கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை – ஐகோர்ட் உத்தரவு
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூலித்தொழிலாளி குடும்பத்தினருடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, பாலா, வரைந்த கார்ட்டூன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நெல்லை மாநகர காவல் ஆணையர் கபில்குமார் ஆகியோரை மிகவும் அவதூறு செய்யும் வகையில் இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலா தற்போது ஜாமீனில் உள்ளார்.
இந்நிலையில் , தன் மீது நெல்லை போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி கார்ட்டூனிஸ்ட் பாலா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அம் மனுவில் ‘‘கந்து வட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இசக்கிமுத்து குடும்பத்தார் அக்டோபர் 23-ம் தேதி தீக்குளித்து பலியாகினர். இது குறித்து அக்.24-ம் தேதி ஒரு கார்டூன் வரைந்து எனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டேன். அதில் முதல்வர், ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அரை நிர்வாணத்தில் நின்று தீக்குளிப்பு சம்பவத்தை பார்ப்பதுபோல சித்தரித்திருந்தேன்.
இந்நிலையில் நெல்லை ஆட்சியர் புகாரின் பேரில், நவ.5-ம் தேதி போலீஸார் என்னை கைது செய்தனர். நான் எந்த குற்ற செயலிலும் ஈடுபடவில்லை. என்னைக் கைது செய்தது இயற்கை நீதிக்கு முரணானது. ஆகவே, என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.சுந்தர் முன்பு இன்று (நவ- 15 2017) விசாரனைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘‘முதல்வர் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை அரை நிர்வாணத்தில் மனுதாரர் வரைந்தது சட்டத்திற்கு புறம்பானது. எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது’’ என வாதிட்டார்.
ஆனால் அரசு தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதி மனுதாரர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.