September 23, 2021

அரியானா ; சாமியார் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று தீர்ப்பு!

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவருக்கான தண்டனை என்னவென்பது வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் குர்மீத். இந்தத் தீர்ப்பு மற்றும் கைது நடவடிக்கை காரணமாக ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களின் பல பகுதிகளில் போலீஸ் மற்றும் துணைராணுவப் படையினர் வன்முறைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

குர்மீத் ராம் ரஹீம் யார்? தேரா சச்சா என்ற அமைப்பின் தற்போதைய தலைவராக இருப்பவர் குர்மீத் சிங் ஆகும். குர்மீத்-க்கு திருமணமாகிய 3 மகள்கள் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். ஒரு கட்டத்தில் குர்மீத் ராம் தன்னையே கடவுளாக சித்தரித்து கொண்டார். குரு கோபிந்த் சிங் போல் உடை அணிந்து நடித்ததால் சீக்கியர்கள் கோபத்திற்கு ஆளானார்.

வழக்கு  விவரம்: பெயரிடப்படாத ஒரு கடிதத்தில் தொடங்கியது இந்த வழக்கு . அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில் அதை எழுதிய சந்யாசினி கூறியது இதுதான். இவரைத் தனது அறைக்கு வருமாறு குர்மீத் ராம் ரஹீம் சிங் கூறினாராம். அங்கு சென்றபோது பாபா படுக்கையில் இருந்தார். அவருக்கு அருகே ஒரு ரிவால்வர் இருந்தது. அப்போது தொலைக்காட்சி யில் ஆபாசப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அந்த சூழலில் தன்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறியிருந்தார் சந்யாசினி. அதற்குப் பின் மூன்று வருடங்களுக்கு மிரட்டலுடன் பாலியல் பலாத்காரம் தொடர்ந்ததாகவும், இந்த அநீதி தன்னைப்போல் மேலும் 35 பெண்களுக்கு நடைபெற்றது என்றும் சொல்லியிருந்தார்.

இதைத் தொடர்ந்து சில மாதங்களில் அந்த ஆசிரமத்தைச் சேர்ந்த ரஞ்சித் சிங் என்பவர் கொலை செய்யப்பட்டார். கடிதம் அனுப்பப்பட்டதற்குப் பின்னணியில் இவர் இருந்திருப்பார் என்ற செய்தி பரவ… பரபரப்பு கூடியது. மேற்படி கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கு நடத்தத் தீர்மானித்தது. இந்த விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்தது. டி.எஸ்.எஸ். அமைப்பை விட்டு விலகியிருந்த 18 சந்யாசினிகளை விசாரித்தது சிபிஐ. அவர்களில் இருவர் தாங்களும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கால் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறினர். ஆசிரமத்தில் நடக்கும் சட்டமீறலான விஷயங்களைக் குறித்து தொடர்ந்து எழுதி வந்த பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி என்பவரும் படுகொலை செய்யப்பட்டார். ஒரு காலத்தில் அந்த அமைப்பின் ஓட்டுநராகப் பணியாற்றிய கட்டா சிங் என்பவரும் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிராக சாட்சியம் கொடுத்தார்.

ராம் ரஹீம் சிங் கைது: அரியானா சி.பி.ஐ. நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ராம் ரஹீம் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்திற்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ராம் ரஹீம் சிங் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்து அரியானா சி.பி.ஐ. நீதிமன்றம் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் பஞ்சாப் ஹரியனா மாநிலங்களில் பதற்றம் நிலவியுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரசனை ஏற்படாமல் இருக்க பஞ்சாப் மாநிலங்களில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதற்றம் நிறைந்ததாக கருதப்படும் பகுதிகளில் ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை அடுத்து செல்போன், இன்டர்நெட் சேவைகள் 72 மணி நேரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு  நடவடிக்கையாக 201 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு குறி்ப்பிடத்தக்கது.