ஹர ஹர மஹாதேவகி – திரை விமர்சனம்!

ஹர ஹர மஹாதேவகி – திரை விமர்சனம்!

நேற்றுதான்  இந்த அடல்ஸ் ஒன்லி படமான ‘ ஹர ஹர மஹாதேவகி’ படம் பார்த்தேன். இப்படத்தின் ஆடியோ வெளியான நாளில் இருந்தே இப்படம் குறித்து சக பத்திரிகையாளர்கள் ஷேர் செய்த விஷயங்கள் கொஞ்சம் மிரட்சியை தந்த அதே வேளை இப்படத்தின் நாயகன் கெளதம் கார்த்திக் அளித்த ஒரு பேட்டியின் போது, “முத்தக்காட்சி, கவர்ச்சி உடை அணிந்து நடனம், ஆபாசக்காட்சிகள் போன்ற எதுவுமே இப்படத்தில் கிடையாது. நண்பர்களால் பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாக பேசிக்கொள்வது தான் இப்படத்தின் கதை. இப்படத்தை விருப்பமானவர்களோடு சந்தோஷமாக பார்க்கலாம்” என்று சொன்னது ஆறுதல் அளித்திருந்த நிலையில்தான் நேற்று சத்யம் தியேட்டரில் ஸ்பெஷல் ஷோ போட்டார்கள்.

டைட்டில் போடும் போதே ஒரு மாமி வாய்ஸில் அம்மாஞ்சித்தனமாய்  பேசும் சில பல டயலாக்குகளில் கொஞ்சம் முகம் சுளிச்சு போனது உண்மை. ஆனால் முழு படத்தையும் பார்த்து முடித்தப் பிறகு நம் அன்றாட பொது வெளியில் முகம் தெரியாதவர்கள் பேசும் கொச்சை மொழிகள் மற்றும் நம் நண்பர்கள் என்ற பெயரில் நெருக்கத்தில் இருக்கும் சிலர் அடிக்கும் கமெண்டுகளை விட கம்மியான அளவே அடல்ஸ் வசனங்கள் இருந்தது என்பது ஆறுதல்.

படத்தின் கதை ரொம்ப சிம்பிள் – ஒரு காதல் ஜோடி – கெளதம் கார்த்திக் + நிக்கி கல்ராணி. இவர்களுக்குள் மோதல் உருவாகி லவ்-வை பிரேக் அப் செய்து கொள்ள முடிவெடுத்து ஒரு ரிசார்ட் (அதுக்கு பேர்தான் ஹர ஹர மஹாதேவி)யில் மீட் செய்ய பிளான் செய்து தன்னிடமுள்ள காதல் பரிசு பொருட்களை ரிட்டர்ன் செய்ய ஒரு அரசியல் கட்சி பேர் கொண்ட பையில் போட்டு எடுத்து வருகிறார். அதே சமயம் ஒரு அரசியல் வாதி (ரவி மரியா) தான் முதல்வராக திட்டம் போட்டு வெடி குண்டு வெடிக்க ஏற்பாடு செய்து வெடி குண்டை மேற்படி அரசியல் கட்சி பையில் வைத்து மொட்டை ராஜேந்திரன் கருணாகரன் வசம் கொடுக்கிறார். இதே சமயம் பால சரவணன் அதே மாடலினான் பையில் கள்ள நோட்டுகள் மாற்றுவதற்காக செல்கிறார், இத்தனைக்கும் இடையே அந்த ஹர ஹர மஹாதேவி ரிசார்ட்டில் ஒரு குழந்தை காணாமல் போய் அதை மீட்க ஒரு கோடி ரூபாயுடன் மேற்படி மாடலில் இன்னொரு பை தயாராகிறது.

இத்தனை பைகளும் ஹர ஹர மஹாதேவி ரிசார்ட்டுக்கு வருவதும் இடையிடையே எப்படி, ஏன், யார் மூலம் எல்லாம் எந்த பை கை மாறுகின்றன, இறுதியில் நடப்பது என்பது தான் கதை. சிரிக்க வைக்க பாடுபட்டுள்ள இப்படத்தின் ஒட்டு மொத்தமாக ஒரு காட்சியில் கூட துளி விரசம் கிடையாது. ஆனால் வசனங்களில் துளி விஷம் மட்டும்தான் சேர்க்கவில்லை. அம்புட்டு தூக்கல். அப்படி பல வசனங்களில் கொச்சைத்தனத்துடன் காம நெடி அடித்தாலும் அரங்கில் கரவொலியுடன் காமெடி சத்தமும்தான் தூக்கலாய் கேட்டதுதான் ஆச்சரியம்.

பல நாயகர்கள் நடிக்க மறுத்த இந்த படத்தின் ஹீரோ கேரக்டரில் கெளதம் கார்த்திக் கமிட் ஆகி தன் பங்கை பக்காவாக வழங்கி உள்ளார். அதிசயமாக இவர் பேசும் டயலாக்குகளில் ரொம்ப கெட்ட பேர் வராமல் பார்த்து கொண்டிருப்பதில் தனி கவனம் பெறுகிறார். நாயகி நிக்கி கொழுக். மொழுக் என்று வந்து கதைக்கு போஷாக்கு ஊட்டுவதில் கில்லாடியாய் இருக்கிறார். சதீஷ் நிறைய பேசி கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.

படம் முழுக்க நிறைய பிராப்பர்ட்டியும், சீன்களும் இருந்தாலும் இயக்குனர் சந்தோஷ் முழுக்க முழுக்க கல்லூரி இளைஞர்களை கவரும் நோக்கில் கவுச்சியான வசனங்களை நம்பியே படத்தை நகர்த்தி இருக்கிறார். அத்துடன் படமெங்கும் வாட் சப் சாமியாரின் குரலில் வசனங்களை கொடுத்து படம் பார்ப்பவர்கள் பல்ஸை பிடித்து அப்ளாஸ் வாங்குகிறார். இதே இயக்குநர் படம் ரிலீஸூக்கு முன்னால் கொடுத்த ஒரு பேட்டியின் போது, ‘விமர்சனம் எப்படி வந்தாலும் பரவா இல்லை’ என்று சொல்லி அடுத்த படமான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற டைட்டிலை பார்க்கும் போதுதான் இப்போதே கண்ணை கட்டுகிறது.

மொத்தத்தில் நண்பர்களோட போய் இந்த படத்தை ஒரு முறைப் பார்த்தால் சகல நண்பர்களுக்கும் சிரிப்புடன் ஏதாவது ஒரு பிளாஷ் பேக் வந்து போகும் என்பதுதான் நிஜம்.

மார்க் 5 / 2.75

error: Content is protected !!