December 9, 2022

தாமஸ் ஆல்வா எடிசன் பர்த் டே டுடே!

தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 11 ஆம் தேதி ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். அப்பா சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புக்குக் காரணமாகவும் இருந்தது!

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் நான்கு வயது வரை அந்தக் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. ஏழு வயதில் ஒற்றையாசிரியர் பள்ளியில் சேர்க்கப்பட்டபோது ‘மண்டு’ என்றும் ‘மூளை வளர்ச்சி இல்லாதவன்’ என்றும் ஆசிரியரால் வசைபாடப்பட்டான். கவனக்குறைவு நோய்க்குறியினால் பாதிக்கப்பட்டவன் (ADHD -attention deficithyperactivity disorder) என்று சொன்னார்கள். காதுகேளாதவன். தன் பெயரையே ஒரு சமயம் மறந்தவன். இப்படிப்பட்ட குழந்தை தானே கற்பித்துக்கொண்டு உலகம் முழுவதும் 2,332 காப்புரிமைகளைப் பெற்றான் என்றால் நம்பமுடிகிறதா? ஆம், இருபதாம் நூற்றாண்டின் தலையெழுத்தை மாற்றியமைத்த மிகப்பெரும் அறிவியல் விஞ்ஞானி ‘தாமஸ் ஆல்வா எடிசன்’ தான் இத்தனை குறைபாடுகளுக்கு ஆளான அந்தக் குழந்தை. இத்தனை குறைபாடுகளையும் தாண்டி வென்றவர் எடிசன்.

இன்றையக் காலக் கட்டத்தில் பிடிவாத குணம் இல்லாத குழந்தைகளே இல்லை எனலாம். குழந்தைகள் எதற்கெல்லாம் பிடிவாதம் செய்வாங்க? தங்களுக்குப் பிடித்த சாப்பிடும் பொருள்கள், விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுக்கலை என்றால் பிடிவாதம் செய்வர். அல்லது தாங்கள் விரும்பும் கடற்கரை, பொருட்காட்சி, மிருகக் காட்சிசாலை… போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லவில்லை யெனில் பிடிவாதம் செய்வர். மேலும், தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பள்ளியில் விடுமுறை நாள்கள் வரும்போது அழைத்துப் போகச் சொல்லி விடாமுயற்சியுடன் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பர். இதைக் கவனத்தில் கொண்டு குழந்தைகள் தங்களுடைய பிடிவாத குணத்தையும் விடாமுயற்சியையும் படிப்பிலும், பிற திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் காட்ட வேண்டும். இப்படி, பிடிவாத குணத்தினாலும் விடாமுயற்சியினாலும்தான் இன்றைக்கும் உலகம் புகழும் அறிஞராக _ பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்பவரே தாமஸ் ஆல்வா எடிசன்.

சிறு வயது முதலே யார் எதைச் சொன்னாலும் அப்படியே நம்பிவிடமாட்டார், எந்த விஷயமானாலும் அதை ஆய்ந்து கண்கூடத் தெரிந்து கொண்டால் தான் நம்புவார். அப்படி ஒரு நாள், குஞ்சு பொறிப்பதற்காக வாத்து முட்டையை அடைகாப்பதைப் பார்த்தார். அடைகாப்பதினால் தான் குஞ்சு பொறிக்கிறதா என எடிசனுக்கு ஐயம் எழ, ஆய்ந்தே அதைத் தெரிந்து கொள்ளலாம் எனத் தானே முட்டை மீது குஞ்சு பொறிக்கும் வரை அடைகாக்க உட்கார்ந்தாராம். இந்தச் சம்பவம் நடை பெற்ற போது எடிசனுக்கு ஐந்து வயதுதான். இந்த ஆய்ந்தறியும் தன்மைதான் பிற்காலத்தில் பிரபல புகைப்படக்காரரான மைப்ரிட்ஜ் “இயங்கும் படமெடுப்பது சாத்தியம் அன்று!” என்று சொன்ன போது ஆய்வில் இறங்கி கைனடாஸ்கோப்பை கண்டறிய உதவியது.

எடிசன் ஓர் ஆய்வினைத் தொடங்கிவிட்டால், அதன் முடிவைக் கண்டறியும்வரை ஓய்வே எடுக்க மாட்டார். ஒரு நாள், எடிசனின் சோதனைச்சாலையில் அவரது உதவியாளர்கள் இசைத்தட்டு ஒன்றினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்று இரவுக்குள் இசைத் தட்டினை உருவாக்கிவிட வேண்டும் என உதவியாளர்களுக்கு எடிசன் கூறியிருந்தார்.

