July 28, 2021

பள்ளி பாடத்தில் ’சைபர் கிரைம்; சப்ஜெக்ட்! – ஹரியாணா அரசு முடிவு

நாடு முழுவதிலும் இணைய தளங்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. ‘ஆண்ட்ராய்டு’ வகை தொழில்நுட்ப கைப்பேசி செயல்பாடுகளுக்குப் பின் பள்ளி குழந்தைகளும் இணையதளங்களைப் பயன்படுத் துவது அதிகரித்து விட்டது. அதேசமயம், இமெயில் மற்றும் சமூக இணையதளங்களில் ஊடுருவல் உட்பட பல்வேறு வகை குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதில் இருந்து மாணவர்களைக் காக்கும் பொருட்டு இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு அளிக்க ஹரியாணா மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதல்கட்ட மாக தனது பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழிக் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி அளித்து வருகிறது.

 cyber may 12

மாநில கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சிலால் கடந்த ஏப்ரல் 10-ல் துவங்கிய இந்த பயிற்சி வகுப்புகள் வரும் மே – 25 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள் வரும் கல்வியாண்டு முதல் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு இணையவழிக் குற்றங்கள் குறித்து பாடம் நடத்த உள்ளனர்.

இதுகுறித்து மாநிலக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சிலின் இயக்குநரான டாக்டர்.கிரண்மாயி கூறுகையில், ‘ஹரியாணாவின் 42 மாவட்டங்களில் உள்ள எங்கள் பயிற்சி நிலையங்களில் இணையவழிக் குற்றங்கள் தொடர்பான பயிற்சி நடைபெற்று வருகிறது. இங்கு பயிற்சி பெறும் 21,000 ஆசிரியர்கள் 42,000 மாணவர்களுக்குப் போதிப்பார்கள். விரைவில் குர்கான்வ் போலீஸாருடனும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளோம். இதன் மூலம், அந்த காவல்துறையினரும் மாணவர்களுக்காக பாடங்களில் உதவுவார்கள்’ எனத் தெரிவித்தார்.

இந்த பாடங்களில் கூகுள், பேஸ்புக், யூ டியூப், இமெயில் மற்றும் வங்கிக்கணக்குகளில் நடைபெறும் குற்றங்கள் பற்றி விளக்க உள்ளனர். இதற்காக வீடியோ பதிவுகளையும் பயன் படுத்திப் பாடம் நடத்த உள்ளன. இத்துடன் சமூகவலைதளங்களில் சிறுவர்கள் சிக்க வைக்கப்படுவதையும், அவற்றைத் தடுக்கும் முறைகளையும் விளக்க உள்ளனர்.

இதில், தம்மை பற்றிய தகவல்களை எந்த அளவிற்கு பகிர்வது பாதுகாப்பானது எனவும், ஊடுருவ முடியாதபடி உறுதியான பாஸ்வேர்டுகள் பயன்படுத்துவதைப் பற்றியும் எடுத்துரைக்கப்பட உள்ளன. இவற்றைப் பாடமாக்கி போதிக்கவும் ஹரியாணா அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கானப் பாடத்திட்டங்களை உருவாக்கிய மாநிலக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக் கவுன்சில் அதனை அரசிடம் ஒப்புதலுக்கும் அனுப்பி உள்ளது. விரைவில் ஒப்புதல் பெற இருக்கும் பாடங்கள் ஹரியாணாவில் வரும் கல்வியாண்டு முதல் போதிக்கப்பட உள்ளன.