November 28, 2022

ஷேவிங் பண்ண 100 ரூபாய் : முடி வெட்ட 160 ரூபாய் : ஜனவரி முதல் அமல்!

ஜனவரி 1 ஆம் தேதி முதல் சலூன் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் (முடிதிருத்தும் தொழிலாளர்கள்) தெரிவித்துள்ளது.

இப்போதெல்லாம் சலூன் கடைகள் எல்லாம் ஆண்கள் அழகு நிலையங்கள் என்று பெயர் மாறி விட்டன. அப்படி சலூன் கடை என்பதை “மென் பியூட்டி பார்லர் (Men Beauty Parlour) என மாற்றியது கூட உலகமயமாக்கலின் ஒரு விளைவுதான். எந்த கடையில் முடி வெட்டிக் கொண்டாலும் சிறுவயதில் முடிவெட்டிக்கொண்ட அனுபவங்கள் அவ்வப்போது கண்முன்னே வந்துவிட்டு செல்லும். பொதுவாக ஆண்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த சலூன் கடை அனுபவங்கள் கிட்டத்தட்ட அனேகம்பேரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத சில விசயங்களை கொண்டிருக்கும்.

முன்னொரு காலத்தில் சலூனில் எந்தத் திசையில் திரும்பினாலும் அந்தப் பக்கமே நம் தலையைச் சில நிமிடங்கள் அசையாமல் இருக்கும்படி செய்ய நடிகைகளின் படங்கள் அன்று ஒட்டப்பட்டு இருக்கும். முடி வெட்ட வந்தவர்களும் மெய்மறந்த நிலையில் அந்தப் படங்களில் லயித்துச் சிலையாகச் சில நிமிடங்கள் இருப்பார்கள். இன்று நடிகைகளுக்குப் பதில் பல அழகு சாதனப் பொருட்களை ஏந்தியபடி அயல் நாட்டு விளம்பர மாடல்கள் சலூன் சுவர்களில் செயற்கையாகச் சிரிக்கிறார்கள்.

அன்றைய நாட்களைப் போல் இன்று சலூன்களில் நாம் வியர்வையின் பிசு பிசுப்பை உணர முடிவ தில்லை. ஒரு வேளை நாம் அண்ச்டார்டிகாவில் இருக்கிறோமோ என்று நினைக்கும் அளவுக்குப் பல கடைகள் குளிரில் உறைய வைக்கின்றன. 1980-90-களில் என்ன ஸ்டைல் சொன்னாலும் முடி திருத்துபவர் முடியாது என்று சொல்லாமல், அதை ஒரு சவாலாக ஏற்று முடி வெட்டுவார்கள். கண்ணாடியைப் பார்க்கும்போதுதான், நாம் சொன்னதற்கும் அவர்கள் வெட்டி யதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பது தெரியும். அது தனி சோகக் கதை, பாஸ். ‘அட்டக்கத்தி’ தினேஷ் போன்று கைக்குட்டையால் தலையை மறைத்துக்கொண்டு ஆற்றாமையுடன் திரிந்தவர்கள் அன்று ஏராளம்.

இன்று அப்படியில்லை. சுருட்டை முடியை நேராக மாற்றுகிறார்கள். நேரான முடியைச் சுருட்டை முடியாக்குகிறார்கள். கறுப்பு முடியை பான்ப்ராக் எச்சிலில் முக்கி எடுத்த நிறத்தில் மாற்றுகிறார் கள். பாதி மொட்டை, பின் தலை மொட்டை, பக்கவாட்டு மொட்டை என விதவிதமாக இன்று மொட்டையடிக்கிறார்கள்.

அன்றைய நாட்களில், முடி திருத்துபவர்களுடன் இளைஞர்கள் பேசாத விஷயமே கிடையாது. முடி திருத்துபவர்களுக்கும் தெரியாத ரகசியமே கிடையாது. பெரும்பாலும் அவர்களே அன்றைய இளைஞர்களுக்குக் காதல் குருவாகவும் வாழ்க்கை வழிகாட்டியாகவும் இருந்தார்கள். எல்லா வயதினருடன் அவர்கள் நட்பு பாராட்டியது வியப்புக்குரியதே. சில வருடங்களுக்கு முன்பு வந்த ‘சென்னை-28’ படத்தில் சித்திரித்தது போன்ற நட்பை அன்று முடி திருத்துபவர்களுடன் இளைஞர்கள் கொண்டிருந்தனர்.

இன்று அவர்களுடன் வெறுமனே பேசுவதே பெரிய விஷயம்தான். இன்று பெரும்பாலும் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவரே முடி திருத்துபவராக இருப்பதால், எப்படி முடி வெட்ட வேண்டும் என்பதைக்கூட சைகையால் உணர்த்தி, வேலைக்காரன் ரஜினியைப் போன்று ‘யெஸ்’, ‘நோ’ என்று சொல்லும் நிலையே உள்ளது. இறுதியில் பில்லைப் பார்த்து வாய்விட்டுத் திட்டக்கூட முடியாமல் வார்த்தைகளோடு சேர்த்து கோபத்தையும் விழுங்கிக்கொண்டு செல்லும் நிலை சோகமானதே.

அது மட்டுமின்றி பொதுவாக சலூன் கடைகளில் பதின்வயது முகப்பருக்கள் நிரம்பிய இளவட்டங் களின் கூட்டம் எப்போதும் இருக்கும், திருட்டு தம், லவ்லெட்டர், மற்றும் பல உலகவிசயங்கள்(?) பறிமாறிக்கொள்ளப்படும் ஆண்களின் அந்தரங்க ஸ்தலமாகவும் இருக்கும். நிமிடத்திற்கொரு முறை கண்ணாடியைப்பார்த்து தலைவாரிக்கொண்டும், திருமுகத்தை கண்ணாடிக்குப்பக்கத்தில் கண்ணாடியே பயப்படும் வகையில் நின்று ரசிப்பதும் என சலூன் கடை கண்ணாடிகள் மட்டும் எப்போதும் ஓய்வ்வில்லாமல் வேலைசெய்துகொண்டிருக்கும். தினத்தந்தியை ஓசியில் படிக்கும் சிலரும் அவ்வப்போது வந்துப் போவார்கள்.

அப்படி மாறி விட்டாலும் மருத்துவர் சமூக நலச்சங்கம் (முடிதிருத்தும் தொழிலாளர்கள்) என்ற பெயரில் இயங்கும் சலூன் கடை நிர்வாகிகள் கூட்டம் சென்னை அண்ணா நகரிலுள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் அழகு சாதன பொருட்களின் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் முடி வெட்டுதலுக்கான கட்டணம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி முடிதிருத்தல்(முடி வெட்டுதல்) மற்றும் முகமழித்தல் (ஷேவிங்) கட்டணம் ரூ.220, முடி வெட்டுதல் மட்டும் ரூ.160, ஷேவிங் மட்டும் ரூ.100, ஸ்பெஷல் ஷேவிங் ரூ.120, சிறுவர்கள் முடி வெட்டுதல் ரூ.130, சிறுமி முடி வெட்டுதல் ரூ.140, தாடி ஒதுக்குதல் ரூ.120, தலை கழுவுதல் ரூ.100, முடி உலர்த்துதல் ரூ.100, தலை ஆயில் மசாஜ் ரூ.300 முதல், வெள்ளை முடி கருப்பாக்குதல்(டை) ரூ.350 முதல், பேஸ் பிளிச்சிங் ரூ.500 முதல், பேஷியல் ரூ.1,200 முதல் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை வரும் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் அறிவித்துள்ளது.