March 21, 2023

சென்னை நீர் வழித்தடங்களை பராமரிக்காத தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

சென்னையில் கூவம், அடையாறு ஆறுகள் பயணிக்கின்றன. பக்கிங்ஹாம் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் -அரும்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட பல கால்வாய்கள் உள்ளன. இந்த நீர்வழித்தடங்கள், பல ஆண்டுகளாக கழிவுநீர் செல்லவே பயன் படுகின்றன. அந்த காலத்தில் இருந்தது போல ஏரி, குளங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப் படாமல், முறையாக தூர்வாரி நிர்வகிக்கப்பட்டு இருந்தால், சென்னைக்கான நீர்தேவைக்கு பிற மாவட்டங் களை கொஞ்சாமல் சமாளித்திருக்கலாம் என்று வல்லுநர்கள் பலர் உரத்த குரலில் சொல்லி வந்தார்கள். ஆனாலும் சென்னை நீர் வழித்தடங்களை சரியாக பராமரிக்காத காரணத்தினால் பொதுப்பணித்துறைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்ததற்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

1980–ம் ஆண்டு கணக்கின்படி, சென்னையைச் சுற்றி சிறியதும் பெரியதுமாக ஏறத்தாழ 650 நீர் நிலைகள் இருந்ததாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவற்றில் பாதி, அடையாறுக்கு தெற்கே இருந்தது. 2008–ம் ஆண்டு கணக்கின்படி இந்த எண்ணிக்கை 27 ஆகிவிட்டது. பள்ளிக்கரணையில் இருந்து குரோம்பேட்டை வரை இருந்த 10 ஏரிகள், ஆக்கிரமிப்பு காரணமாக முற்றிலும் காணாமல் போய்விட்டன. நீலாங்கரை பகுதியில் 13 நீர்நிலைகள் இருந்தன. அவற்றில் 11 காணாமல் போய் இப்போது 2 குளங்கள் மட்டுமே இருக்கின்றன. 1980–ம் ஆண்டு இருந்த 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு மொத்தம் 1,130 ஹெக்டேராக இருந்தது. 2000–ம் ஆண்டில் இந்த 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு சரிபாதிக்கும் கீழாக 645 ஹெக்டேராக சுருங்கிவிட்டது. வில்லிவாக்கத்துக்கும், அம்பத்தூருக்கும் இடையே உள்ள கொரட்டூர் ஏரியின் பரப்பளவு 900 ஏக்கராக இருந்தது. இப்போது அது 600 ஏக்கராக சுருங்கிவிட்டது. மதுரவாயல் ஏரியின் பரப்பளவு 120 ஏக்கராக இருந்தது. இப்போது அது 25 ஏக்கராக சுருங்கி விட்டது.

80 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் சதுப்பு நிலமாக இருந்த பள்ளிக்கரணை இப்போது குப்பைகள் கொட்டப்படும் இடமாக மாற்றப்பட்டுவிட்டது. ஆதம்பாக்கம் ஏரியை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துடன் இணைக்கும் வீராங்கல் ஓடை, அது புறப்படும் இடத்தில் இருந்து 550 மீட்டருடன் முடிந்து விடுகிறது. மீதியை காணவில்லை. முகப்பேர் ஏரி முற்றிலும் காணாமல் போய் விட்டது.

விருகம்பாக்கம் வடிகால் முன்பு 6.5 கிலோ மீட்டர் நீளமாக இருந்தது. நுங்கம்பாக்கம் ஏரியில் முடியும் வகையில் இருந்த இந்த கால்வாய் இப்போது 4.5 கி.மீ. ஆகி விட்டது. 2 கி.மீ. நீள கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. போதாக்குறைக்கு நுங்கம்பாக்கம் ஏரி மூடப்பட்டு அதில் கட்டிடங்கள் கட்டப்பட்டு விட்டன.

மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட சிறு குளங்களை பெருநிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், அரசு குடியிருப்புகள் என கட்டடங்களாக மாறியதால் வடிகால்கள், வாய்க்கால்கள், நீர்வழிப்பாதைகள் ஆகியவை இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டன.

ஏதோ தப்பித்தோம் பிழைத்தோம் என்று இருக்கும் ஏரி, குளங்களும் தொடர்ந்து நடைபெறும் ஆக்கிரமிப்புகளால், வேகமாக தங்கள் நீர்ப் பிடிப்பு ஆதார பகுதிகளை இழந்து வருகின்றன. இதன் காரணமாக மழை பெய்யும்போது அந்த நீர் நிலைகள், மழைநீரை முழுவதுமாக உள்வாங்கி சேமிக்க முடியாமல் திணறுகின்றன. குறைந்த அளவிலான இடத்தில் அதிக நீர் சேரும்போது, அவை உடைப்பு எடுத்து, மனித குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன.

நீர் நிலைகளை, தனியார் பலர் ஆக்கிரமித்துள்ள நிலையில், அதனை அகற்றி, காப்பாற்ற வேண்டிய அரசு நிர்வாகமே, அவற்றை ஆக்கிரமித்துள்ளதுதான் கொடுமை. விலை மதிப்பில்லாத நீர் நிலை பகுதிகளை ஆக்கிரமித்து இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது மட்டுமின்றி, அரசுத் துறைகளின் கட்டுமான பணிகளுக்காக, நீர் நிலைகளை தமிழக அரசு ஒதுக்கி வருவது மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜவஹர்லால் சண்முகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், “சென்னையில் உள்ள கூவம் ஆறுமுழுமையாக சீரமைத்து மீட்டெடுக்கப்படும் என ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கடந்த 2014-15ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டபட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, அத்திட்டத்திற்கு ரூ.1,934 கோடியே 84 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால், இதுவரை அமல்படுத்தப்படவில்லை. எனவே, பொதுப்பணித்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையில்,சென்னை நீர்வழித்தடத்தைசுத்தம் செய்வதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முனைப்பு காட்டாத தமிழகபொதுப்பணித்துறைக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி தீர்ப்பளித்தது.

இதை அடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்ததற்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.