ஹர்திக் பட்டேலின் நெருங்கிய சப்போர்ட்டர்கள் பாஜக-வில் இணைஞ்சுட்டாங்கோ!
குஜராத்தில் பட்டேல் சமூக மக்களின் இடஒதுக்கீடு கோரிக்கையை தலைமையேற்று நடத்திய ஹர்திக் பட்டேலின் நெருங்கிய ஆதரவாளர்களான வருண் பட்டேல், ரேஷ்மா பட்டேல் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். குஜராத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இவர்கள் பாஜகவில் இணைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருவரும் ஹர்திக் பட்டேலின் பட்டேல் அனமத் அந்தோலன் சமிதி அமைப்பில் அனைவருக்கும் தெரிந்த முகமாக இருந்தனர்.
முன்னதாக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பாரத்சிங் சோலங்கி ஹர்திக் பட்டேலை காங்கிரசோடு இணையுமாறு கேட்டு இருந்தார். குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பட்டேல் சமூக மக்களுக்கு 20 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு தருவதாகவும் வாக்குறுதி அளித்து இருந்தார்.
இந்நிலையில், வருண் பட்டேல், ரேஷ்மா பட்டேல் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர். குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் பட்டேல், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, குஜராத் மாநில பாஜக தலைவர் ஜிது வாகினி ஆகியோர் முன்னிலையில் இவர்கள் பாஜகவில் இணைந்தனர். பாஜகவில் இணைந்த கையோடு இருவரும், ஹர்திக் பட்டேல் காங்கிரஸின் ஏஜென்டு போல் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்கள்.