மறுக்கப்படுவதற்கு எதிராக அவர் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். மேலும் சிறையில் தனக்கு முறையான சுகாதார வசதிகள் இல்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் கடந்த மேமாதம் மும்பை ஐகோர்ட் நீதிபதிகளிடம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசிய அவர், தனது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக தெரிவித்திருந்தார். `இப்படியே போனால் இறந்துவிடுவேன்’ என்றும் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்குமாறும் அவர் கோரிக்கைவிடுத்திருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என என்ஐஏ கராறாக இருந்த நிலையில், இன்று அவர் உயிர் பிரிந்தது. ஜார்கண்டில் பழங்குடி மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய ஒரே தமிழர் ஸ்டேன் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி, மகாராஷ்டிர மாநிலம், புனே நகருக்கு அருகில் உள்ள கோரிகோன் பிமா பகுதியில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுபவர்களை ஒருங்கிணைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மறுநாள் அப்பகுதியில் கலவரம் மூண்டது. அந்த கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அங்கு நடந்த நிகழ்ச்சியில் பலர் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதால்தான் அடுத்தநாள் கலவரம் நடந்ததாக அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுபவர்கள் என பலர் UAPA அதாவது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதில், வரவர ராவ், ஆனந்த் டெல்டும்டே, சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லகா மற்றும் பாதிரியார் ஸ்டன் சாமி உள்ளிட்டோரும் அடங்குவர்.

ஆனால் வயதில் மூத்தவரான அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்த நிலையில் கடந்த மே மாதம் 29ம் தேதி அவர் மும்பையில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் (Holy Family Hospital) அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே பல முறை அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் மருத்துவமனையில் இருந்தவாறே, தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என ஸ்டன் சாமி வீடியோ கான்பிரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால் மீண்டும் அவரது உடல்நிலை குறித்து உறுதியான முடிவுகள் இல்லை என காவல்துறை கூறியதால் அவரது ஜாமீன் மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனாவிற்கு பின்னான நோயினாலும், அவரது நுரையீரல் தாக்கப்பட்டு நிமோனியா ஏற்பட்டதாலும் சிகிச்சை பலன் இன்றி இன்று பிற்பகல் 1:20 மணியளவில் உயிரிழந்ததாக, ஹோலி ஃபேமிலி மருத்துவமனை நிர்வாகம் மும்பை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது

Related Posts

error: Content is protected !!