குட்கா ஊழல் புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்!
குட்கா ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு உள்ளது. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் மற்றும் சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு வாய் புற்றுநோய், இதயக் கோளாறு உள்ளிட்ட பல கொடிய நோய்கள் அதிகரித்தது. இதையடுத்து கடந்த 2013 மே 8ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் குட்காவுக்கு தடை விதித்து முதல்வர் அறிவித்தார். ஆனால் இந்த உத்தரவு 2 ஆண்டுகள் கழித்துதான் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த காலதாமதத்திற்கு காரணம் குட்கா தயாரிப்பாளர்களுடன் அதிகாரிகள் சேர்ந்துகொண்டு சட்டவிரோதமாக குட்கா மற்றும் பான் மசாலா விற்பனைக்கு உதவியதுதான் என்று பின்னர் தெரிய வந்தது.
அதிலும் இந்த விவகாரம் எம்டிஎம் என்ற குட்கா நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் மேற்கொண்ட சோதனையில்தான் தெரிய வந்தது. அந்த ரெய்டில் அந்நிறுவனத்தின் கணக்கு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ஆவணங்களில், எம்டிஎம் குட்கா நிறுவனம் தனது புைகயிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தொந்தரவு செய்யாமலிருக்க யாருக் கெல்லாம் லஞ்சம் கொடுத்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு தரப்பட்ட லஞ்சத் தொகை குறித்து அந்த ஆவணங்களில் தேதி வாரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் கமிஷனர் என பெயர்கள் இருந்தன். மேலும், உதவிக் கமிஷனர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், மத்திய கலால்துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஒவ்வொரு மாதமும் லட்சக் கணக்கில் லஞ்சம் கொடுக்கப் பட்டுள்ளதாக எந்தெந்த தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்துமாறு வருமானவரித் துறை முதன்மை இயக்குநர் பாலகிருஷ்ணன், தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு உள்துறை செயலாளர் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகத்திற்கு கடந்த ஜனவரி 23ம் தேதி கடிதம் எழுதினார். ஆனால், அதன் மீது உரிய விசாரணை நடத்தப்படவில்லை
இந்நிலையில் குட்கா முறைகேடு விவகாரத்தில் முறையாக விசாரணைக்கு சிபிஐ விசாரணை தேவை என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வு முன் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் அரசு தரப்பு, வருமான வரித்துறை தரப்பு, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு, உணவுப் பாதுகாப்புத்துறை தரப்பு, திமுக தரப்பு என பலரும் வாதங்களை எடுத்து வைத்தனர்.
சிபிஐ விசாரணை கேட்டு திமுக தரப்பில் வாதம் வைக்க, வருமான வரித்துறை தரப்பும் அதற்கு ஆதரவாக வாதத்தை வைத்தது. சிபிஐ தரப்பு விசாரணை கூடவே கூடாது என அரசு தரப்பு, லஞ்ச ஒழிப்புத்துறை, உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் கடும் வாதங்கள் வைக்கப்பட்டன.
அப்போது நடந்த வாத விபர சுருக்கம் இதோ:
அரசு தரப்பு வாதம்:
“அரசு தரப்பில் குட்கா ஊழல் தொடர்பான மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதில் சிபிஐ விசாரணை தேவையில்லை. மாநில போலீஸாரின் ஒத்துழைப்பு இல்லாமல் சிபிஐ தன்னிச்சையாக விசாரணை நடத்துவது மிகவும் கடினம். வேண்டுமென்றால் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசாரணையை நேரடியாக கண்காணிக்கலாம்”
மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர் தரப்பு வாதம்:
“குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. புகையிலைப் பொருட்களின் தடையை முறையாக அமல்படுத்தி வருகிறோம். அதையும் மீறி விற்கப்படும் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை உடனுக்குடன் பறிமுதல் செய்து அழித்து வருகிறோம். இதுவரை 5 ஆயிரம் டன்னுக்கும் அதிகமாக தடை செய்யப்பட்ட புகையிலை அழிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை”
மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் தரப்பு வாதம்:
“மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது தன்னிச்சையான அமைப்பு. இதன் விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்று வருகிறது. மனுதாரரின் குற்றச்சாட்டிற்கு போது மான ஆதாரங்கள் இல்லை. மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணையில் எந்த தொய்வும் இல்லை; அப்படியிருக்கும்போது சிபிஐ விசாரணை தேவையில்லை. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.
மத்திய கலால் வரி துறை பதில் மனு:
சுகாதாரத் துறை அமைச்சருக்கு எம்.டி.எம். குட்கா உற்பத்தியாளர் 56 லட்சம் பணம் கொடுத்ததை விசாரணையில் ஒப்புக் கொண்டதாகவும், இது தொடர்பாக விசாரணை கோரி முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு அப்போதைய டிஜிபி எழுதிய ரகசிய கடிதத்தின் அசல், அவரது சசிகலா அறை யில் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிமாற்றம் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவைகளையெல்லாம் கேட்ட நீதிபதிகள் அமர்வு, “நீங்கள் 3 பேரும் சிபிஐ விசாரணையை எதிர்ப்பதைப் பார்க்கும்போது, இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்தி இன்னும் ஆழமாக விசாரிக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது” என்று கருத்து தெரிவித்தனர்.
அப்போது மனுதாரர் ஜெ.அன்பழகன் தரப்பு வாதம்:
‘”குட்கா ஊழல் வழக்கை ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுதான் விசாரித்து வருகிறார். அவர் இந்த விசாரணைக்காக தன்னுடைய மேல் அதிகாரியாக டிஜிபி, உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரி களுக்கு எப்படி சம்மன் அனுப்புவார்? அவர்களிடம் பயம் இல்லாமல் ஊழல் குறித்து எப்படி விசாரணை நடத்துவார்? இந்த ஊழல் வழக்கில் தொடர்புடைய உயர் போலீஸ் அதிகாரிகளைக் காப்பாற்ற, பாதுகாக்க ஊழல் கண்காணிப்பு ஆணையம் நினைக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தும் குட்கா ஊழல் வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துவிட்டது என்று அட்வகேட் ஜெனரல் கூறினார். ஆனால், இந்த வழக்கில் இதுவரை ஒருவரை கூட கைது செய்யவில்லையே? அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’” என்று வாதிடப்பட்டது.
அதே சமயம் , குட்கா வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி மஞ்சுநாதா மாற்றப்பட்டார். இதையடுத்து குட்கா வழக்கின் விசாரணைக்கு மூடு விழா என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், குட்கா வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வழக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
இன்று முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு தீர்ப்பை வழங்கினர். குட்கா முறைகேடு வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர். அவர்கள் தீர்ப்பில் கால நிர்ணயம் அளித்து ஒழிக்கப்பட்ட போதைப் பொருட்கள் மக்கள் உடல்நலத்தை பாதிக்கும் என்பதில் நீதிமன்றம் மிகுந்த அக்கறை கொள்கிறது. தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விவகாரத்தில் நீதிமன்றம் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை மதிக்கிறோம். இந்த விவகாரத்தில் அனைத்து அரசுத்துறை மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். மேலும் தமிழகம் தாண்டி மற்ற மாநிலங்களும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பதுதான் முறையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.