September 29, 2021

தேர்தல் காலத்தில் சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க ஆலோசனை!

பல நாடுகளின் தலைவிதிகளை மாற்றியது சமூக வலைத்தளங்களை  என்றால் அது மிகை யல்ல. இதனிடையே இந்த சமூக வலைதளங்களில் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு அரசியல் கருத்துகள் பகிரப்படுவதைத் தடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் உள்ள செய்தித்தாள், திரைப்படம், தொலைக்காட்சி என்று அனைத்து ஊடங்களையும் அரசியல்வாதிகள் கைப்பற்றிவிட்டனர். ஆனால் சமூக வலைத்தளங்கள் திறந்த மேடைகள். இங்கு ஆண்டியும் அரசனும் ஒன்றுதான். இதன் மூலம் மக்கள் போராட்டங்களுக்கு போராட்டங்களுக்கு மட்டுமல்ல  தேர்தல் மற்றும் அரசியல்  செய்திகளையும் பரப்ப சமூக வலைத்தளங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில்தான் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேர்தல் நடை பெறுவதற்கு இரு நாட்களுக்கு முன்பிருந்து அரசியல் தொடர்பான கருத்துகளைப் பதிவிடவோ, பகிரவோ கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சாகர் சூர்யவன்சி என்பவர் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நரேஷ் பாட்டில், நீதிபதி நிதின் ஜாம்தர் அமர்வு முன்பு நேற்று (ஜனவரி 11) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126ஆவது பிரிவு, தேர்தல் நடைபெறுவதற்கு 2 தினங்களுக்கு முன்பு, அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்கள், ஊர்வலம், பிரசாரம் ஆகியவற்றை நடத்தத் தடை விதிக்கிறது. அதுபோன்று அந்த 2 தினங்களும் பணம் கொடுத்து விளம்பரங்கள் வெளியிடுவதற்கும் இந்தப் பிரிவு தடை விதிக்கிறது. ஆனால் தனி நபர்கள் முகநூல், ட்விட்டர் பக்கங்களில் அரசியல் கருத்துகள் வெளியிடுவதைத் தேர்தல் ஆணையத்தால் எப்படி தடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில், சமூக வலைதளங்களில் பணம் கொடுத்து வெளியிடப்படும் அரசியல் தொடர்பான கருத்துகள், விளம்பரங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதுபோன்று இந்தியாவிலும் பின்பற்றலாம் என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு அரசியல் கருத்துகள் பகிரப்படுவதை ஒழுங்குபடுத்துவதற்கான ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.