உதவியாளர்களுள் ஒருவர் கிராமபோன் இசைத்தட்டினைத் தயாரிப்பதற்காக மெழுகு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பலமுறை முயற்சி செய்தும் மெழுகினைப் பக்குவமான தேவையான பதத்தில் தயார் செய்ய அவரால் முடியவில்லை. எரிச்சலும் வெறுப்பும் அடைந்தார். எடிசனிடம் சென்று, பலமுறை முயன்றும் மெழுகு சரியான பதத்தில் வரவில்லை. நாம் செய்த செயல்முறையின் அடிப்படையில் ஏதோ ஓர் தவறு உள்ளது. ஆகையால், அதனை முதலில் சரிசெய்ய வேண்டும். இன்றைய ஆய்வினை இத்துடன் நிறுத்தி விடலாம். நாளை புதிதாக முயற்சி செய்யலாம் என்றார்.

எடிசன் கோபத்துடன், மெழுகு சரியான பதத்தில் வரவில்லையெனில், அதற்குரிய செய்முறையை மாற்றி திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். தாங்கள் சரியாகச் செய்யாமல் அடிப்படையில் தவறு என்று இன்னொன்றின் மீது குறையைச் சுமத்தக் கூடாது. திரும்பத் திரும்பச் செய்வதுதான் வெற்றிக்கு வழியே தவிர, பாதியில் விட்டுவிட்டு ஓடுவது வெற்றிக்கு வழிவகுக்காது என்றார்.

ஒரு முறை, விஞ்ஞானிகளுக்கு வேண்டிய தகுதிகள்பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எடிசன் என்ன பதில் கூறினார் தெரியுமா?

ஒரே நேரத்தில் நான் எந்த விசயத்தையும் கண்டுபிடித்ததில்லை. பல காலம் இடைவிடாமல் தொடர்ந்து செய்த முயற்சிகளின் விளைவுதான் என் வெற்றிகள். இதில் அதிர்ஷ்டம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. விஞ்ஞானிகளில் சிலர் ஓரிரு சோதனைகளைச் செய்து பார்த்துவிட்டு நிறுத்தி விடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நான் விரும்பியதை அடையும்-வரை நான் மேற்கொண்ட சோதனையை இடையில் நிறுத்தியதே இல்லை. 100 முறை தோல்வியடைந்த ஒருவர் 101 ஆவது முறை வெற்றியடைந்துவிட முடியும் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை. எனக்கு அபாரமான அறிவும் ஆற்றலும் இருப்பதால்தான் நான் வெற்றி பெறுவதாகச் சிலர் சொல்கிறார்கள். அது என் நண்பர்கள் கூறும் புகழ்ச்சி உரையே தவிர அதில் உண்மையில்லை. விடா முயற்சியுடன் தொடர்ந்து பாடுபடுபவர்-களும் என்னைவிடச் சிறப்பான வெற்றிகளைப் பெற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

ஆம்.. விடாமுயற்சி என்னும் சொல்லுக்கு இவரைத் தவிர சிறந்த உதாரணம் யாராகவும் இருக்க முடியாது. மின்விளக்கு நீண்ட நேரம் எரிய எந்த மின்னிழை ஏதுவானதாக இருக்கும் எனக் கண்டறிய கிட்டத்தட்ட 5,000 த்திற்கும் மேற்பட்ட மின்னிழைகளை பரிசோதனைக்கு உட்படுத்தினார். 5000 இழைகள் மின்விளக்கிற்குப் பொருந்தாமல் போனபோதும் கூட மனந்தளராமல் விடாமுயற்சியோடு சரியான மின்னிழையை கண்டறிந்தார். இந்தச் சம்பவம் கூட சில பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் சேம மின்கலத்தை கண்டுபிடிக்க முனைந்தபோது, சரியான நேர்மறை மின்தகட்டை கண்டுபிடிக்கும்முன் ஐம்பதாயிரம் (50,000) பொருள்களை ஆராய்ந்து எடிசன் தோல்வியுற்றிருக்கிறார். ஆனால் அவரோ “நான் ஐம்பதாயிரம் முறை தோற்கவில்லை, ஐம்பதாயிரம் பொருள்கள் இதற்கு உதவாது என்று கண்டறிந்து வெற்றியடைந்துள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.

தன்னுடைய 84-வது வயதில் 1931 அக்டோபர் 18-ந் தேதி நியூ ஜெர்சி மாகாணத்தில் வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அப்போதைய அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்டோபர் 21-ந் தேதி மாலை அமெரிக்கா முழுவதும் ஒரு நிமிடத்திற்கு மின் விளக்குகளை நிறுத்தும்படி ஆணையிட்டார். அந்த ஒரு நிமிடம் நாட்டில் உள்ளோர் அனைவரும் எடிசனையும் அவரது கண்டுபிடிப்புகளையும் அமைதியாய் நினைவு கூர்ந்தனர்.

அபேர்ப்பட்ட எடிசனின் பிறந்த நாளான இன்று மாலை வீட்டில் ஒளியேற்றும் போது அவரை நினைத்துக் கொள்வோமா?.

ரெங்கராஜன்