September 20, 2021

இந்தியாவில் இப்போதும் பாதி பெண்களுக்கு பால்ய விவாகம்தான் நடக்குது! – ஐ.நா ரிப்போர்ட்!

இந்தியாவின் குழந்தைகள் திருமணத்தடைச்சட்டம் உள்ளது, அந்த தடைச்சட்டத்தை மீறியவர்களுக்கு -பெற்றோர் உட்பட- சிறைத் தண்டனையை அளிக்கிறது. மேலும் குழந்தை திருமணத்தையும், கட்டாய அல்லது வற்புறுத்தி செய்யப்படும் திருமணத்தையும் மனிதவுரிமை மீறல்களாக வரையறுக்கிறது ஐக்கியநாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையத்தின் தீர்மானம்.

child marrage july 10

அதாவது நம் இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த,1891ம் ஆண்டு பெண்ணுக்கு, குறைந்தபட்ச திருமண வயது, 12 என ஆங்கிலேய அரசு சட்டம் இயற்றியது. உடபே இது மரபுக்கு எதிரானது என மக்கள் எதிர்த்தனர். 1929ம் ஆண்டு, பெண்ணுக்கு ,15 வயது, ஆணுக்கு, 18 வயது என்ற நிலை வந்தது. ஆனால், அந்த சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. 1948ல், இந்தியாவில் பெண் சுயமாகவும், சுதந்திரமாகவும் சிந்தித்து தன் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய உரிமை உள்ளது என்ற சட்டம் வந்தது. 1955ல் இந்து திருமணச் சட்டம் மற்றும் மனவிலக்கு(விவகாரத்து) சட்டம் கொண்டு வரப்பட்டது. திருமணம் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டது. பலதார மணம் சட்டத்துக்கு புறம்பானது என அறிவிக்கப்பட்டது. 1978ல் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில், திருத்தம் செய்து பெண்ணுக்கு திருமண வயது, 18, ஆணுக்கு, 21 என்ற நடைமுறை வந்தது. இச்சட்டங்கள் இருந்தபோதும், 50 சதவீதத்துக்கு மேல், 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் நடப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உலகம் முழுவதும் செய்து வைக்கப்படும் பால்ய விவாகத்தில் மூன்றில் ஒரு பகுதி, இந்தியாவில் நடைபெறுகிறதாம். இத்தனைக்கும் இவ்வகை திருமணங்களால், பெண்ணுக்கு கல்வி தடைபடும், தன்னம்பிக்கை குறையும், அடிக்கடி கருவுறுதல், கருக்கலைவால் சத்து பற்றாக்குறை, இளம் வயதில் கர்ப்பப்பை முழு வளர்ச்சியில்லாதது, பிரசவத்தின்போது தாய், சேய் மரணமடையும், எடை குறைவாக, ஊனமுற்று குழந்தை பிறக்கும், ரத்தசோகை, உடல், மனம் பலவீனமடையும், நோய் மற்றும் வறுமைக்கு வழிவகுக்கும். குடும்பத்தை வழிநடத்த முடியாமல், குழந்தைகள் பணிக்கு செல்லும் நிலை ஏற்படும். குடும்ப பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல், தற்கொலைக்கு ஆளாகிவிடுவர். அவர்களதுகுழந்தைகள் அநாதைகளாக சாலையில் திரியும் நிலையை உருவாக்கும் என்றெல்லாம் எடுத்துரைக்கப்படுகிறது.

ஆனாலும், ‘இந்திய பெண்களில் பாதி பேர், 18 வயது எட்டுவதற்கு முன்பாகவே திருமணம் செய்துவைக்கப்படுகின்றனர்’ என்று ஐநாவின் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது.ஜூலை 11-ம் தேதி சர்வதேச மக்கள்தொகை தினம். இதையொட்டி டெல்லியில் உள்ள ஐநாவின் மக்கள்தொகை நிதியம் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய மக்கள்தொகையில், 10 முதல் 19 வயதுடைய இளம் பருவத்தினர், 21 சதவீதம் பேர் உள்ளனர். இந்த பருவத்தினரில் 48 சதவீதம் (11.5 கோடி) பேர் பெண்கள். வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பல்வேறு அறிகுறிகள் தென்பட்டாலும் சில பிரச்னைகள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, இளம்பருவத்தில் பெண்கள் தங்களின் முழு திறனை வெளிப்படுத்தி உயர்நிலையை அடைய அனுமதிக்கப்படுவதில்லை.

15 முதல் 19 வயதுடைய பெண்களில் 14 சதவீதம் பேர் இன்னமும் கல்வியறிவு பெறாதவர்களாக உள்ளனர். மேலும், 73 சதவீதம் பேர் 10 ஆண்டு கல்விப் படிப்புக்கு மேல் செல்லாதவர்களாக உள்ளனர்.அதேபோல் இந்திய பெண்களில் பாதிபேர் 18 வயதை எட்டும் முன்பே திருமணம் செய்தவர்களாக இருக்கின்றனர். அதாவது, உலகம் முழுவதும் நடக்கும் பால்ய விவாகத்தில், மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் நடக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போல் குழந்தை திருமணம் நடப்பது உங்களுக்கு தெரியவந்தால், தங்கள் பகுதியில் உள்ள வி.ஏ.ஓ., பஞ்சாயத்து தலைவர், போலீஸ், சமூக நல அலுவலர், மாஜிஸ்திரேட், குழந்தைகள் நல உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம், புகார் தெரிவிக்கலாம். இளைஞர்கள் சமூக சேவையாக கருதி, கிராமப்புறங்களில், கல்வியறிவற்ற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். யார், யாருக்கு காப்பு…: குழந்தை திருமணத்தை நடத்திய இரு தரப்பு பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் மாப்பிள்ளை, திருமணத்தை நடத்தும் புரோகிதர், பூசாரி, நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள், நண்பர்கள், அக்கம், பக்கத்தினர், முன்னின்று நடத்தும் சமுதாய தலைவர்கள், நிச்சயித்த நபர்கள், அமைப்புகள், புரோக்கர்கள், சமையலர் மற்றும் பணியாளர்கள் ஆகிய அனைவரும், குழந்தை திருமண தடைச்சட்டம், 2006ன்படி குற்றம் புரிந்தவர்களாக கருதப்படுவர். தவறு புரிந்தவர்களுக்கு, இரண்டு ஆண்டு ஜாமினில் வெளியில் வர முடியாத கடுங்காவல் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப ஒன்றோ அல்லது இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும். மேலும், குழந்தை திருமணம் ரத்து செய்யப்பட்டு, சட்டப்படி அத்திருமணம் செல்லாது என அறிவிக்கப்படும்.